உறவுகள்

முதியோரை புறக்கணிப்பது முறையா?

முதுமை என்பதே இரண்டாவது குழந்தைப் பருவம் தான். பிள்ளைகளைப் பெற்று, சீராட்டி, பாராட்டி, வளர்த்து, ஆளாக்கி விட்டு, பெற்றோர்கள் தலை நிமிரும் போது, அவர்களுக்கு முதுமை ஆரம்பித்து விடுகிறது. பெற்ற பிள்ளைகள் வளர்ந்ததும், பெற்றோரைப் பாதுகாக்க வேண்டும் என்பது சட்டமல்ல; மனிதாபிமான அடிப்படையிலான ஒரு கடமையுணர்வு. விலங்கினத்திற்கும், மனிதர்களுக்கும் வேறுபாடு காட்டுவதே வயது முதிர்ந்த பெற்றோரைப் பாதுகாக்கும் ஒரு நற்பண்பு தான். ஆனால், நம் நாட்டில் இந்த பண்பு குறைந்து கொண்டே வருகிறது.

படிப்பை முடித்து பணத்தைத் துரத்தும் வேலை தேடி, அயல்நாடு செல்லும் பிள்ளைகள் பெற்றோர்களுக்கு அயலார் ஆகிவிடும் கொடுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியப் பண்பாடு மேலை நாட்டுக் கலாசாரத்தால் தாக்குண்டு, மனித நேயமற்று, பிள்ளைகள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் தவிக்க விடுகின்றனர்.



விலங்குகளிடையே இருக்கும் பரிவு, பாசம் கூட மனிதரிடையே இல்லாமல் போனது தான் விந்தை. யார் மீது தவறு?. “அறஞ் செய விரும்பு ஆறுவது சினம்” என ஒழுக்கத்தையும் கல்வியுடன் புகட்டிய, கல்வி முறையை மாற்றி ஆங்கில வழிக் கல்விக்கு மாற்றிய பெற்றோர்களா?; அல்லது ‘நிறையப் படி பெரிய வேலைக்குப் போ’ எனத் துரத்தி துரத்திப் படிக்கச் சொல்லி, பண்புள்ள பழக்க வழக்கமுள்ள கல்வி முறையைப் புகுத்தத் தவறிய அரசாலா?; அல்லது பெற்றது அவர்கள் கடமை, வளர்த்ததும் அவர்கள் கடமை மாற்றாக பிள்ளைகளை எதிர் பார்ப்பதில் எந்த விதத்தில் நியாயம்? என வினா எழுப்பும் மனப் பான்மையோடு வளர்ந்த பிள்ளைகள், யாரும், யார் மீதும் குற்றம் சுமத்த முடியாத ஒரு சமூக சீரழிவு தான் முதியோர்களைக் கை விடும் பழக்கம்.

பெற்றோர்களையும், முதியோர்களையும் புறக்கணிக்கும் இளைஞர்களுக்கு உணர்த்தும் விதமாக சட்டங்களையும், சலுகைகளையும் மத்திய மாநில அரசுகள் தாமாக முன் வந்து செய்கின்றன.

பயணங்களில் கட்டணச் சலுகை, வரிசையில் முன்னுரிமை, வரி செலுத்துவதில் முதியோர்களுக்குச் சலுகை, பயண இருக்கைகளில் சலுகை, வங்கிகளில் முதியோர் வசிக்கும் வீட்டின் பேரில் தொகை ஏற்படுத்தி அந்த தொகைக்கான வட்டியை மாதந்தோறும் அவர்களுக்கு வழங்குவது என நிறைய சலுகைககள் இருந்தாலும் பிள்ளைகளின் அரவணைப்பு அவர்களுக்கு அவசியமே.

நாளேடுகளில் படிக்கும் செய்திகள் யாவும் கவலைக்குரியனவாகவே இருக்கின்றன. மது குடிக்கப் பணம் கொடுக்க மறுத்த தந்தையைக் கொன்ற மகன்; சொத்துரிமையைத் தன் பெயருக்கு மாற்றாத தாயைக் கொன்ற மகன்; தந்தையின் சொத்தை எழுதி வாங்கிக் கொண்டு, அவர்களைப் பராமரிக்காமல் நிற்கதியாய் விட்ட பிள்ளைகள் என நிறையப் படிக்கிறோம்.



இம்மாதிரி சமூக சீர்கேட்டைச் சரி செய்யவே ‘பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நல் வாழ்வுச் சட்டம், 2007’ என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தி, 2009-ம் ஆண்டு நிறைய விதிகளையும் வகுத்தது அரசு. இச்சட்டத்தின் மூலம் 60 வயதும் அதற்கு மேற்பட்ட வயதில் உள்ள பெற்றோர் மற்றும் முதியோர் தங்களால் தங்களைப் பராமரித்துக் கொள்ள இயலாத போது, வாரிசுரிமையுள்ள மகன்கள், மகள்கள்,பேரன்கள், பேத்திகள் ஆகியோரிடம் ஜீவானம்சம் கோரி விண்ணப்பிக்கலாம். இவ்விண்ணப்பம் அவர்கள் வசிப்பிடம் உள்ள பகுதியை ஆட்சி செய்யும் கோட்டாட்சியர் பரிபாலனத்தில் உள்ள தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். முதியோர்கள், அல்லது அவர்களால் நியமிக்கப்படும் நபர், அல்லது அரசாங்கத்தால் நியமிக்கப்படும் ஜீவனாம்ச அதிகாரிகள் ஆகியோர் மட்டும்தான் முன்னிலையாகி வழக்கை நடத்த முடியும். இவர்கள் சார்பாக இந்த வழக்கில் வக்கீல்கள் ஆராக முடியாது.

இந்த தீர்ப்பாயத்திற்கு மேல், ஒரு மேல் முறையீட்டுத் தீர்ப்பாயம் அந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் இயங்கும். அங்கு மேல் முறையீடு செய்து கொள்ளலாம். மனு தாக்கல் செய்த தேதியிலிருந்து அல்லது ஆணை பிறப்பிக்கும் தேதியிலிருந்து ஜீவனாம்சம் வழங்க ஆணையிடலாம். ஜீவனாம்ச தொகையுடன் 5 சதவீதம் முதல் 18 சதவீதத்திற்குள் வட்டி கணக்கிட்டு வழங்கும் படி ஆணையிடலாம். அவ்வாறு ஜீவனாம்ச தொகை கொடுக்காமல் இருந்தால், மூன்று மாதங்களுக்குள் பாதிக்கப் பட்டவர் மனு செய்வாரேயானால், ஜீவனாம்சம் கொடுக்காத வாரிசை வாரண்டு மூலம் கைது செய்து சிறையிலடைக்க முடியும்.



இன்னொரு முக்கியமான அம்சம், இச்சட்டத்தின் மூலம் நீதிமன்ற அனுமதி இல்லாமல் காவல் துறையினர் கைது செய்ய உரிமையுண்டு. குற்றம் நிரூபிக்கப் பட்டால் மூன்று மாத சிறை தண்டனை அல்லது ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஆணையிடலாம். முதியோர்க்கு தொடர் மருத்துவ சிகிச்சையும் அளிக்க வேண்டும். இந்தச் சட்டம் முதியோர்க்கு அனுகூலமானது. அண்மையில் நாமக்கல் மாவட்டத்தில் பெற்றோர்களிடம் சொத்தினை எழுதி வாங்கிக் கொண்டு, பராமரிக்காத பிள்ளைகளின் பத்திரப் பதிவு ரத்து செய்யப் பட்டு பெற்றோரிடமே சொத்து ஒப்படைக்கப் பட்ட செய்தியைப் படித்திருக்கலாம்.

பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைக்குத் தானமாக கொடுத்த சொத்துப் பத்திரத்தை ரத்து செய்து பெற்றோருக்கு திரும்ப வழங்க ஆணையிட்ட உச்சநீதி மன்ற தீர்ப்பும் கவனத்திற்குரியது. மக்களிடையே இச்சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டால், பெற்றோரையும், முதியோரையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்களுக்கு இயற்கையாகவே எழும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker