அப்பாக்களிடம் மகன்கள் எதிபார்க்கும் சின்ன சின்ன விஷயங்களை தந்தை பூர்த்தி செய்தாலே அவர்களுக்கு மகிழ்ச்சி. அப்படி பொதுவாக என்னென்ன எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர் என்பதைக் காணலாம்.
அப்பாவிடம் மகன்கள் எதிர்ப்பார்க்கும் விஷயங்கள் என்ன தெரியுமா?
அப்பாக்களிடம் மகன்கள் எதிபார்க்கும் சின்ன சின்ன விஷயங்களை தந்தை பூர்த்தி செய்தாலே அவர்களுக்கு மகிழ்ச்சி. அப்படி பொதுவாக என்னென்ன எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர் என்பதைக் காணலாம்.
அப்பா குடும்பம், குழந்தை, உறவினர்கள் என்று இருப்பார்கள். ஆனால் அவரை நினைத்து வருந்தும் ஒருவர் அம்மாதான். ஆனால் அவருக்கோ அம்மாவைக் கவனித்துக்கொள்ளவும், அன்பு செலுத்தவும் நேரம் இருக்காது. இதை அம்மாவும் அப்பாவிடம் காட்டவில்லை என்றாலும் அம்மாவை நேசிக்கும் மகன்களுக்குத் தெரியும்.எனவேதான் ஒவ்வொரு மகன்களும் அப்பா அம்மா மீதும் அன்பு செலுத்த வேண்டும். அம்மாவின் ஆசைகளுக்குச் செவி கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
தோல்விகள் பல சந்தித்தவர்கள்தான் சிறந்த ஆசிரியர்களாக இருக்க முடியும். அப்பாவை ரோல் மாடலாக நினைக்கும் மகன்கள் தன்னுடைய தோல்வியை எப்படி பக்குவமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை உங்களிடமிருந்து நன்கு கற்றுக்கொண்டிருப்பார்கள். எனவே அவர்களின் வெற்றியை மட்டும் எதிர்பார்க்காதீர்கள். தோல்விகள் எதார்த்தம் அதை எதிர்கொள்ள மகனுக்கு உறுதுணையாக இருங்கள் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.
உங்கள் மகனின் கல்வி , சமூக வாழ்க்கை , புதிய தொழில் தொடங்குகிறார் , புது முயற்சிகள் என எதுவாக இருந்தாலும் உடன் இருந்து சிறந்த ஆலோசகராக இருங்கள். ஆலோசகராக இல்லாவிட்டாலும் உடன் இருப்பதே அவர்களுக்குப் பக்க பலம்தான். இது மகன்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு. ஏனெனில் அவர்களின் முதல் நண்பன் நீங்கள்தான்.
அவர் ஏதேனும் குறிப்பிட்ட விஷயத்தில் தீவிரமாக இருக்கிறார் எனில் அதற்குத் தடுப்பணையாக இருக்காதீர்கள். உதாரணமாக விளையாட்டு, பாட்டு, சினிமா, நடனம் இப்படி மற்ற விஷயங்களில் அதிக தீவிரமாக இருந்தால் ஊக்குவித்து அவரை உற்சாகப்படுத்தும் முதல் நபராக இருங்கள். அதைவிடச் சிறந்த உந்துதல் சக்தி அவர்களுக்கு வேறெதுவும் இல்லை.
உங்கள் மகன் படிப்பில் , விளையாட்டில் , தொழிலில் சிறந்து விளங்குகிறார் எனில் அவரை பாராட்ட வேண்டும் என்பது அவர்களின் ஆழ் மன எதிர்பார்ப்பு. உன்னால் முடியும் எனத் தெரியும். நீ சிறந்த உழைப்பாளி உனக்கு இந்த வெற்றி பொருத்தமானதே என இப்படி வாய் நிறைய மனதாரப் பாராட்டுங்கள். அதுதான் அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.
நேரம் கிடைக்கும்போது நண்பனைப் போல் அவருடன் பேசி மகிழுங்கள். டெக்னாலஜி குறித்த அப்டேட்டுகளை மகனிடம் தெரிந்துகொள்ளுங்கள். இருவரும் சேர்த்து வெளியே செல்லுங்கள். படத்திற்குச் சென்று வாருங்கள். இப்படி எல்லாவற்றையும் பேசுங்கள். இது உங்கள் உறவு முறையை மேலும் சிறப்பாக்கும். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பாக இருக்கும்.