ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

பெண்கள் விரும்பும் ‘லெக்கிங்ஸ்’….ஏற்படுத்தும் விளைவுகள்…

‘ஏன்.. எப்போது பார்த்தாலும் ‘லெக்கிங்ஸ் அணிந்து வருகிறாய்?’ என்று சில பெண்களிடம் கேட்டால், ‘என் ‘வார்ட்ரோப்’பில் லெக்கிங்ஸ் மட்டுமே இருக்கிறது’ என்று பதில் சொல்லும் நிலை இருந்து கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு ‘லெக்கிங்ஸ்’ பெண்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை இளம் பெண்களிடம் மட்டுமே மவுசு பெற்றிருந்த இந்த ஆடை, தற்போது நடுத்தர வயது பெண்களின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டுவிடுகிறது.

லெக்கிங்ஸ் மேற்கத்திய நாட்டு பெண்களின் விருப்ப உடை. வருடத்தின் பெரும்பகுதி நாட்களை குளிரில் செலவிடும் அவர்கள் தங்கள் சருமத்தில் சூட்டை தக்கவைத்துக் கொள்வதற்காக லெக்கிங்சை அணிந்து வருகிறார்கள். உடற்பயிற்சிக்கும் அது ஏற்ற உடையாக கருதப்பட்டதால், எல்லா நாட்டு பெண்களும் அதனை விரும்பத் தொடங்கியதோடு எல்லா காலநிலையிலும், எப்போதும் அணிந்துகொண்டிருக்கிறார்கள். உடலோடு ஒட்டி இருப்பதால் பயணத்திற்கு ஏற்றதாகவும் பெண்கள் இதனை கருதுகிறார்கள். ‘பிட்-இன்-ஷேப்’ என்பது லெக்கிங்சின் அடிப்படையான விஷயமாக இருப்பதால், இளம்பெண்களின் அத்தியாவசிய தேர்வாகிவிட்டது.

கணுக்கால் வரையுள்ள லெக்கிங்ஸ் அதிக அளவில் விற்பனையானாலும், கால்களில் பாதிவரை (அதாவது மூட்டுவரை) உள்ளவைகளும் பெண்களை கவஇரத்தான் செய்கின்றன. ‘ஸ்பான்டெக்ஸ்’, அதாவது ‘லைக்ரா’ என்ற பாலியூரித்தின் இழைகளில் லெக்கிங்ஸ் தயாராகிறது. இது நெகிழ்வுத்தன்மை (எலாஸ்டிக்) கொண்டது. ஐந்து மடங்கு அளவுக்கு நெகிழ்வதோடு மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும். நைலான், காட்டன், சில்க், கம்பளி போன்றவைகளில் ஏதாவது ஒன்றில் ஸ்பான்டெக்ஸ் இழைகளை சேர்த்து லெக்கிங்ஸ் தயாராகிறது.

பெண்களின் கால் வடிவமைப்பை அப்படியே எடுத்துக்காட்டும் தன்மையை அது கொண்டிருப்பதால், அவ்வப்போது ‘லெக்கிங்சை’ சுற்றி கவர்ச்சியான விவாதங்களும் தோன்றுகின்றன. ஆனால் இந்த கோடைகாலத்தில் இதனை உபயோகிப்பது பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை உருவாக்கும் என்பது டாக்டர்களின் கருத்தாக இருக்கிறது.

கோடைகாலத்தில் பெண்களுக்கு அதிகம் வியர்க்கும். வியர்வையை ஓரளவு உறிஞ்சி எடுக்கும் தன்மை லெக்கிங்ஸ்க்கு இருந்தாலும், அது அதிக நேரம் உடலை இறுக்கிக்கொண்டிருப்பது, காற்றை சருமத்தில் புகவிடாமல் தடுத்துவிடுகிறது. இதனால் கால் களின் இடுக்குப்பகுதிகளில் வியர்வை தங்கி, பூஞ்சான் உருவாகும். இத்தகைய ‘பங்கஸ்’க்கு சிகிச்சை அளிக்கும்போது அந்த பகுதியில் காற்று பட வேண்டும் என்பது மிக அவசியமான ஒன்றாகும்.

பெண்கள் கால் இடுக்குப் பகுதியில் ‘பங்கஸ்’ ஏற்படுவதை தவிர்க்க தொடர்ச்சியாக இதனை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது பயன்படுத்தினாலும் பெண்கள் வீட்டிற்கோ, ஆஸ்டலுக்கோ திரும்பிய பிறகாவது சருமத்தில் காற்றுபடும்படியான தளர்வான ஆடைகளை அணியவேண்டும்.

லெக்கிங்ஸ் தனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்று கருதும் பெண்கள், அதனை தேர்ந் தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். பருத்தி இழைகள் சேர்த்தவைகளை தேர்ந்தெடுங்கள். இடுப்பு, பின்பகுதி, கால்கள் போன்றவைகளின் அளவுக்கு தக்கபடியானதை வாங்குவது நல்லது. குண்டான உடல்வாகு கொண்டவர்கள் அதிக இறுக்கம் கொண்ட லெக்கிங்சை அதிக நேரம் பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் நரம்பு இறுக்கம், சரும பாதிப்பு, தசைவலி போன்றவை தோன்றும்.

பெண்களில் சிலர் ஜீன்ஸ் துணியில் தயார் செய்யப்படும் ‘லெக்கிங்ஸ்’ வகையான ‘ஜெக்கிங்ஸ்’ அணிகிறார்கள். முடிந்த அளவு அதனை தவிர்க்கவேண்டும். இது பல்வேறுவிதமான ஆரோக்கிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும். எந்த வகையான ‘லெக்கிங்ஸ்’ ஆக இருந்தாலும் அதனை அடிக்கடி துவைத்து நன்றாக உலரவைத்து, குறிப்பிட்ட நேரம் மட்டும் அணிந்து கொள்ள பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். அதுதான் உங்கள் சருமத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

இறுகிய ஜீன்ஸ் அணிவதும் பெண்களின் உடலுக்கு ஏற்றதல்ல. அது அவர்களது இனப்பெருக்கத்திறனை பாதிக்கும். வியர்வை உறிஞ்சப்படாததால் பூஞ்சை தொற்று ஏற்படுவதும் அதிகரிக்கும். வளரிளம் பருவ பெண்கள் ஜீன்ஸ் அணிந்தால், அது அவர்களது உடல் வளர்ச்சிக்கே கூட பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால் பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ் அணிவதை தவிர்க்க வேண்டும். நாள் முழுவதும் தொடர்ச்சியாக அதை அணிவதை தவிர்ப்பதோடு அவ்வப்போது துவைத்து, உடுத்தவும் பழகிக்கொள்ளுங்கள். ஜீன்ஸ், லெக்கிங்ஸ் இருவகை ஆடை களையும் துவைப்பதிலும் கவனம் தேவை. வாஷிங் மெஷினில் இவைகளை போட்டு துவைக்கும்போது அவைகளில் இருக்கும் சோப் துகள்கள் முழுவதும் நீங்காது. முழுவதும் நீங்காத நிலையில் உள்ள ஆடைகளை உடுத்துவது நல்லதல்ல. அதனால் ஜீன்ஸ், லெக்கிங்ஸ் போன்றவைகளை வாஷிங் மெஷின் அலசிய பின்பு, மீண்டும் வெளியே எடுத்து இருமுறை நன்றாக தண்ணீரில் அலசி, உலர வைத்து பயன்படுத்துங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker