உறவுகள்புதியவை

முதலிரவில் முழுமையான மகிழ்ச்சி கிடைக்க..

திருமணத்திற்கு தயாராக இருக்கும் ஆண்கள்கூட முதலிரவை நினைத்து கொஞ்சம் கலங்கவே செய்கிறார்கள். ‘அது பலருக்கு மோசமான இரவாகி இருக்கிறது’ என்று நண்பர்கள் முன்பு சொன்ன கிளர்ச்சியூட்டும் திகில் கதைகள் எல்லாம், திருமணம் செய்துகொள்ளப்போகும் காலகட்டத்தில் நினைவுக்கு வந்து அவர்களுக்கு மனக்குழப்பத்தை ஏற்படுத்தும். முதல் இரவில் ஏற்படும் கசப்பு சில தம்பதிகளை விவாகரத்து வரை கொண்டு சென்றிருப்பதாகவும் கேள்விப்பட்டு அவர்கள் பெருங்குழப்பத்திற்கு ஆளாகிவிடுவதும் உண்டு.

மணவாழ்க்கையில் இணையும் ஆணும், பெண் ணும் முதலில் எதிர்மறையான சம்பவங்களை நினைத்து மனக்குழப்பம் அடைவதை தவிர்க்கவேண்டும். ‘எல்லாம் நல்லபடியாக நடக்கும்’ என்ற நம்பிக்கையை மனதிற்குள் விதைக்கவேண்டும். தன்னம்பிக்கையும், மனஅமைதியுமே வெற்றிகரமான முதல் இரவுக்கு அடிப்படை தேவை.

திருமணம் என்பது எங்கெங்கோ பிறந்து வளர்ந்த ஆணையும், பெண்ணையும் வாழ்க்கையில் ஒன்றாக இணைக்கிறது. கலாசாரம், பண்பாடு, வளர்ப்பு முறை, பழக்க வழக்கங்கள், நடை உடை பாவனைகள் என எல்லாவற்றிலும் வேறுபட்ட அவர்கள் இருவரும் திருமணத்தின் மூலம் ஒன்று சேர்ந்து இல்லறத்தை ஆரம்பிக்கிறார்கள்.

உடலளவிலும், மனதளவிலும், சுற்றுப்புறத்தை அணுகும் விதத்திலும் மாறுபட்டுக் காணப்படுகிற, வெவ்வேறு குணாதிசயங்களைக்கொண்ட ஆணும், பெண்ணும் இல்லறத்தில் ஒன்றாக இணைவது சாதாரண விஷயம் இல்லை. அந்த இணைப்பு வெற்றிபெற வேண்டும் என்றால், இரண்டு தரப்பிலுமே அபரிமிதமான புரிதலும், அனுசரித்துப்போகும் தன்மையும், அசாத்தியமான பொறுமையும் வேண்டும்.

மனம்விட்டுப் பேசுவதுதான் புரிதலுக்கான எளிய வழி. அப்படிப் பேசுவதற்காகத்தான் ‘சாந்தி முகூர்த்தம்’ என்ற நிகழ்வை ஒரு கலாசாரமாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதனால் கணவனும், மனைவியும் அப்போது மனம்விட்டுப்பேசி இருவரது மனங்களையும் முதலில் இணைக்கவேண்டும். ஆனால் பெரும்பாலான தம்பதிகள் முதலிரவு என்பது கணவனும், மனைவியும் தாம்பத்ய உறவு கொள்வதற்கான இரவு என்று தான் அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால், அவர்களது சிந்தனை முழுவதும் பாலுறவைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கும். திருமணத்தில் ஆணையும் பெண்ணையும் இணைப்பது இனப்பெருக்கம் என்னும் இயற்கையான பாலியல் உணர்ச்சிதான். ஆனால், இந்த உணர்ச்சியை மட்டுமே மையமாக வைத்து இணைந்தவர்கள் முழுமையான இன்பத்தை எட்டுவதில்லை என்ற உண்மை புது மணத்தம்பதிகளுக்கு தாமதமாகத்தான் புரியவரும்.

முதலிரவு அறை என்பது போர்க்களம் இல்லை, அது பூக்களம். புரிந்துகொண்ட தம்பதிகளுக்கு அங்கு தோல்வி ஒருபோதும் இல்லை. எல்லா இரவுகளிலும் வெற்றிதான் அவர்களுக்கு கிடைக்கும். ஒருவரை ஒருவர் உடலாலும் மனதாலும் உணர்ந்துகொண்டு, இருவரும் தங்களுக்கான திருப்தியை தேடி அடைவதில்தான் முதலிரவின் வெற்றி அமைந்திருக்கிறது. அதனால் பயம், பதற்றம், தவறான நம்பிக்கை, தெளிவின்மை, அவநம்பிக்கை, முரட்டுத்தனம் போன்றவைகளை அன்று அறைக்கு வெளியே நிறுத்திவிட்டு நீங்கள் அன்பை மட்டும் மனதில் ஏந்திக்கொண்டு புன்னகையோடு முதலிரவு அறைக்குள் அடியெடுத்து வையுங்கள.் அங்கு இருவருக்குமே சிறந்த புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker