உறவுகள்புதியவை

தம்பதிகளை சண்டை போட வைக்கும் சமூக வலைத்தளங்கள்

தம்பதிகளை சண்டை போட வைக்கும் சமூக வலைத்தளங்கள்

கணவன் – மனைவி இடையே ஏற்படும் இன்றைய இல்லற சிக்கல்களுக்கு முக்கிய காரணமாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றன சமூக வலைத்தளங்கள். எங்கோ மூலை முடுக்குகளில் இருப்பவர்களை ஒன்றிணைப்பதாக கூறப்படும் சமூக இணைய தளங்கள் ஒரே வீட்டில், ஒரே அறையில் இருக்கும் தம்பதிகளை பிரித்துவிடுகிறது. இளம் பெண்கள், காதலால் கற்பிழப்பது, தற்கொலை செய்வது, மானபங்கப்படுவது போன்ற சம்பவங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, வேடிக்கையாய் வெளியிடும் புகைப்படங்களும், விமர்சனங்களும்கூட கணவன்-மனைவி இடையே மனக்கசப்பை வளர்த்து, விவாகரத்து வரை கொண்டுபோய்விடுகிறது.






அமெரிக்காவில் 20 சதவீத விவாகரத்திற்கு சமூக வலைத்தளங்கள் காரணமாக இருக்கின்றன என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அதாவது 5 விவாகரத்துகளில் ஒன்று சமூக வலைத்தள பிரச்சினையால் உருவானதாக அறியப்படுகிறது. இந்தியாவில் இதுபோன்ற புள்ளிவிவரங்கள் வெளியாவதில்லை என்றாலும், கணக்கெடுப்பு நடத்தினால் இந்திய விவாகரத்து சதவீதம் இதையும் மிஞ்சும் என்று கூறலாம்.

ஏனெனில் இங்கு சமூகவலைத்தளம் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கையாளத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். எவை, எவை அச்சுறுத்தலாக மாறும் என்பது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் சகஜமாக, விதவிதமான போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். செல்போன் எண்கள், உண்மையான முகவரி முதல் தங்களது தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் குறிப்பிட்டு பதிவிடுகிறவர்களும் உண்டு. எல்லோரும் தொடர்புகொள்ளும் விதத்தில் இணைய பக்கத்தை வைத்திருப்பவர்கள் தங்களை அறியாமலே சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் அறிமுகம் இல்லாதவர்கள் நுழைவார்கள் என்ற விழிப்புணர்வு கொண்ட பெண்கள்கூட, வாட்ஸ் ஆப் வலைத்தளத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். நமக்கு அறிமுகமுள்ள, நம்மை அறிந்தவர்கள்தானே நமது வாட்ஸ் ஆப் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு பிரச்சினையை வரவழைத்துக் கொள்கிறார்கள். புகைப்படங்கள் நண்பர் மூலமாகவோ, பகிர்தல் மூலமாகவோ, குழு மூலமாகவோ மற்றவர்களுக்குச் செல்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.

சமூக இணையதளங்கள் வந்ததில் இருந்து அறிமுகமில்லாத புதிய நட்பால் கற்பை இழந்தவர்கள், நகை, பணம் இழந்தவர்கள், மானபங்கப்படுத்தப்பட்டவர்கள் என உலகம் முழுக்க பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். பலர் மேலும் அசிங்கப்பட வேண்டியிருக்கும் என்று கருதி காவல் நிலையம் செல்லாமல், வலைத்தள கணக்கை மூடிவிட்டு, செல்போன் எண்களை மாற்றிக்கொள்வதும் அதிகரித்து வருகிறது.

விவாகரத்திற்கு வழிவகுத்த தகவல் பரிமாற்றங்கள் நிகழ்ந்த சமூக வலைத்தளங்கள் எவை என்பது பற்றி அமெரிக்காவில் ஒரு புள்ளிவிவரம் சேகரிக்கப்பட்டது. அதில் 66 சதவீதம் பேர் பேஸ்புக்கை குறிப்பிட்டுள்ளனர். மை ஸ்பேஸ் தளம் 15 சதவீதமும், டுவிட்டர் 5 சதவீதமும் பாதிப்புக்கு துணையிருந்ததாக விவாகரத்திற்கு விண்ணப்பித்தவர்கள் கூறி உள்ளனர்.






மனைவி படுக்கை அறைக்கு வந்தபிறகு, கணவர் தன்னுடைய நண்பர்களுடன் நீண்ட நேரம் செல்போனில் சமூகவலைத்தளம் வழியாக உரையாடுவது மனைவிமார்களை ஆத்திரப்பட வைத்திருக்கிறது. அதே நேரம் மனைவி தனது நெருங்கிய வட்டத்துடன் சமூகவலைத்தளங்களில் உறவாடும்போது, கணவர் இன்னும் ஆக்ரோஷம் காட்டுவதும், சந்தேகம் அடைவதும் அதிகரித்து பிரச்சினைக்கு வழிவகுத்துவிடுகிறது.

வாட்ஸ் ஆப் வலைத்தளம் வந்தபிறகு இந்த பிரிவுகளும், உறவு மோதல்களும் பெருமளவு அதிகரித்திருக்கின்றன. இந்த தளத்தில் ஒருவர் எப்போது செய்தியை பார்த்தார் என்பதை அறிய முடியும் என்பதால் அன்புக்குரியவர், தான் அனுப்பிய தகவலைப் பார்த்தாரா, பார்க்கவில்லையா என்பதை கணித்து அதையும் பிரச்சினை யாக்கிவிடுகிறார்கள். ‘ஆன்லைனில் இருந்துகொண்டு தன் கேள்விக்கு பதில் அளிக்காமல் இருக்கிறாரே, நீண்ட நேரம் யாருடன் உரையாடிக் கொண்டிருப்பார்?’ என்பது போன்ற கேள்விகளும், சிந்தனைகளும் நிறைய குடும்பங்களில் சந்தேக விதைகளைத் தூவுகின்றன.

கடைசியாக எப்போது வாட்ஸ் ஆப்பை திறந்தார் என்ற நேரத்தை கணிக்க முடிவதால், இரவு வெகுநேரம் கழித்து இணையத்தை திறக்கும் கணவர் மனைவியிடமும், மனைவி கணவரிடமும் மாட்டிக் கொண்டு முழிக்கும் சூழலை உருவாக்குகிறது. நாம் தூங்கிய பிறகு யாரிடம் உரையாடினார், என்ன பேசியிருப்பார் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமும், சந்தேகமும் பிரச்சினைக்கு அடித்தளமிடுகிறது.

நண்பர்கள், தோழிகள், காதலிகளின் புகைப்படத்தை ஸ்டேட்டஸாக வைத்தாலோ அல்லது பாராட்டி எழுதினாலோ அதை தவறாக புரிந்து கொண்டு அவருக்கும், இவருக்கும் என்ன உறவு? என்ற சந்தேக கண்ணோட்டத்துடன் சிலர் பின்தொடர தொடங்குகிறார்கள். அது மோசமான பின்விளைவுகளை உருவாக்குகிறது. பிறந்த நாள் கொண்டாட்டம், சுற்றுலா சென்றது, விழாக்களில் பங்கேற்றது போன்ற மகிழ்ச்சியான தருணங்களை புகைப்படங்களாக வெளியிடுவதை இன்று பலரும் விரும்புகிறார்கள். ஆனால் அதுவும் பிற்காலத்தில் பிரச்சினையாக மாறும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

விழாவில் தோழியுடன் எடுத்த படத்தைக் காட்டி அவள் யார்? என்று விசாரிக்கும் மனைவிமார்கள் உண்டு. அடுத்து அவளை எப்போதெல்லாம் சந்திக்கிறார் என்பதை அறிந்து கொள்ள ஆவல் காட்டுவார்கள், அல்லது அதையே சந்தேக நோக்குடன் பார்ப்பார்கள். அடுத்து அலுவலக மீட்டிங் என்றோ, விழா என்றோ கூறினால் அந்த தோழியும் இடம்பெறுவாளா என்று நோட்டமிடுவார்கள். இது கணவன், மனைவி இருவருக்கும் பொருந்தும்.

கணவரின் பேஸ்புக், டுவிட்டர் பாஸ்வேர்டுகள் தங்களுக்கும் தெரியவேண்டும் என்று விரும்பும் பெண்கள் நிறைய பேர் உள்ளனர். அதிலும் இணையதள பிரச்சினைகளை அறிந்தவர்கள் கணவரின் கணக்கையே தனது கணக்காக பயன்படுத்துவதும் உண்டு. அப்படியிருக்கும்போது நண்பன் என நினைத்து அவருடைய மனைவியிடம் உறவாடும் ஆண் நண்பர்கள், ரகசியங்களை பகிர்ந்து கொண்டு சிக்கலை கிளப்பியிருக்கிறார்கள். மனைவியின் தோழிகளுடன் நட்பு பாராட்டி, அதனால் மனைவியின் கோபத்துக்கு ஆளான ஆண்களும் இருக்கிறார்கள்.






வலைத்தளங்களில் ஞாபகப்படுத்தும் விதமாக பழைய புகைப்படங்களையெல்லாம் அள்ளிக் கொண்டுவந்து காண்பிக்கும் வசதி உண்டு. அப்போது பழைய தோழிகள், பழைய ஆண் நண்பர்களைப் பற்றிய புகைப்படத்தை கணவரோ, மனைவியோ பார்க்கும் சூழல் ஏற்பட்டதால், சிலரது வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. தற்கால விவாகரத்து வழக்குகளின்போது வாட்ஸ் ஆப் மெசேஜ்கள், வலைத்தள புகைப்படங்கள் ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்படுகின்றன. விவாகரத்து வழக்கில் ஜீவனாம்சம் கேட்ட பெண்கள், விவாகரத்திற்குப் பிறகு, கணவர் சுற்றுலா சென்றது, கொண்டாட்டங்களில் கலந்து கொண்டது பற்றிய புகைப்படங்களைக் காட்டி, அதிக சம்பாத்தியம் இருப்பதாக கூறி ஜீவனாம்சத்திற்கும், குழந்தை பராமரிப்பிற்கும் கூடுதல் தொகை கேட்ட முறையீடுகளும் நிகழ்ந்துள்ளன.

குழந்தைகளை தாங்கள்தான் பராமரிப்போம் என்று கூறி குழந்தையை தன்வசம் வைத்துக் கொண்ட தாய், வேலைக்குச் சென்று தாமதமாக வருவதையும், பார்ட்டிகளில் கலந்து கொண்டதையும், அப்போது மற்றவர்களுடன் சேர்ந்திருப்பதையும் வலைத்தளங்களில் அறிந்து கொண்டு, அவற்றை காரணம் காட்டி, குழந்தை மீது அதிக அக்கறை காட்டாதவர் என்று கூறி குழந்தையை தன்னுடன் அழைத்துச் செல்ல அனுமதி கேட்டும் மேலைநாடுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.






எனவே சாதாரண விஷயங்களும், சமூக வலைத்தளங்களால் பிரச்சினைக்குரியதாக மாறும் அபாயம் நிறைய உண்டு. எனவே திருமணத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி, விவாகரத்து ஆனாலும் சரி, இணையதளம் என்றால் எச்சரிக்கை அவசியம். இல்லாவிட்டால் உங்கள் வாழ்க்கை மற்றவர் ரசிக்கும் வேடிக்கைக் களமாக மாறிவிடும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker