இடைவிடாமல் டி.வி. பார்ப்பதாலும், செல்போன் பயன்படுத்துவதாலும் கண்களுக்கு பாதிப்பு
கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால், பொதுமக்கள் பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்ற னர். அத்தியாவசிய தேவைக்காக மட்டும் பொதுமக்கள் காலை நேரங்களில் வெளியில் வருகின்றனர். மற்ற நேரங்களில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இவ்வாறு வீட்டில் இருக்கும்போது, பொதுமக்கள் பலர், குறிப்பாக இளைஞர்கள், சிறுவர்-சிறுமிகள் டி.வி. மற்றும் செல்போனை இடைவிடாமல் பார்த்து பொழுதை கழித்து வருகின்றனர். ஸ்மார்ட் போன்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் பலர் மூழ்கி விடுகின்றனர்.
டி.வி., செல்போனை இடைவிடாமல் தொடர்ந்து பார்ப்பதால் கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல் உருவாகலாம் எனக்கூறப்படுகிறது. இதுதொடர்பாக புதுக்கோட்டையை சேர்ந்த கண் மருத்துவ சிகிச்சை பெண் நிபுணர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
பொதுவாக டி.வி., செல்போன் அதிகம் பார்ப்பதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஊரடங்கில் செல்போனை பயன்படுத்துவதும், டி.வி. பார்ப்பதும் அதிகரித்துள்ளது. செல்போனில் உள்ள வெளிச்சம் கண்களை பாதிப்படையாமல் இருக்கும் வகையில் பயன்படுத்த வேண்டும். ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவர்கள் இருளில் அமர்ந்து செல்போனை பார்க்க கூடாது. தொடர்ந்து இடைவிடாமல் செல்போனை பயன்படுத்தக்கூடாது. இதனால் கண்களில் விழித்திரை பாதிப்படையும்.
கண் பார்வையை பாதிக்காத வகையில் கண்ணாடிகள் அணியலாம். குறிப்பிட்ட நேரம் இடைவெளி விட்டு செல்போன் பயன்படுத்தலாம், டி.வி. பார்க்கலாம். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து டி.வி. பார்ப்பதையும், செல்போன் பயன்படுத்து வதையும் தவிர்த்து விட வேண்டும். இதேபோல குழந்தைகளும் அதிகம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
கண்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வைட்டமின் ‘ஏ‘ வகை உணவுகளான பால், கேரட், தக்காளி, மாம்பழம், மீன், ஆட்டு இறைச்சி, கீரை ஆகியவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். இவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் கண் பார்வையில் பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.