உறவுகள்புதியவை

மனசோர்வை அதிகரிக்கும் பி 12 வைட்டமின் குறைபாடு குறித்து தெரிஞ்சுக்கலாமா?

உடலில் ரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் டிஎன்ஏ தயாரிப்புக்கு வைட்டமின்களின் பங்கும் தேவை. அதிலும் வைட்டமின் பி 12 முக்கியமானதும் கூட. வைட்டமின் பி 12 சியானாகோபாலமைன் மற்றும் மெத்தில்கோபாலமைன் போன்ற வடிவங்களில் உடலுக்கு கிடைக்கிறது. இதில் சியானாகோபாலமைன் பிற்சேர்க்கை பொருளாகவும் மெத்தில் கோபாலமைன் இயற்கையாக அசைவ உணவிலும் கிடைக்கிறது.

இவை உடலில் நரம்பு மண்டலம்,எலும்புகள் உறுதி, சருமம், இதயம், மூளை போன்ற உறுப்புகளுக்கு பெரிதும் நன்மை செய்கிறது. இந்த பி 12 வைட்டமின் குறைபாடு இருந்தால் என்னமாதிரியான அறிகுறிகள் உண்டாகும் என்பதை தெரிந்துகொள்வோம்.
​வாய் மற்றும் நாக்கில் புண்

வாய் மற்றும் நாக்கு பகுதியில் புண் உண்டானால் உடனே அது வைட்டமின் பி 12 குறைபாடு என்று நினைத்துவிட வேண்டியதில்லை. ஆனால் அடிக்கடி நாக்கில், வாயின் முனையில் அழற்சி ஏற்படுவது இந்த வைட்டமின் குறைபாட்டினால் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

ஏனெனின் வாய் சளிச்சவ்வுகளின் ஆரோக்கியத்துக்கு இந்த வைட்டமின் பி 12 அத்தியாவசியமானது. இந்த புண்கள் அடிக்கடி வந்து அதை அலட்சியம் செய்தால் வாய்க்குள் சிறிய புண்களையும் உண்டாக்கிவிடும்.

​சருமம் வெளிறி போதல்

சருமத்தில் ரத்த ஓட்டம் சீராக இருந்தால் சருமத்தின் நிறம் உயிர்ப்போடு இருக்கும். அது மாநிறமாக இருந்தாலும், கருப்பாக இருந்தாலும், வெள்ளையாக இருந்தாலும் கூட. அதுபோன்று வைட்டமின் பி 12 குறைபாடு சருமத்தில் வெளிர் தன்மையை உண்டாக்கும்.

மஞ்சள் காமாலை வருபவர்களின் கண்களும், விரல் நகங்களும் மஞ்சளை கொண்டிருப்பதை போன்று இந்த வைட்டமின் குறைபாடு சருமத்தை வெளிர்த்து இளமஞ்சள் நிறத்தில் காட்டும். எல்லோருக்கும் இந்த மஞ்சள் நிறம் தெரியாது என்றாலும் சருமம் வெளிரி தனியாக வித்தியாசப்படுத்தி காட்டும்.

​எடை இழப்பு

உடல் எடை குறைவதில் மேற்கொள்ளும் கடுமையான டயட் காட்டிலும் இந்த வைட்டமின் பற்றாக்குறை இருக்கும் போது உடல் எடை வேகமாக இழக்க நேரிடும்.

உணவு உட்கொண்ட பிறகு நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். உணவை கண்டாலும் உணவின் மீது நாட்டம் இல்லாமல் வெறுப்பாக இருக்கும். வலுக்கட்டாயமாக சாப்பிட்டால் அவை விரைவில் வாந்தியாக வெளியேறும். தொடர்ந்து இந்நிலை உண்டாகும் போது எடை இழப்பு வேகமாக ஏற்படும்.

​உடல் சோர்வு பலவீனம்

உடல் சோர்வுக்கு காரணங்கள் பல உண்டு. ஆனால் இந்த வைட்டமின் பி 12 பற்றாக்குறை உண்டாகும் போதும் சோர்வை உண்டாக்கும். இந்த பி 12 வைட்டமின் ஆனது உடலில் இரத்த சிவப்பு அணுக்களில் குறைபாடை உண்டாக்கும். இதனால் உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை நேரிடும். இதனால் உறுப்புகள் சோர்வடையும். தீவிர ரத்த சோகைக்கு வழி வகுக்கும்.

இதுதான் உடலில் சோர்வு, தலைவலி, பலவீனம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். தீவிர குறைபாடு நேரும் போது மூச்சுத்திணறல் பிரச்சனைக்கும் வழிவகுக்கும். அடிக்கடி மூச்சுத்திணறல் வருவதற்கு இந்த பி 12 வைட்டமின் குறைபாடும் ஒரு காரணமாக இருக்கலாம்.

​கண்பார்வையில் குறைபாடு

வைட்டமின் பி 12 உடல் உறுப்புகளை சேதப்படுத்தும் ஹோமோசைஸ்டைன் அளவை குறைக்க உதவுகிறது. இவை அதிகமாகும் போது கண்களில் முதுமை தொடர்பான கருவிழி சிதைவு அல்லது வயதானபிறகு படிப்படியான பார்வை இழப்பு தன்மையை உண்டாக்கும்.

கண்களில் இந்த பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க இந்த பி12 வைட்டமின் நிறைவாக எடுத்துகொள்ள வேண்டும். மேலும் இது குறையும் போது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என்பதால் கண்ணில் பார்வைத்திறனின் கூர்மை மங்க தொடங்கும்.

​மன அழுத்தம்

மன சோர்வும் கவலையும், மன அழுத்தமும் உடல் ஆரோக்கியத்தோடு தொடர்பு கொண்டவை. உணர்வுகளில் உண்டாகும் ஏற்றத்தாழ்வுகள், ஹார்மோன் மாற்றங்களினால் உண்டாகும் மனச்சோர்வு, மனதில் எப்போதும் சோகமான எண்ணங்கள், எதிலும் ஆர்வம் இன்மை, தங்கள் மீதே நம்பிக்கையில்லாமல் இருப்பது, பிடித்த விஷயங்களிலும் ஆர்வமில்லாமல் இருப்பது என எல்லாமே அவ்வபோது உண்டாவதுதான்.

ஆனால் எப்போதும் இந்த மனசோர்வு தொடர்ந்தால் அதுவும் தீவிரமாக இருந்தால் அது வைட்டமின் பி 12 குறைபாடாக இருக்கவும் வாய்ப்புண்டு. மனசோர்வு குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் வைட்டமின் பி 12 குறையும் போது அது இரண்டு மடங்கு மன சோர்வை உண்டாக்குவதாக கண்டறியப்பட்டது. கூடுதலாக இவை நினைவுத்திறனிலும் குறைபாட்டை உண்டாக்கிவிட வாய்ப்புண்டு.

​பெண்களுக்கு வைட்டமின் பி 12

எப்போதும் எலும்பு வலு குறித்த விஷயங்களில் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு கூடுதல் சத்து தேவை. மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலங்களில் பாதிப்புக்குள்ளாக்கும் உறுப்புகளில் எலும்பும் ஒன்று.

மென்மையான எலும்பு, இடுப்பை சுற்றி எலும்பு வரை உண்டாகும் வலி போன்றவை உண்டாகும் என்றாலும் வழக்கத்தை விட தீவிரமாகும் போது இந்த பி12 வைட்டமின் பற்றாக்குறையாகவும் இருக்கலாம். இதை அலட்சியப்படுத்தும் போது எலும்புப்புரை வரை பாதிப்பை உண்டாக்கிவிட வாய்ப்புண்டு.

மேற்கண்ட அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் அலட்சியப்படுத்தாமல் விரைந்து மருத்துவரை அணுகுவது நல்லது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker