ஆரோக்கியம்புதியவை

பெண்களின் குடிப்பழக்கத்திற்கு இது தான் காரணம்

மதுப் பழக்கம் பெண்களிடம் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகள் பற்றி அதிர்ச்சிகரமான ஆய்வுத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ‘பெண்களிடம் மது அருந்தும் பழக்கம் அதிகரித்துக்கொண்டிருப்பதாகவும், ஆண்களைவிட பெண்களிடம் மதுவால் ஏற்படும் ஆபத்து உயர்ந்துகொண்டிருப்பதாகவும்’ அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. நெருக்கமானவர்கள் கட்டாயப்படுத்துவதாலோ, கவலையாலோ, ஜாலிக்காகவோ பெண்கள் மது அருந்த தொடங்குவதாக தெரியவருகிறது. பின்பு நெருக்கமான அந்த கூட்டமும், அந்த பழக்கமும் அவர்களது வழக்கமாகிவிடுகிறது. அதன் பாதிப்புகளை உணர்ந்து அதில் இருந்து மீள முயற்சிக்கும் நேரத்தில் ஏராளமான பாட்டில் மது அவர்களது உடலுக்குள் சென்று, வாழ்க்கை கைவிட்டு போகும் சூழ்நிலை உருவாகிவிடுகிறது.

‘கம்யூனிட்டி எகென்ஸ்ட் டிரங்கன் டிரைவிங்’ என்ற அமைப்பு நடத்திய சர்வேயில் ‘இந்திய பெண்களின் மது பயன்பாடு எழு வருடங்களில் 38 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாகவும், அடுத்த ஐந்து வருடங்களில் 25 சதவீதம் வரை அதிகரிக்கும்’ என்றும் குறிப்பிட பட்டிருக்கிறது. ‘எய்ம்ஸ்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை ‘டெல்லியில் 40 சதவீதம் ஆண்களும், 20 சதவீதம் பெண்களும் மது அருந்துபவர்களாக இருக்கிறார்கள்’ என்று கூறுகிறது. அதாவது டெல்லியில் கிட்டத்தட்ட 15 லட்சம் பெண்கள் மது அருந்துவதாக குறிப்பிடுகிறது.

பெண்கள் மது அருந்துவதற்கான காரணங்கள் என்ன என்பதையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘18 முதல் 30 வயதுக்கு உள்பட்ட பெண்களில் 43.7 சதவீதம் பேர் மதுவை ருசித்துப்பார்த்துவிட வேண்டும் என்ற உந்துதலால் அந்த பழக்கத்திற்கு அறிமுகமாகிறார்கள். 31 முதல் 45 வயது வரை உள்ள பெண்களில் 41.3 சதவீதத்தினர் வேலை மற்றும் சமூக நிகழ்வுகளால் மதுப்பழக்கத்தை தொடங்குகிறார்கள். 46 முதல் 60 வயது வரையுள்ள பெண்களில் 39 சதவீதத்தினர் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு விரக்தியான சூழ்நிலைகளால் போதையின் பாதையில் அடியெடுத்து வைக்கிறார்கள்’ என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இதயம் மற்றும் ஈரல் தொடர்புடைய நோய்கள், மனஅழுத்தம், உறக்கமின்மை, குடும்பத்தினரை சந்தேகப்படுதல், வன்முறை எண்ணம் போன்றவை அவர்களிடம் அதிகமாக தோன்றுகிறது. தாய்மையடைய தயாராக இருப்பவர்களும், கர்ப்பிணிகளும் முழுமையாக மது அருந்துவதில் இருந்து விடுபடவேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்குள் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் விரைவாக அவர்களை மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கிவிடும்.

மது அருந்தும் பெண்களின் உடல் குண்டாகிவிடும். பின்பு உடல்பருமன் கொண்டவர்களுக்கு ஏற்படும் பலவிதமான நோய்கள் அவர்களுக்கு ஏற்பட்டு உடலை பலகீனமாக்கிவிடும். புற்றுநோய் உருவாகும் வாய்ப்பும் அவர்களுக்கு அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக மார்பக புற்றுநோயால் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.

கர்ப்பிணிகள் மது அருந்தினால் பிரசவ காலத்தில் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகுவார்கள். பிறக்கும் குழந்தையும் உடல்ரீதியான, மனோரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகும். சிறுநீரக பாதிப்பு, இதயநோய் பாதிப்பு, எலும்பு வளர்ச்சி குறைபாடு போன்றவைகளும் குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்புண்டு.

மது அருந்தும் பழக்கம்கொண்ட பெண்களை அதில் இருந்து மீட்க அவர்களது குடும்பத்தினர் உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அவர்களை மனோதத்துவ கவுன்சலிங்குக்கு உள்ளாக்கி தேவை யான சிகிச்சைகளை வழங்கவேண்டும்.

இது பற்றி மனநல நிபுணர் நீது கூறுகிறார்:

“மது அருந்தும் பழக்கத்தில் இருந்து விடுபட விரும்பி நிறைய பெண்கள் கவுன்சலிங் பெற வருகிறார்கள். அவர்களில் ஒருசிலர்தான் தனியாக வருகிறார்கள். மற்றவர்களை நண்பர்களோ, குடும் பத்தினரோ வற்புறுத்தித்தான் அழைத்து வருகிறார்கள். பெற்றோரிடம் குடிப்பழக்கம் இருந்தால், பிள்ளை களிடமும் வந்துவிடுகிறது. அதுபோல் பெற்றோரால் புறக்கணிக்கப்படும் பெண்களும் மது பழக்கத்திற்கு உள்ளாகிறார்கள். ‘சோஷியல் டிரிங்கிங்’ என்ற பெயரில்தான் பெரும்பாலான பெண்கள் மதுப்பழக்கத்திற்கு அறிமுகமாகிறார்கள். அதுதான் மிக ஆபத்தானதாக இருக்கிறது. பெண்கள் மதுப்பழக்கத்திற்கு தைரியமாக ‘நோ’ சொல்லவேண்டும்” என்கிறார், அவர்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker