தாம்பத்திய சிக்கலுக்கு விஞ்ஞானபூர்வமான தீர்வுகள்
இந்திய திருமணங்கள் புனிதமானவை. அதனால்தான் அவை பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் முக்கியத்துவம் பெற்று திகழ்கின்றன. அது மட்டுமின்றி வெளிநாட்டினரும் இந்திய கலாசார திருமண முறைகளால் கவரப்படுகிறார்கள். வெளிநாட்டு ஆணும், பெண்ணும் இந்திய திருமணமுறைகளை ஏற்று திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வுகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இந்திய திருமண முறைகளில் முதலிரவும் முக்கியத்துவம் பெறுகிறது. வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்கும், எதிர்கால வாழ்க் கைக்கு திட்டமிடுவதற்கும், ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்வதற்கும் அந்த இரவை பயன்படுத்திக்கொள்கிறார்கள். அன்று மனோரீதியாக நெருங்கி, உடல் ரீதியாக நிறைவடைகிறார்கள்.
தாம்பத்திய உறவை மகிழ்ச்சியாக கொண்டாட புதுமண ஜோடிகளுக்கு பாலியல் மருத்துவர்கள் வழங்கும் விஞ்ஞானபூர்வமான ஆலோசனை!
உடல்ரீதியான இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முதலில் புதுமணத் தம்பதிகள் மனோரீதியாக தயாராகவேண்டும். குறிப்பாக பெண்ணின் மனதில் பயமும், பதற்றமும், ஈடுபாடின்மையும் இருந்துகொண்டிருந்தால் உறவை ஆர்வமாக்கும் வழுவழுப்பு திரவம் சுரக்காது. அதனால் பாலுறவு வலி நிறைந்த அனுபவமாகிவிடும். அத்தகைய வலிக்கு சிகிச்சை தேவையில்லை. ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து மனம்விட்டுப்பேசி, முன்விளையாட்டுகளிலும் ஈடுபட்டால் அவர்களாகவே இந்த பிரச்சினையை தீர்த்து, வலியின்றி தாம்பத்ய உறவை மேற்கொள்ளலாம்.
‘வஜைனஸ்மஸ்’ என்ற உறுப்பு இறுக்க பாதிப்பால் புதுப்பெண்கள் தாம்பத்ய உறவை சரிவர மேற்கொள்ள முடியாமல் அவதிப்படுவதுண்டு. அத்தகைய பாதிப்பிற்குள்ளான பெண்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது. ‘வஜைனஸ்மஸ்’ பாதிப்பு இருக்கும் பெண்கள் உறவுக்கு தயாராகும்போது அவர்களது உறுப்பை சுற்றியுள்ள தசைநார்கள் இறுகி சுருங்கி, உறுப்பை மூடும் அளவுக்கு முறுக்கிக்கொள்ளும். அப்போது தாம்பத்யம் செய்யமுடியாது. அதை மீறி கணவன் வலுகட்டாயமாக உறவு கொள்ள முயன்றால் அது பெண்ணுக்கு தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும்.
வஜைனஸ்மஸ் பாதிப்பு ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. உடலுறவை பற்றிய பயம் இருந்தாலும், கடந்த காலத்தில் பாலியல் வன்புணர்வு கொடுமையை அனுபவித்திருந்தாலும், இந்த பாதிப்பு தோன்றும். உடல்ரீதியாக ஆராய்ந்தால், உறுப்பு பகுதியில் வளர்ச்சிக்குறைபாடு கொண்ட பெண்களும் இந்த பாதிப்பிற்கு உள்ளாகுவார்கள். அங்கிருக்கும் காயங்கள், தழும்புகள், கட்டிகள், படைகள் போன்ற வைகளும் வஜைனஸ்மஸ்க்கு காரணம்.
கருப்பை நழுவி கீழ்நோக்கி வந்து துருத்திக்கொண்டிருக்கும் ‘பிரலேப்ஸ் யூட்ரெஸ்’ என்ற பாதிப்பும் உடலுறவை வேதனைக்குரியதாக்கிவிடும். இது தவிர பிறப்பு உறுப்பு அழற்சி, கருப்பைக்கழுத்து அழற்சி, எண்டோமெட்ரியத்தில் ஏற்படும் அழற்சி போன்றவைகளாலும் வஜைனஸ்மஸ் ஏற்படும்.
பெண்களின் தாம்பத்ய ஈடுபாட்டிற்கு கிளர்ச்சி நிலை மிக முக்கியம். ஆனால் தற்போது நிலவிவரும் வேலையின்மை, பொருளாதார சிக்கல் போன்றவைகளால் ‘கிளர்ச்சியின்மை’க்கு உருவாகும் பெண்களின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. கணவனும்- மனைவியும் அந்தரங்கமாக தொட்டு உறவாடவேண்டும். அப்போதுதான் உடலும், மனமும் இன்பத்திற்கு தயாராகும். தயாரானால்தான் உடலில் இயல்பான மாற்றங்கள் உருவாகி கிளர்ச்சி தோன்றும்.
அந்த தருணத்தில் கருப்பைக் கழுத்து மற்றும் உறுப்பு பகுதியில் இருக்கும் சுரப்பிகள் வேலை செய்யத் தொடங்கும். ஈரக்கசிவு தோன்றும். அது கிளர்ச்சியை மேன்மைப்படுத்தி தாம்பத்யத்தில் இணையவைக்கும். பொதுவாகவே ஆண்கள் விரைவாக கிளர்ச்சியடைந்துவிடுவார்கள். பெண்கள், ஆண்களைப்போல் விரைவாக கிளர்ச்சியடைவதில்லை. தனது மனைவியை கிளர்ச்சியடையச் செய்வதும், அவளை திருப்தியடையச் செய்வதும் ஆணின் கடமை. கிளர்ச்சியடையாத பெண்களுக்கு விஞ்ஞானபூர்வமான தீர்வு நவீன பாலியல் மருத்துவத்தில் உள்ளது.