முகம் முழுக்க பருக்களும் கரும்புள்ளியுமா, இந்த பவுடர் தயாரிச்சு பயன்படுத்துங்க ஸ்கின் க்ளியராயிடும்!
முகப்பராமரிப்புக்கு செய்வது வேறு. பருக்களும், கரும்புள்ளிகளும் சரும பிரச்சனைகளும் வந்தால் பராமரிப்போடு அதையும் தீர்க்க வேண்டும்.
முகப்பராமரிப்புக்கு தேவையான எல்லாவற்றையுமே வெளியில் வாங்கும் பழக்கம் குறைந்துவிட்டது. பெரும்பாலும் வீட்டிலிருக்கும் பொருள்களை கொண்டே அழகு படுத்தி கொள்வது அதிகரித்துவிட்டது. ஆர்கானிக் பவுடர் என்று கடைகளில் கிடைக்க கூடிய பொருள்களை காட்டிலும் வீட்டில் தயாரித்து பயன்படுத்தலாம். முகப்பராமரிப்புக்கும் பயன்பட வேண்டும். அவை முகத்தில் வேறு பிரச்சனைகளையும் களைய வேண்டும். அப்படியான தயாரிப்பு குறித்து தான் பார்க்க போகிறோம். இவை ஒன்றே உங்கள் சருமத்துக்கு போதுமானது என்பதை பயன்படுத்திய உடனே புரிந்துகொள்வீர்கள் தயாரிக்கும் முறை குறித்து தெரிந்துகொள்வோம்.
முல்தானி மெட்டி
இயற்கை அழகு தேவை என்று விரும்பும் பெண்களுக்கு இந்த முல்தானி மெட்டி நிச்சயம் அறிமுகமாகியிருக்கும். சரியான முறையில் இதை எடுத்துகொண்டால் நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும்.
இதிலிருக்கும் சிலிக்கான், மெக்னீஷியம், கெல்சேட், டாலமைட் போன்றவை சருமத்துக்கு அதிக நன்மைகளை தரக்கூடியது.பக்கவிளைவு இல்லாமல் சருமத்தை சுத்தம் செய்வதால் இதை தயக்கமின்றி பயன்படுத்தலாம். அனைத்து வகையான சருமத்துக்கும் ஏற்றது இந்த முல்தானி மெட்டி. நாட்டு மருந்துகடைகளில் தரமான முல்தானி மெட்டி கிடைக்கும்.
முல்தானி மெட்டி – 100 கிராம்
ரோஜா இதழ் பொடி
பன்னீர் ரோஜாவை மொத்தமாக வாங்கி ரோஜா இதழ்களை தனியாக பிரிக்கவும். இதை நிழலில் உலர்த்தி மிக்ஸியில் அடித்து சலிக்கவும். வீட்டிலேயே தரமான ரோஜா பொடியை தயாரிக்கலாம். அல்லது நாட்டு மருந்து கடைகளிலும் ரோஜா இதழ் பொடி வாங்கி பயன்படுத்தலாம். முல்தானி மெட்டி பயன்படுத்தும் அளவுக்கு இதையும் சேர்க்க வேண்டும்.ரோஜா பொடிக்கு மாற்றாக தூய்மையான பன்னீரும் பயன்படுத்தலாம்.
ரோஜா பொடி (பன்னீர்) – 100 கிராம்
வேப்பிலை பொடி
வேப்பிலை கிருமி நாசினி. இது சரும துளைகளில் இருக்கும் கிருமிகளை முழுவதுமாக நீக்ககூடியவை. சருமத்தின் மூன்று அடுக்கு வரை சென்று கிருமிகளை வெளியேற்றுவதால் முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தாலும் அவை குறைய தொடங்கும். பருக்களால் வடுக்கள் வந்தாலும் அவை மறைய தொடங்கும். முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய்பசையை உறிஞ்சக்கூடியது இது.
வேப்பிலையை காம்பிலிருந்து நீக்கி நிழலில் உலர்த்தி பொடிக்க வேண்டும். கொரகொரப்பாக இல்லாமல் நைஸாக அரைக்க வேண்டும். மிக்ஸியில் அரைத்து சலித்து கொள்ளவும்.
வேப்பிலை பொடி – 50 கிராம்
துளசி பொடி
மூலிகைகளின் ராணி துளசி என்று சொல்வார்கள். துளசியை டோனராக பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் அழுக்கு நீங்கும். அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்றாலும் வாரம் ஒருமுறையாவது இதை பயன்படுத்த வேண்டும்.
துளசி சரும பிரச்சனைகள் நீக்க கூடியது. கருமையான தழும்புகள், பருக்களால் உண்டாககூடிய வடுக்கள் வராமல் தடுக்க உதவுகிறது. முகத்தில் இருக்கும் கட்டிகள் தழும்பு இல்லாமல் நீங்க துளசியை பயன்படுத்தவேண்டும். துளசி இலைகளையும் நிழலில் உலர்த்தி மிக்ஸியில் பொடித்து சலித்து வைக்கவும்.
துளசி பொடி – 50 கிராம்
தயாரிக்கும் முறை
ஈரம் இல்லாத அகலமான பாத்திரத்தில் அனைத்து பொடிகளையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதில் மஞ்சள் தூள் 25 கிராம் அளவில் சேர்ப்பதும் நல்லது. ஆண்கள் பயன்படுத்துவதாக இருந்தால் மஞ்சள் தூள் குறைவாக பயன்படுத்துவது நல்லது. இந்த பவுடரை ஆறு மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். ஈரம் படாமல் வைத்துகொள்ள வேண்டும்.
தினமும் குளிப்பதற்கு முன்பு இந்த பவுடரை ஒரு டீஸ்பூன் எடுத்து பாலில் குழைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவினால் போதும். வேறு பராமரிப்பு எதையும் செய்ய வேண்டியதில்லை. இந்த பொடியையே ஹெர்பல் ஃபேஸ் பேக் ஆகவும் பயன்படுத்தலாம். இவையே முகத்தை க்ளியராக வைத்துகொள்ள போதுமானது