எடிட்டர் சாய்ஸ்புதியவை

ஆண்களுக்கு விதைப்பை வலி, வீக்கத்தை சரிசெய்ய உதவும் கழற்சிக்காய், எப்படி பயன்படுத்தணும்!

கழற்சிக்காய் கழற்சி கொடியில் காய்க்கும் அற்புதமான மூலிகை ஆகும். சாதாரணமாக வேலி ஓரங்களிலும் புதர்பகுதிகளில் இந்த கொடி படர்ந்திருப்பதைப் பார்க்கலாம். இதை கச்சக்காய் என்று வீட்டு பெரியோர்கள் அழைப்பதுண்டு. கழற்சிக்காய் பார்க்க முட்டை வடிவில் இருக்கும்.

இதன் ஓடுகள் கடினமாக இருக்கும். மேல்பகுதி முள்கள் போன்று இருக்கும். இந்த ஓட்டை உடைத்தால் உள்ளே வெள்ளை நிறத்தில் பருப்புகள் இருக்கும். மென்மையாக இருக்கும் இந்த பருப்பை அப்படியே சாப்பிடமுடியாது. அதிக கசப்புத்தன்மை நிறைந்தது இவை. இந்த கொட்டையின் கசப்பான குணங்களே பலவிதமான மருத்துவ நன்மைகளை அள்ளித்தருகிறது. இது குறித்து தெரிந்துகொள்வோம்.

​பெண்களின் கர்ப்பப்பை காவலன்

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு முக்கிய காரணமே கர்ப்பப்பையில் உண்டாகும் நீர்க்கட்டிகள் தான். இதை சரிசெய்யாவிட்டால் கருத்தரித்தல் வரை பிரச்சனையை உண்டாக்கிவிடும். இதை பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் என்று அழைக்கிறார்கள்.

இந்நோயை குணப்படுத்த கழற்சிக்காய் உதவுகிறது. கழற்சிக்காய் சூரணம் நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும் அதை வாங்கி தினமும் 5 கிராம் அளவு எடுத்து மோரில் கலந்து காலையிலும் மாலையிலும் இரண்டு வேளை கலந்து குடித்து வந்தால் விரைவில் மாற்றம் தெரியும். தொடர்ந்து 48 நாட்கள் இதை குடித்து வந்தால் சினைப்பையில் இருக்கும் நீர்க்கட்டிகள் கரைந்துவிடும்.

கர்ப்பப்பையை தூண்டி சரியான மாதவிலக்கு உண்டாகவும் அடி வயிற்றில் உண்டாகும் அதிக வலியை குறைப்பதற்கும் கழற்சிக்காய் உதவுகிறது. அதிக வெள்ளைப்போக்கு உபாதையையும் குணப்படுத்த உதவுகிறது.

​விதை வீக்கம்

ஆண்களை பாடாய்ப்படுத்தும் விதை வீக்கம் பிரச்சனைக்கு இவை சிறந்த மருந்தாக இருக்கும். விரையில் அடிபட்டாலோ கட்டி வந்தாலோ விரையை சுற்றியிருக்கும் சவ்வுபையில் சுரக்கும் சுரப்பு நீர் அதிகமாக சுரந்து விரை வீக்கம் உண்டாகும்.

இவை நிணநீர் பாதையை அடைத்துகொள்வதால் விரைகள் வீக்கத்துக்கு உள்ளாகும். இதனால் விரைகள் மெல்ல பெரிதாகி கொண்டே போகும். இந்த கழற்சிக்காய் விதைகளை அரைத்து விரைகள் மீது பற்று போல் தடவி வந்தால் சுரப்பு நீர் பொறுமையாக வெளியேறி வீக்கம் வற்றிவிடும்.

இந்த கழற்சிக்காய் சூரணத்தை விளக்கெண்ணெயோடு சேர்த்து காய்ச்சி தைலத்தை விதை வீக்கத்தின் மீது தடவி வந்தால் சுரப்பிகளின் வீக்கம் கட்டுக்குள் அடங்கும். விதைப்பை வலி குறையும்.

விரைவாதம் குறைய கழற்சிக்காய் விதையை வாணலியில் போட்டு இலேசாக பச்சை வாடை போகும்படி வறுத்து பொடிக்கவும். இதை சிட்டிகை எடுத்து பாலில் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் விரைவாதம் நீங்கும். முன்னோர்கள் விரை பிரச்சனைக்கு பயன்படுத்திய மருந்து இது.

​வயிற்றுப்புண்ணும்,வயிறு கோளாறுகளும்

நாள்பட்ட வயிற்றுகோளாறுகள், வயிற்றுப்புண், அல்சர் போன்றவை நாள்பட்டு இருந்தால் அதிக உபாதை கொடுக்கும். அவ்வளவு எளிதில் குணமாகவும் செய்யாது. இந்த புண்களை குணப்படுத்த கழற்சிக்காய் உதவும்.

கழற்சிக்காய் இலைகளை பொடித்து இரண்டு சிட்டிகை அளவு வெதுவெதுப்பான நீரில் கலந்து தொடர்ந்து 3 நாட்கள் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் வெளியேறும். இந்த இலைப்பொடி வயிற்றுப்போக்கு, சீதபேதி, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றையும் குணப்படுத்துகின்றன.

​பல்வலி போக்கும்

கழற்சிக்காய் இலையை பொடியாக்கி அதை கொண்டு பல் துலக்குவதன் மூலம் பல் வலி குறையும். பல் ஈறுகள் வலுப்பெற கழற்சிக்காய் இலையை கொதிக்க வைத்த நீரை கொண்டு வாய்கொப்புளித்தால் பலன் கிடைக்கும். வாய் துர்நாற்றம் இருப்பவர்கள் இந்த நீரை தொடர்ந்து வாய்கொப்புளித்து வந்தால் துர்நாற்றம் மறையும்.

பல் சொத்தை ஆரம்பத்தில் இருந்தால் இந்த பொடியை கொண்டு அந்த இடத்தில் சில நொடி வைத்து தேய்த்துவந்தால் பல் சொத்தை மறையவும் செய்யும். ஆனால் தொடர்ந்து செய்ய வேண்டும். அதோடு கழற்சிக்காயை தீயில் சுட்டு சூரணமாக்கி கொட்டைபாக்கு, கரி சேர்த்து பல் தேய்த்து வந்தாலும் பல் ஈறு பிரச்சனை, பல் சொத்தை இரண்டுக்குமே பலன் கிடைக்கும்.

​கட்டிகள், புண்கள்

வயிற்றுப்புண்கள் போன்றே புரை வைத்த கட்டிகள், ஆறாத கண்டிகள், புரை கண்ட புண்கள் போன்றவற்றுக்கு மேல் பூச்சு மருந்தாக கழற்சிக்காய் பயன்படுத்தப்படுகிறது. கழற்சி சூரணத்தை நீரில் குழைத்து கட்டிகள் இருக்கும் இடத்தில் தடவி கட்டிகளை கரைக்க செய்கிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் கழற்சிக்காய் கொடியின் இளந்தளிர்கள், வேர்ப்பட்டை போன்றவற்றையும் கட்டிகள் கரைக்க பயன்படுத்துவது குற்ப்பிடத்தக்கது. சரும வியாதிகளுக்கும் இந்த கழற்சிக்காய் இலையை அரைத்து மேல்பூச்சாக பூசி வந்தால் சரும நோய் மறையும்

​காய்ச்சல், ஆஸ்துமாவுக்கும் மருந்து

சளி, இளைப்பு, காய்ச்சல், வலிப்பு, பாரிச வாயு பிரச்சனைகளுக்கு கழற்சிக்காய் பயன்படுத்தப்படுகிறது. கழற்சிக்காயிலிருந்து பெறப்படும் பண்டுசின் என்னும் வேதிப்பொருள் மலேரியா காய்ச்சலுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

வாதக்காய்ச்சல் காலங்களில் கழற்சிக்காய் பருப்போடு மிளகு சேர்த்து பொடித்து காலை மாலை இருவேளை கொடுத்தால் குணமாகும். கழற்சிக்காயை வாணலியில் வறுத்து பொடியாக்கி உள்ளுக்கு கொடுப்பதன் மூலம் ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் குணமாகும்.

நாட்டு மருந்து கடைகளில் எளிதாகவே கழற்சிக்காய் கிடைக்கும். முன்னோர்கள் காலத்தில் கைவைத்தியத்துக்கு வைத்திருக்கும் பொருள்களில் இவையும் உண்டு. தற்போது நீரிழிவுக்கும் கூட இவை மருந்தாகிறது .

இதை குறிப்பிட்ட நோய்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தும் போது சித்த மருத்துவரின் அறிவுரையோடு எடுத்துகொள்வது பாதுகாப்பானது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker