ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்க்காமலே கணவன்-மனைவியாக பெயரளவுக்கு வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் நம்மிடையே உண்டு. பார்த்தால் சண்டை வந்துவிடும் என்று கருதி கணவர் ஒரு ஷிப்டும், மனைவி இன்னொரு ஷிப்டுமாக வேலைக்கு சென்று ஒருவர் வீட்டில் தூங்கி எழும்போது, இன்னொருவர் தூங்குவதற்கு வீட்டிற்கு வந்த நிகழ்வுகளும் உண்டு. இப்படி ஒப்புக்கு சப்பாக வாழ்ந்து வந்த பலர், கொரோனா காரணமாக வீட்டில் ஒன்றாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. ‘அந்த நிலையிலும், அப்படிப்பட்ட தம்பதிகள் இடையே சண்டை நடப்பதாகவும், அது தொடர்பான புகார்கள் அதிகரிப்பதாகவும்’ புள்ளி விபரங்கள் வெளியாகின.
அப்படி மோதிக் கொள்ளும் தம்பதிகள் சண்டையின்றி வாழ, தரப்படுகின்ற ஆலோசனை இது!
திருமண வாழ்க்கையைச் சிதைக்கும் விஷயங்களில் சந்தேகம் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. கணவன், மனைவியை சந்தேகப்படுவது இதிகாச காலம் தொட்டே இருந்து வருகிறது. அது அவர்கள் பிறவி குணம். மனைவி, கணவரை சந்தேகப்படுவதும் சிலர் வாழ்க்கையில் நடந்து வருகிறது. சந்தேகத்திற்குரிய விஷயம் எதுவானாலும் நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது. அப்படியே ஒருவேளை சந்தேகப்பட்டது உண்மை என்றாலும், தவறு நடந்த அந்த சம்பவத்தை மறந்து மீதி காலத்தை இனிமையாக்க முயற்சிப்பதுதான் புத்திசாலித்தனம்.
சில சந்தர்ப்ப சூழல்கள் தம்பதிகளிடையே இருக்கும் நம்பிக்கையைச் சிதறடித்துவிடும். அந்த நேரத்தில் உறுதியாக இருக்க வேண்டும். உண்மையான அன்பு, நம்பிக்கையின் அடித்தளத்தில் உருவாகிறது. அன்பை காப்பாற்றிக் கொள்ள நினைப்பவர்கள் நம்பிக்கையைச் சிதைக்கும் செயலை ஒருபோதும் செய்ய மாட்டார்கள் என்பதை நம்ப வேண்டும். கணவன்- மனைவியை பிரிக்க நினைக்கும் சக்திகள் முதலில் பிரயோகிப்பது நம்பிக்கைக் குலைவு எனும் அஸ்திரத்தைதான். எதேச்சையாக சில தவறுகள் நடக்கலாம். ஆனால் அதுவே எதிர்காலத்தைச் சிதைக்கும் விதமாக இருந்துவிடக்கூடாது.
அவரவர் குடும்பத்தைப் பற்றிய பெருமை ஒவ்வொருவருக்கும் உண்டு. இதுவே அடுத்தவரை குறைசொல்லும் விதமாக அமைந்துவிடக் கூடாது. இதனால் ஏற்படக்கூடிய தாழ்வு மனப்பான்மை ஒருவரை நிம்மதியாக வாழவிடாது. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும்கூட அதை பெரிதுபடுத்திப் பேசிக்கொண்டிருக்கக்கூடாது. ‘இவ்வளவு உயர்ந்த நான் உன்மேல் இருந்த அன்பால் ஏற்றத்தாழ்வு பாராமல் உன்னை திருமணம் செய்து கொண்டேன்’ என்று சொன்னால் அது உண்மையான அன்பாக இருக்காது. அதனால் மனைவியிடம் எழும் மனக்குறை ஏதேனும் ஒரு விதத்தில் வாழ்க்கையை பாதிக்கும்.
கணவன்- மனைவி இருவரிடமும் அவசியம் இருக்க வேண்டியது, நேர்மை. திருமணத்துக்கு முன் இருந்த வாழ்க்கை வேறு. அந்த வாழ்க்கை, அன்றைய தவறுகள் எந்த காரணத்தைக் கொண்டும் நிகழ்காலத்தைப் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏதோ ஒன்றை மூடி மறைப்பது, ஒளிவுமறைவாகச் செய்வது இதெல்லாம் மிகப்பெரிய பிரச்சினையில் கொண்டுபோய் விட்டுவிடும். நேர்மை குறைந்தால் அதைத் தொடர்ந்து அன்பும் குறையும். அதன்பிறகு பேச ஒன்றுமே இல்லை. நேர்மை என்பது இருவருக்கும் இடையிலான ஒரு உறுதியான பிணைப்பு. அந்த பிணைப்பு குலையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
இருவரும் அன்பாக இருந்தாலும் சுற்றியிருக்கும் உறவுகளால் ஏற்படும் பிரச்சினைகள் இருவரையும் மோதவைக்கும். அவரவர் உறவினர்கள் அவரவருக்கு முக்கியம். வாழ்க்கைத்துணையின் உறவினர்களை தம் உறவாக மதிக்கும் மனப்பக்குவம் வராவிட்டாலும் மற்றவர் உறவுகளின் பலவீனங்களை குறைகூறிப் பேச முற்படாதீர்கள். விளைவுகள் விபரீதமாக இருக்கும். உறவினர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதனால் யாரையும் ஒப்பிட்டு பேசி தரம் தாழ்த்த நினைக்காதீர்கள். உறவுகளால் உங்களுக்கு நேரடிப் பாதிப்பு இல்லாவிட்டாலும், கணவன்-மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட இது முக்கிய காரணமாக மாறிவிடக்கூடும். நீங்கள் திருமணப் பந்தத்தை மதிப்பவராக இருந்தால் மற்ற உறவினர்களையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இன்று நாம் அலட்சியப்படுத்தும் உறவுகள் நாளை நம் திருமண வாழ்க்கையை காப்பாற்றக்கூடியவராகவும் இருக்கலாம்.
தங்களிடம் இருக்கும் குணாதிசயங்களை கணவனோ, மனைவியோ உடனடியாக மாற்றிக்கொள்ள முடியாது. மாற்ற அவர்களே முயற்சித்தாலும் அதற்கு கால அவகாசம் தேவை. திருமணத்துக்கு முன்பு அந்தமாதிரியான குறைகள் கண்ணில் படுவதில்லை. ஆனால் திருமணத்துக்குப் பின் ‘நீ மாறினால்தான் உன்னோடு வாழ முடியும்’ என்ற ரீதியில் போய்விட்டால் அங்கே தாம்பத்யம் கேள்விக்குறியாகிவிடும். குறைகளை எடுத்துச்சொல்லி புரியவைத்து, மாறுவதற்கு அவகாசம் கொடுத்து, மனதுக்குப் பாதிப்பு வராத அளவுக்கு பழக்கங்களை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும். எதிலும் சற்று நிதானம் தேவை. வெவ்வேறு கலாசாரத்தைக் கொண்டவர்கள் திருமணம் செய்து கொண்டால் அவரவர் கலாசாரத்தை புரிந்துகொள்ள அதிக காலம் தேவைப்படும். அதற்கு அதிகபட்சமான அன்பு தேவை.
முகத்துக்கு நேரே சொல்லும் குறைகளைவிட முகத்துக்குப் பின் சொல்லும் குறைகளுக்குத்தான் சக்தி அதிகம். அது நிச்சயம் வாழ்க்கை துணையின் மனதைப் புண்படுத்தும். இதனால் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். ஆகவே வாழ்க்கைத்துணை மீது குறை சொல்வதை நிறுத்திவிடுங்கள். குறைகள் என்றுமே நிறை களை உருவாக்காது. அதேநேரத்தில் குறைகளை தொடரவிடவும் கூடாது. நேரடியாக எடுத்து சொல்லி குறைகளைப் போக்க முயற்சி செய்யுங்கள். நாளடைவில் குறைகள் நீங்கலாம். வாழ்க்கையில் நிறைவு பெறலாம். காற்று அனுசரணையாக இருந்தால்தான் காற்றாடி வானில் பறந்து வட்டமடிக்கும். அன்பும் அப்படித்தான். அதுதான் திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக்க உதவும்.
வீட்டில் நடக்கும் பிரச்சினைகளை மூன்றாவது மனிதர்கள் மூலம் தீர்க்க முயற்சிக்கும் தம்பதிகள் கொஞ்சம் யோசிக்க வேண்டும். உங்கள் பிரச்சினைகளை நீங்களே புரிந்துகொள்ள முடியாதபோது, மூன்றாவது மனிதர்கள் எப்படி உங்களுக்குத் தீர்வு சொல்ல முடியும்? அது வேறொரு புதுமாதிரியான பிரச்சினையை உருவாக்கிவிடும். மேலும் அது கவுரவப் பிரச்சினையும் கூட! உங்கள் வீட்டு கவுரவத்தை அடமானம் வைத்து தீர்வு தேடிக்கொள்ள முற்படாதீர்கள். மூன்றாவது மனிதரின் தலையீடு உங்கள் இருவரையும் பிரித்துவிடும். இவைகளை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு, குறைகளை நீக்கி புதிய வாழ்க்கை வாழ முன் வாருங்கள். இந்த காலகட்டம் அதற்கு துணைபுரியும்.