தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

குழந்தைகளுக்கு சமையல் அறை பாடம்

வகுப்பறைகள் இயங்கவில்லை. ஆனால் இப்போது சமையல் அறைகள் ஒவ்வொரு வீட்டிலும் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. அதனால் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளுக்கு சமையல் அறை பாடத்தை கற்றுக்கொடுத்துவிடலாம் என்று நிறைய தாய்மார்கள், சமையல் செய்யும் முறைகளை கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு சமையலை கற்றுக்கொடுக்கும்போது சில அடிப்படையான விஷயங்களை தாய்மார்கள் மனதில் பதியவைத்துக்கொள்ளவேண்டும்.பொதுவாக குடும்பத்தலைவிகள் 30 வயதினை கடக்கும்போது பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகிறார்கள். பெரும்பாலும் முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்துவலியால் அவதிப்படுகிறார்கள். சில தாய்மார்கள் சமையல் வேலைகளை செய்து முடித்ததும் தங்கள் கைவிரல்கள் மரத்துப்போவதாகவும் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் சமையல் வேலைகளில் செய்யும் சின்னசின்ன தவறுகள்தான். அந்த தவறுகளை அவர்கள் உணர்ந்து சரிசெய்துகொண்டால்தான், தங்களை வாட்டும் வலிகளில் இருந்து விடுதலை பெறமுடியும். அதோடு அந்த தவறுகளை தவிர்த்து, சமையல் அறை பாடங்களை சரியாக கற்றுக்கொடுத்தால்தான் எதிர்காலத்தில் அவர்களது குழந்தைகளால் எந்த வலியையும் அனுபவிக்காமல் சிறப்பாக சமையலை செய்யவும் முடியும்.
வலியில்லாத சமையலை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் வழிமுறைகள்!

சமைப்பவரின் உயரத்திற்கு ஏற்ப சமையல் மேடை அமைந்திருக்கவேண்டும். சமையல் மேடை உயரம் அதிகமாக இருந்தால் அடுப்பில் இருக்கும் சமையல் பாத்திரங்களை எளிதாக கையாளமுடியாது. எட்டிப்பார்த்தபடி சமையல் வேலை செய்யவேண்டியதாகிவிடும். சமையல் பாத்திரங்களில் இருக்கும் உணவுப் பொருட்களை கிளறும்போது கைவலி ஏற்படும். அது பிள்ளைகளுக்கு சமையலில் இருக்கும் ஆர்வத்தை குறைத்துவிடும். அதனால் இயல்பாக நின்று சமைக்கும் விதத்தில் சமையல் மேடை அமைக்கப்பட்டிருக்கவேண்டும். உங்கள் பிள்ளைகள் உயரம் குறைவாக இருந்தால் அகலமான, பாதுகாப்பான மரப் பலகையை கீழேபோட்டு அதன் மீது ஏறி நின்றுகொண்டு சமையல் செய்ய கற்றுக்கொடுங்கள். இயல்பாக நின்றுகொண்டு, உடலுக்கு எந்தவித அழுத்தத்தையும் கொடுக்காமல் சமையல் செய்ய கற்றுத்தாருங்கள். ஒரு கையை சமையல் மேடையில் ஊன்றிக்கொண்டு இன்னொரு கையால் அடுப்பில் இருக்கும் உணவுப்பொருளை கிளறினால், கை வலி ஏற்பட்டு உடல் எளிதில் சோர்வடைந்துவிடும் என்பதை உங்கள் குழந்தைக்கு சொல்லிக்கொடுங்கள், அதுபோல் சமையல் மேடையை குறைந்த உயரத்தில் அமைத்துக்கொண்டு குனிந்து வேலைபார்ப்பதும் சரியான முறையல்ல. அது முதுகு வலிக்கும், கழுத்து வலிக்கும் காரணமாகிவிடும்.

சமையல் பணி என்பது சமைப்பது மட்டுமல்ல, சமைத்த பாத்திரங்களை முறையாக கழுவவும் கற்றுக்கொடுங்கள். பாத்திரம் கழுவ பயன்படுத்தும் ‘சிங்க்’கும், பொருத்தமான உயரத்தில் அமைந்திருப்பது அவசியம். குனிந்து கழுவும் நிலையிலோ அல்லது எட்டிப்பார்த்து கழுவும் நிலையிலோ அது இருக்கக்கூடாது. பாத்திரங்கள் கழுவும்போது உடுத்தியிருக்கும் துணியில் தண்ணீர்பட்டு துணி அழுக்காகிவிடக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்தக் கூறுங்கள்.கிரைண்டரை பயன்படுத்தும்போது முழுகவனமும் அதில்தான் இருக்கவேண்டும். குறிப்பாக மாவு அரைக்கும்போது கூந்தலை பறக்கவிடாமல் நன்றாக ஒதுக்கிகட்டிக் கொள்ளச்சொல்லுங்கள். கிரைண்டர் இருக்கும் மேடையும், நின்ற நிலையில் வேலை பார்க்க வசதியாக அமைக்கப்பட்டிருக்கவேண்டும். அவ்வப்போது குனிந்து, நிமிர்ந்து வேலைபார்க்கும் விதத்தில் கிரைண்டர் மேடை அமைந்துவிடக்கூடாது,

சமைக்கும் பொருட்களை, சமையல் அறையில் எந்தெந்த பகுதியில் வைத்திருக்கிறீர்கள் என்பதை முதலிலே பிள்ளைகளுக்கு, ஒவ் வொரு பொருளையும் திறந்துகாட்டி கற்றுக்கொடுங்கள். எந்த உணவுப் பொருளை சமைக்கவேண்டும் என்பது பற்றி முதலிலே திட்டமிட்டுவிட்டு அதற்குரிய பொருட்கள் அனைத்தையும் கைக்கு எட்டும் விதத்தில் எடுத்து வைத்துக்கொள்ள பழக்கப்படுத்துங்கள். பார்வைக்கு அப்பால் இருக்கும் பொருட்களை எடுக்க உடலை முழுமையாக திருப்பவேண்டும். கையை மட்டும் நீட்டி எடுத்தால் சில நேரங்களில் முதுகில் பிடித்துக்கொள்ளும்.

காய்கறிகளை, நின்று கொண்டே வெட்டும்படி கூறுங்கள். அப்போதுதான் முழு கவனத்தையும் செலுத்தி சரியாக வெட்டமுடியும். பெரும்பாலும் குழந்தைகள் டைனிங் டேபிளில் அமர்ந்துகொண்டு காய்கறிகளை வெட்ட விரும்புவார்கள். அது சரியான அணுகுமுறையல்ல. ஏனென்றால் கைகள் விரைவாக வலிக்கத் தொடங்கிவிடும்.

சிலிண்டர்களை எளிதாக கையாண்டு சமையல் அறைக்கு கொண்டு வருவது, காலி சிலிண்டரை இணைப்பில் இருந்து விடுவித்து மாற்றிவிட்டு, புதிய சிலிண்டரை இணைப்பது போன்ற வேலைகளை செய்யவும் சொல்லிக்கொடுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker