வீட்டிலேயே பேஷியல் செய்து கொள்வது எப்படி?
முதல்முதலாக வீட்டில் ஃபேஷியல் செய்து கொள்ள நினைப்பவர்கள் முறையான ஃபேஷியல் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதுவரை உங்கள் சருமத்துக்கு ஏற்ற ஃபேஷியல் செய்திருப்பீர்கள். அதையே நீங்கள் இப்போதும் முயற்சிக்கலாம். அல்லது வீட்டில் இருக்கும் பழங்கள், காய்கறிகள், உலர் பருப்புகள் என்று இருப்பதை கொண்டும் செய்துகொள்ளலாம். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது முழுமையான ஃபேஷியல் செய்வது எப்படி என்பது மட்டும் தான். தெரிந்துகொள்வோமா?
முகத்துக்கு செய்யும் பராமரிப்பு எதுவாக இருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது முகத்தை சுத்தம் செய்வது. முகத்தில் இருக்கும் ஒப்பனை பொருள்கள் கலையவும், முகத்தில் இருக்கும் அழுக்குகளை முழுமையாக வெளியேற்றுவதும் மிகவும் முக்கியம்.
ஆலிவ் எண்ணெய், வைட்டமின் இ ஆயில் அல்லது சுத்தமான தேங்காய் எண்ணெய் ஏதாவது ஒன்றை இலேசாக சுத்தமான காட்டனில் நனைத்து முகம், கண்கள், வாய், கழுத்து பகுதியில் நன்றாக துடைத்து முகத்தை உங்கள் சருமத்துக்கேற்ற ஃபேஷ் வாஷ் கொண்டு சுத்தமாக கழுவி உலரவிடுங்கள். சருமத்தின் அழுக்கு நீங்கி முகம் அடுத்த கட்டத்துக்கு தயாராக இருக்கும்.
இரண்டாவதாக முகத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் சருமத்துளைகளில் இருக்கும் அழுக்குகள் முழுமையாக வெளியேறும். இறந்த செல்கள் நீங்கினாலே முகத்தில் புத்துணர்ச்சியும் அழகும் கூடிவிடும்.
ஸ்க்ரப் செய்ய பயன்படுத்தும் பொருள்கள் என்று யோசிக்க வேண்டாம். எண்ணெய் சருமமாக இருந்தால் வீட்டிலிருக்கும் ஓட்ஸ், கோதுமை தவிடு வறண்ட சருமத்தை கொண்டிருந்தால் காபித்தூளை கொண்டு ஸ்க்ரப் செய்யவும். சிறிய அளவு பால் அல்லது பன்னீர் அல்லது நீரில் குழைத்து முகத்துக்கும், கழுத்துக்கும் தடவி வட்டவடிவில் மசாஜ் செய்யுங்கள். கண்கள், உதடு, மூக்கு நுனி பகுதிகளை ஆழமாக ஸ்க்ரப் செய்தால் அதிசயத்தக்க வகையில் கரும்புள்ளிகளும் மறையக்கூடும். பிறகு முகத்தை கழுவி விடுங்கள்.
முகத்துக்கு மசாஜ் செய்வதன் மூலம் முகத்துக்கு ரத்த ஓட்டம் வேகமாக கிடைக்கும். நீங்கள் பயன்படுத்தும் க்ரீம் இருந்தால் அதை பயன்படுத்தலாம். அல்லது வெண்ணெயை சிறிதளவு உள்ளங்கையில் தேய்த்து முகம் முழுக்க தடவி கீழிருந்து மேல் நோக்கி மசாஜ் செய்யுங்கள். நெற்றி , கன்னம், தாடை பகுதியில் சிறிது தட்டி தட்டியும், கீழிருந்து மேல் நோக்கியும், புருவங்களின் முனையில் ஒரு அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யுங்கள். பத்து முதல் 15 நிமிடங்கள் வரை முகத்துக்கு மசாஜ் செய்து மிதமான நீரில் முகத்தை கழுவி கொள்ளுங்கள். மேல் நோக்கி மசாஜ் செய்வதன் மூலம் சருமம் தளராமல் இருக்கும்.
முகத்துக்கு ஆவி பிடிப்பதன் மூலம் சருமத்தின் துளைகள் திறக்கப்பட்டு அழுக்குகள் வெளியேற உதவும். மண் சட்டி உபயோகிப்பது மிகவும் நல்லது. சற்று முகத்துக்கு இணையான அகலத்தில் இருக்கும் பாத்திரத்தில் பாதி அளவு வெந்நீர் ஊற்றி உங்கள் முகத்தை அதில் காட்டுங்கள். வலதுபக்க கன்னம், இடது பக்க கன்னம், மூக்கு பகுதி, வாய்ப்பகுதி அனைத்தையும் சுற்றி சுற்றி காட்டுங்கள். முகத்தில் இருக்கும் முகப்பருக்களையும் நீக்கி முகத்துக்கு தனி பொலிவு கொடுப்பதை பார்க்கலாம். அடிக்கடி ஃபேஷியல் செய்வதும் அடிக்கடி முகத்துக்கு நீராவி பிடிப்பதும் தவறு. மாதம் ஒரு முறை நீராவி பிடிக்கலாம்.
ஏற்கனவே அழகு படுத்திய உங்கள் முகத்தை இறுதியாக நீங்கள் விரும்பும் பேக் பயன்படுத்தலாம். உங்கள் சருமத்துக்கேற்ற பேக் எதுவென்று தேர்வு செய்ய முடியாவிட்டால் ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ், வாழைப்பழம், பாசிப்பயறு தேன் கலவை, வெள்ளரிக்காய் பேக் போன்றவற்றை பயன்படுத்தலாம். இவை அனைத்து சருமத்துக்கும் ஏற்றதும் கூட.
பிறகு 30 நிமிடங்கள் முகத்தை உலர விட்டு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விட்டால் முகம் ஃபேஷியலால் பளபளக்கும். இறுதியாக உங்கள் முகத்தில் சருமத்துளைகள் மூடிக்கொள்ள ஐஸ்கட்டி கொண்டு முகத்தை டோன் செய்யவும். அல்லது டோனருக்கு நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் பொருளை கொண்டும் செய்துகொள்ளலாம். பிறகு மாய்சுரைசர் போட்டுகொண்டால் நீங்கள் செய்து கொண்ட ஃபேஷியலுக்கு ஒரு சலாம் போட்டு கொள்ளலாம்.