ஆரோக்கியம்

இரத்தம் சிவப்பாக இருப்பது ஏன்?

ஒரு மனிதனின் உடலில் சுமார் 3 முதல் 4 லிட்டர் வரை இரத்தம் உள்ளது. திறப்பில்லாத தமனி, சிரை தந்துகிகளின் வழியாக இரத்தம் உடல் முழுவதும் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கிறது. உலகிலுள்ள எல்லாப் பகுதிகளிலும் வாழும் ஆண்கள், பெண்களின் உடலில் ஓடுவது சிவப்பு நிற ரத்தமே.

இரத்தத்தின் நிறத்திற்கும் தோலின் நிறத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. இரத்தம் ஏன் சிவப்பாக உள்ளது தெரியுமா? இதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு இரத்தத்திலுள்ள பொருள்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இரத்தத்தில் பிளாஸ்மா, இரத்த வெள்ளைஅணுக்கள், இரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் இரத்தத் தட்டுகள் ஆகியவை அடங்கியுள்ளன. இரத்தத்தில் பாதியளவுக்கு மேல் பிளாஸ்மா நிரம்பி உள்ளது. இது மஞ்சள் நிறமுள்ள தடித்த திரவமாகும். இதில் புரதம், ஆன்டிபாடி, பைபிரி னோஜின், மாவுப் பொருள், கொழுப்பு, உப்புகள் முதலானவை உள்ளன.உடல் வளர புரதமும், விஷக்கிருமிகளை கொல்லவும், அவற்றின் விஷ நீரின் வீரியத்தைக் குறைக்க ஆன்டிபாடியும் வெட்டுக் காயத்திலிருந்து வரும் இரத்தத்தை நிறுத்த பைபிரினோஜினும் உதவுகின்றன. இரத்த வெள்ளைஅணுக்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவாகவும், பருமனில் பெரியதாகவும் உள்ளன. இவை சுமார் 0.001 மி.மீ. பருமன் உள்ளன. 700 இரத்த சிவப்பணுவிற்கு ஒரு வெள்ளையணு வீதம் உள்ளன. இவை உடலில் நுழைந்து நோய் உண்டாக்கும் கிருமிகளை அழித்து உடலை நோய்த் தாக்குதலில் இருந்து காப்பாற்றி பாதுகாக்கின்றன.

இரத்த சிவப்பணு ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. இவை தட்டுப் போன்று வட்டமாக இருபுறமும் குழியாக உட்கரு இன்றி உள்ளன. இவை சுமார் 0.008 மி.மீ. பருமனுள்ளவை. பிராண வாயுவை நுரையீரல்களிலிருந்து உடலின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. இதனுள் சிவப்பு நிற ஹீமோகுளோபின் துகள்கள் நிறைந்துள்ளன. இவை சிவப்பாக இருப்பதுடன் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கின்றன. இத்துகள்கள் இரும்பையும் புரதத்தையும் கொண்டுள்ளன.பெண்ணின் ஒரு கியூபிக் மி.மீ. ரத்தத்தில் சுமார் 4.5 மில்லியன் இரத்தச் சிவப்பணுக்கள் உள்ளன. இரத்த சிவப்பணுக்கள் குறைந்தால் அனீமியா நோய் தோன்ற வாய்ப்புள்ளது. சிவப்பணு சுமார் 4 மாதங்கள் ஆயுள் கொண்டவை. இவை எலும்பு மஜ்ஜையில் தோன்றி மண்ணீரலில் அழிகின்றன.

இரத்தத்தட்டுகள் மிகச்சிறியவை 0.002 மி.மீ. பருமனுள்ளவை. ஒரு கியூபிக் மி.மீ. இரத்தத்தில் சுமார் ஒன்றரை லட்சம் முதல் 4 லட்சம் இரத்தத் தட்டுக்கள் உள்ளன. இரத்தம் உறைதலுக்கு இத்தட்டுக்கள் முக்கியமானவை. இரத்த தானத்தால் உடல் புத்துணர்வு பெறுகிறது. மேலும் மாரடைப்பு உள்பட பல பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker