மேக்கப்பை நீக்கும் வழிமுறைகள்
தினமும் இரவில் பெண்கள் ‘மேக்கப்’பை நீக்கிவிட்டுத்தான் தூங்கச் செல்லவேண்டும். சமையல் அறை பொருட்களை கொண்டே ‘மேக்கப்’பை நீக்கும் வழிமுறைகள்:
மேக்கப்பை நீக்குவதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் பயன் படுத்தலாம். அவை மேக்கப்பை அகற்றுவதோடு சருமத்திற்கு புத்துணர்வு அளிக்கும். மேக்கப்பை அகற்றியதும் சிலருடைய சருமம் ஈரப்பதமின்றி வறட்சியாகிவிடும். அப்போது இந்த எண்ணெய் வகைகளில் ஏதாவது ஒன்றை கொண்டு மசாஜ் செய்யலாம். மேக்கப் துடைப்பான்களில் சில துளி எண்ணெய் ஊற்றி ‘மேக்கப்’பை நீக்கவேண்டும்.
மேக்கப்பை முழுவதுமாக அகற்றிய பிறகு சருமத்தில் சிறிதளவு எண்ணெய் தேய்த்துவிட்டு காலையில் முகத்தை நன்றாக கழுவி விடுவது சருமத்தில் ஈரப்பதம் தங்குவதற்கு வழிவகை செய்யும்.
மேக்கப்பை நீக்குவதற்கு கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம். அது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கும். மேக்கப் துடைப்பானில் சிறிதளவு கற்றாழை ஜெல் தடவி சருமத்தை சுத்தப்படுத்துங்கள். அது எளிதில் மேக்கப்பை நீக்கிவிடும். கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மசாஜ் செய்துவருவதும் சருமத்திற்கு நல்லது.
மேக்கப்பை நீக்குவதற்கு தேனையும் பயன்படுத்தலாம். காட்டன் பஞ்சுவில் சில துளிகள் தேனையும், பேக்கிங் சோடாவையும் கலந்து சருமத்தில் தடவி நீக்கவேண்டும். அது எளிதில் மேக்கப்பை நீக்கி முகத்தை சுத்தப்படுத்திவிடும். லிப்ஸ்டிக் பயன்படுத்துபவர்கள் உதட்டில் இந்த கலவையை பூசலாம்.
கண் இமை களில் போடப்படும் மேக்கப்பை நீக்குவதற்கு பாலை உபயோகிக்கலாம். பருத்தி பஞ்சுவை பந்துவாக உருட்டி அதனை பாலில் ஊறவைத்து சிலதுளி பாதாம் எண்ணெய் கலந்து கண்களை சுற்றி தடவி வரலாம். முகத்திற்கும் பயன்படுத்தலாம். பால் சருமத்துக்கு தேவையான ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு மட்டுமல்லாமல் சருமத்திற்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களையும் வழங்கும் தன்மை கொண்டது.
ரோஸ் வாட்டரை கொண்டும் முகம், உதட்டில் பூசப்பட்டிருக்கும் மேக்கப்பை அகற்றலாம். அது சரும துளைகளில் படிந்திருக்கும் ரசாயனத்தை அப்புறப்படுத்திவிடும். அதன் பிறகு ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்ட கிரீமை சருமத்தில் பூசவேண்டும்.