உறவுகள்புதியவை

கணவன் மனைவி மோதலில் உருவாகும் ‘புதிய நட்புகள்’

தம்பதிகளுக்குள் மோதல் ஏற்படுவது புதிய விஷயம் இல்லை. ஆதிகாலத்தில் தொடங்கி, இன்றும் நடந்துகொண்டிருக்கிறது. மனிதர்கள் வாழும் காலம் வரை அது மறையாது என்றாலும், அவர்கள் மோதிக்கொள்ளும் முறைதான் அது சாதாரணமானதா? விவாகரத்து வரை செல்லக் கூடியதா? என்பதை தீர்மானிக்கிறது.

கணவரோடு சண்டை ஏற்படும்போது பெண்கள் அம்மா வீட்டிற்கு சென்று விடுவதுண்டு. பலரது பார்வைக்கு அது தவறானதாக இருந்தாலும், அது தான் சரியானது என்று மனோதத்துவ நிபுணர்கள் புதிய தீர்வு சொல்கிறார்கள். இரண்டு பேரும் கோபமாக இருக்கும்போது அருகருகே நின்று கோபத்தை வளர்த்துக் கொள்ளாமல், அந்த நேரத்தில் சிறிது இடைவெளிவிட்டு பிரிவது கோபத்தை தணிக்கவே செய்யும் என்பது அவர்கள் கருத்து.

இருவரும் பிரிந்து தனிமைப்படும்போது தனித்திருந்து ஓரளவு தெளிவாக சிந்திப்பார்கள். அப்போதுதான் நல்லது கெட்டது தெரியவரும்.

மனைவி, கணவரிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு செல்லாமல் வேறு எங்கேயாவது சென்றால் அது பாதுகாப்பில் பிரச்சினையை ஏற்படுத்தும். கூடுதலாக வேறு விதமான பிரச்சினைகளையும் உருவாக்கிவிடும். அதனால் அம்மா வீட்டிற்கு செல்வது நல்லதே! அம்மா வீட்டில் ஆறுதலும், அன்பும் மட்டுமில்லை, சரியான வழிகாட்டுதலும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அடிக்கடி கணவரிடம் சண்டையிட்டுக்கொண்டு அம்மா வீட்டிற்கு பயணமாவது நல்லதல்ல!

பெற்றோரை எதிர்த்து காதலித்து திருமணம் செய்துகொள்ளும் மகளுக்கு பொதுவாக அம்மா வீடு ஆறுதல் தருவதில்லை. ‘எங்கள் சொல் கேட்காமல் நீயாகத்தானே திருமணம் செய்துகொண்டாய். நீயே அனுபவி’ என்று சொல்கிறார்கள். அது சரியல்ல. மகளுக்கு வழிகாட்ட வேண்டியது பெற்றோரின் கடமை. அதில் இருந்து அவர்கள் பின்வாங்கக்கூடாது. குறிப்பாக அம்மாக்கள் திருமணமான மகளின் எதிர்காலத்தில் அக்கறை செலுத்தியே ஆகவேண்டும்.

கணவரோடு மனைவி சண்டையிட்டுக்கொண்டு மனப்போராட்டத்தில் இருக்கும் காலகட்டங்களில், எங்கேயாவது இருந்து நீளும் புதிய நட்பு அவளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகத்தான் தெரியும். உடனே அதை பற்றிப் பிடித்துக்கொள்ளத் தோன்றும். ஆனால் அது எந்த அளவு பாதுகாப்பானது என்று சொல்வதற்கில்லை. கயிறா? பாம்பா? என்பது போகப்போகத்தான் தெரியும்.

இந்த மாதிரியான புதிய நட்பு, அந்த நேரத்தில் மட்டுமே ஆறுதலாக இருக்கும். பிற்காலத்தில் அதற்கு அதிக விலை கொடுக்கவேண்டியதாகிவிடும். அதனால் கூடுமானவரை கணவன்- மனைவி உறவு சிக்கல்களை உணர்ச்சிவசப்பட்டு அடுத்தவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப ரகசியங்களை சொல்வது வாழ்க்கையை சிதைத்துவிடும்.

கணவனும், மனைவியும் ஒருவர் மீது இன்னொருவர் குற்றஞ்சாட்டிக்கொள்ள பல்வேறு விஷயங்கள் இருக்கலாம். உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது இருவருக்குமே தங்கள் பக்கமே நியாயம் இருப்பதுபோல் தோன்றும். உணர்ச்சியை கட்டுப்படுத்தினால் கோபம் குறையும். பின்பு மனைவி, கணவர் நிலையில் இருந்தும்- கணவர், மனைவி நிலையில் இருந்தும் அந்த விஷயத்தை சீர்தூக்கிப்பார்த்து, சுயபரிசோதனை செய்தால் உண்மை புரியவரும். கோபம் குறைந்து, சுபம் ஆகிவிடும்.

கோபமான நேரத்தில் நடக்கும் விவாதத்தின் தொடக்கம் சரியாக இருக்காது. சரியான வழியில் அந்த விவாதம் செல்லவும் செய்யாது. பிரச்சினைகளோடுதான் முடியவும் செய்யும். அதனால்தான் கோபத்தில் செய்யும் விவாதங் களை வீண் விவாதம் என்று சொல்கிறோம். வீண்விவாதங்கள் பகையை வளர்க்கத்தான் உதவும். அதனால் கணவன், மனைவி இருவருமே விவாதங்களில் ஈடுபடும்போது, ‘விவாதத்தில் ஜெயிப்பதல்ல, வாழ்க்கையில் ஜெயிப்பதுதான் முக்கியம்’ என்பதை உணர வேண்டும்.

செக்குமாடு போன்று எப்போதும் ஒரே மாதிரி வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கக்கூடாது. அவ்வப்போது வாழ்க்கையில் மாற்றம் இருக்கவேண்டும். மாற்றங்களை மனம், உடல், அலங்காரம் போன்று பலவிதங்களில் ஏற்படுத்திக்கொள்ளலாம். மாற்றங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சலிப்பை போக்கி, தம்பதிகளை உற்சாகமாக்கும். அந்த உற்சாகம் கணவன்- மனைவி உறவில் புத்துணர்ச்சியை உருவாக்கும்.

தம்பதிகளுக்குள் ஏற்படும் 95 சதவீத பிரச்சினைகள் மிக சாதாரணமானதுதான் என்பது மனோதத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. இருவரும் பிரியக் கூடிய அளவுக்கு அதில் தீவிரம் இருப்பதில்லை. ஆனால் ஒன்றும் இல்லாத அந்த விஷயத்தை பேசிப்பேசி தீவிர பிரச்சினையாக்கி விடுகிறார்கள். சிலர் உடனே அவசரப்பட்டு, ‘நாம் இனி ஒருபோதும் பேசிக்கொள்ளவேண்டாம். ஆனால் குழந்தையின் நலன்கருதி ஒரே வீட்டில் குடியிருப்போம்’ என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அந்த முடிவு மிக மோசமானது. ஏன்என்றால் எந்த விஷயமானாலும் பேசித்தான் தீர்க்கமுடியும். பேசாமல் எதையும் தீர்க்க முடியாது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker