பெண்களுக்கு அழகோடு, ஆரோக்கியத்தையும் சேர்த்து தரும் மருதாணி
இந்தியத் திருமணங்களில் மணப்பெண்களுக்கு பாரம்பரிய முறையில் பதினாறு வகையான அலங்காரங்களை செய்கிறார்கள். அதில் முக்கியமானது மருதாணி அலங்காரம். பெண்கள் மருதாணி அலங்காரம் செய்துகொள்ள எப்போதுமே விரும்புவார்கள். ஏனென்றால் அது அவர்களுக்கு அழகோடு, ஆரோக்கியத்தையும் சேர்த்து தருகிறது. மருதாணி உடலில் பித்தத் தன்மையை கட்டுப்படுத்தி, குளிர்ச்சியை தருகிறது.
பாத்திரங்களை பளிச்சிடவைக்கும் சோப்பு முதல், துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர் வரை எல்லாமுமே தற்போது ரசாயன கலவைகளாக மாறி வருகின்றன. அவைகளால் பெண்களின் கைகளுக்கு ஏற்படும் அனைத்து பாதிப்புகளையும் போக்கும் சக்தி இயற்கையான மருதாணிக்கு இருக்கிறது. கால், கைகளில் ஏற்படும் பித்த வெடிப்பு, தோலுரிதல் போன்றவைகளும் மருதாணியால் மறையும். இத்தகைய மருத்துவ குணங்கள் கொண்ட மருதாணி சுப நிகழ்ச்சிகளில் மங்கள பொருளாகவும் விளங்குகிறது.
மருதாணி அரைத்து கைகளை அழகுபடுத்திக் கொண்டு சில மணி நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால் இன்றைய அவசர யுகத்தில் பெண்கள் அதற்கெல்லாம் நேரம் ஒதுக்குவதில்லை. அதனால் மருதாணி, பெண்களின் பயன்பாட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை உணர்ந்த வியாபாரிகள் அதிலும் ரெடிமேட் வகைகளை கொண்டு வந்துவிட்டார்கள். வைத்ததும் அது காய்ந்துவிடும் என்றாலும், அதில் இயற்கையான மருத்துவ குணம் குறைவு. கிளிட்டர் மருதாணி, நெயில் பாலீஷ் மருதாணி, ஜர்தோசி மருதாணி என்று இப்போது அதற்கு பல பெயர்கள் உண்டு. அவைகளை பயன்படுத்தி கைகளில் அழகிய உருவங்களை வடிவமைக் கிறார்கள். அதன் மூலம் குறுகிய நேரத்திலே அந்த அலங்காரத்தை செய்துமுடித்துவிட முடிகிறது. காய்வதற்காக காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. அழகு நிலையங்களில் விதவிதமான மருதாணிகளை தயார் செய்துவைத்திருக்கிறார்கள். திடீர் விருந்து, விழாக்களுக்கு செல்லும்போது அதனை விருப்பம்போல் பயன் படுத்திக்கொள்ள முடியும்.
ஜர்தோசி எனப்படும் பாரம்பரிய மருதாணியில் தங்கம், வெள்ளி துகள்கள் கலப்பதால் அது பளபளப்பாக காட்சியளிக்கிறது. கிளிட்டர் மருதாணியை உடைக்கு பொருத்தமாகவும் வைத்துக் கொள்ளலாம். பாரம்பரிய மருதாணியால் அழகுபடுத்திக்கொண்டு பின்பு அதற்குமேல் பளபளக்கும் ஜெல், மைக்கா போன்ற பொருட்களை கலந்து பூசி அழகிய வடிவத்தை அலங்காரம் செய்வார்கள். மருதாணியின் புதிய பரிமாணம் கவர்ச்சியாக இருப்பதால், இப்போது பலராலும் இது விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டுள் ளது. இதன் பெருமை வெளிநாடுகளுக்கும் பரவிக்கொண்டிருக்கிறது.
ஹாலிவுட் பிரபலங்களான டேமிமூர், மடோனா, நாவோமி போன்றோர் மருதாணி அலங்காரத்தில் மனதை பறிகொடுத்திருப்பவர்கள். தங்கள் கரங்களில் இந்திய முறைப்படி மருதாணி அலங்காரம் செய்து கொண்டு சர்வதேச விழாக்களில் கலந்துகொண்டு பெருமை சேர்க்கிறார்கள். இந்தி நடிகைகளும் மருதாணி அலங்காரத்தில் பிரியம் கொண்டவர்கள்தான். ‘மை நேம் இஸ் கான்’ என்ற இந்தி சினிமாவில் நடிகை கஜோல் மருதாணி அலங்காரம் செய்திருந்தது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. பாரம்பரிய மருதாணி உள்ளங்கைகளிலும், கால்களில் மட்டுமே வைக்கப்பட்டது. இப்போது தோள் பட்டையிலிருந்து விரல்கள் வரை அலங்கரிக்கப்படுகிறது.
மருதாணிக்காக புதிய டிசைன்களை அழகுக்கலை நிபுணர்கள் உருவாக்குகிறார்கள். பூக்கள், இலை, கொடிகள், பறவைகள், விலங்குகள், அழகிய வாசகங்கள், விருப்பமானவர்களின் பெயர், தேள், டிராகன், பாம்பு போன்றவை அதில் பிரபலமாக இருக்கிறது. இந்த டிசைன்களை போடுவதற்கு தேர்ச்சி பெற்ற கலைஞர்களை அழகு நிலையங்கள் வேலைக்கு அமர்த்தியிருக்கின்றன.
இந்த மருதாணி கலைஞர்களுக்கு வெளிநாடுகளிலும் இப்போது நல்ல மவுசு. வெளிநாடுகளில் நம்ம ஊர் சுத்தமான மருதாணிக்கு தனி செல்வாக்கு உள்ளது. அதன் வாசமும், இயற்கையான வண்ணமும் அவர்களுக்கு நன்றாக பிடித்துப்போய்விட்டது. அதனால் மருதாணியோடு சேர்ந்து மருதாணி கலைஞர்களும் வெளிநாடு செல்கிறார்கள்.
நெயில் பாலீஷ் கலந்த மருதாணியும் இப்போது கிடைக்கிறது. பல வண்ணங்களில், பல டிசைன்களில் அதை நகங்களில் வைத்துக்கொள்ளலாம். பிறகு ரிமூவர் கலந்து அழித்து விடலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவர்கள், மேடை நிகழ்ச்சி செய்பவர்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல் வரவேற்பாளர்கள் போன்றவர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
பல நட்சத்திர ஓட்டல்கள், தங்கள் வாடிக்கையாளர்களை கவர அவர்களுக்கு மருதாணி அலங்காரம் செய்கிறார்கள். பாரம்பரிய அழகு சாதனப் பொருளான மருதாணி இன்று பலவகையில் மாற்றம் அடைந்து பார் முழுவதும் மணக்கிறது. மருதாணி இந்தியாவின் பாரம்பரிய அழகு சாதனப் பொருள் மட்டுமல்ல. பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், துபாய் போன்ற நாடுகளிலும் பிரசித்திப் பெற்றிருக்கிறது.