ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

இந்த தவறான பழக்கங்களைத் திருத்திக்கொண்டாலே சிசேரியனை தவிர்க்கலாம்

“சிசேரியன் செய்துகொண்டவர்களால், சுகப்பிரசவம் செய்துகொண்டவர்களைப்போல, இயல்பாக இருக்க முடியாது. சில தினங்களில் இயல்பு வாழ்க்கைக்கும் திரும்ப முடியாது. பிரசவித்த பின்னர், அறுவைசிகிச்சை மேற்கொண்டதன் காரணமாகப் படுத்தே இருப்பதால் உடலின் ஏதேனும் ஒருபகுதியில் ரத்தக்கட்டுகூட ஏற்படலாம். சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள், அதிக உடல் அழுத்தத்துக்கு மத்தியில் பிறப்பார்கள். அப்படி அழுத்தத்துக்கு உள்ளாகும்போது, சிசுவின் உடலில் `ஸ்டீராய்ட் ஹார்மோன்’ (Steroid Hormones) சுரப்பு சீராக இருக்கும். இதனால் நுரையீரல் செயல்பாடு சீராகி, பிறந்து சில நிமிடங்களில் குழந்தை அழத்தொடங்கிவிடும். மூச்சுப் பிரச்னைகள் எதுவும் ஏற்படாது. பழக்க வழக்கங்கள், சரியான உணவுப் பழக்கவழக்கம், சில உடற்பயிற்சிகள், போதிய ஓய்வு போன்றவற்றின் மூலம் சுகப்பிரசவத்தைக் கருவுற்றுள்ள பெண்கள் சாத்தியப்படுத்திக்கொள்ளலாம்.

பிரசவ காலம் நெருங்கும்போது சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தலாம். இது அனைத்தும், பிரசவ நேரத்தில் தாய்க்கு நெருக்கடியான மனநிலையை ஏற்படுத்தும். சுகப்பிரசவத்துக்கான சாத்தியக் கூறுகளைத் தடுக்கும். மருத்துவர்களும் இறுதியில் வேறு வழியின்றி சிசேரியனை பரிந்துரைத்துவிடுவார்கள்.

சிசேரியனைத் தடுக்க நினைப்பவர்கள், உடல்நலனில் கவனம் செலுத்தினாலே பல பிரச்னைகளை முன்கூட்டியே தடுக்கலாம். அவை…

* கருத்தரித்த காலத்தில் இருந்தே வாக்கிங், யோகா, நீச்சல் போன்ற ஏதேனும் ஒரு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

* முதல் ஐந்து மாதம் பயிற்சி செய்யாவிட்டாலும், குறைந்தபட்சம் ஆறாவது மாதம் தொடங்கும்போதாவது பயிற்சிகள் செய்யத் தொடங்க வேண்டும். ஸ்குவாட்ஸ், பட்டர்ப்ளை போன்ற உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி போன்றவற்றை செய்வது நல்லது. இவை அனைத்துமே, பிரசவ நேரத்தில் குழந்தையின் தலை எளிதில் கீழே திரும்ப உதவுவதற்கான இடுப்புத் தசைகள் விரிந்து கொடுக்க உதவும். உடலும் மனதும் ரிலாக்ஸாகும்.

* யோகாவைப் பொறுத்தவரையில் தோள்பட்டை, முதுகுத் தண்டுவடம், மார்புப் பகுதிகளுக்கான பயிற்சிகளை முறையான நிபுணரின் ஆலோசனையுடன் பெற்று செய்யலாம். தினமும் எளிய நடன அசைவுகளை மேற்கொள்வது, தசைகளை எளிதாக்க உதவும்.

* உணவுப் பழக்கவழக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வைட்டமின், புரதச்சத்து, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடவும்.

* காரமான உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கரி உணவுகள், செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட உணவுகள், அதிக எண்ணெய் மூலம் தயாரிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

* சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம் இருப்பவர்கள் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள மருந்து மாத்திரைகளை எந்த நிலையிலும் தவிர்க்கக் கூடாது.

* கர்ப்ப காலத்தில், உடலுழைப்பும் அவசியம். உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள், எளிய வீட்டு வேலைகளைச் செய்து வரலாம். உதாரணமாக வீடு பெருக்குவது, சமையலின்போது மிக்ஸிக்குப் பதில் அம்மி உபயோகப்படுத்துவது, இடிக்க உரல் உபயோகப்படுத்துவது, தினமும் பாத்திரம் துலக்குவது போன்றவற்றைச் செய்யலாம். எந்த வேலையானாலும் உடல் அசைவுகள் அதிகம் கொண்ட வேலையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே விதி. தினமும் அல்லது ஒருநாள் விட்டு மறுநாளோ இவற்றைச் செய்து வரலாம்.

மேற்கூறிய அனைத்தும் உடலளவில் சுகப்பிரசவத்துக்கு கர்ப்பிணிகள் தன்னைத்தானே தயார் படுத்திக்கொள்ள உதவும். இவையில்லாமல், மனதளவில் அதற்குத் தயாராவது தனி வழிமுறை. அதற்கான சிறந்த வழி, சுகப்பிரசவத்தின்போது என்ன சிக்கல்கள் ஏற்படலாம் என்பதைக் கர்ப்பகாலத்திலேயே கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker