அழகு..அழகு..

ஆண்களுக்கு அதிக கவலையை ஏற்படுத்தும் வழுக்கைத் தலை

ஆண்களில் 90 சதவீதம் பேருக்கு அதிக கவலையை ஏற்படுத்தும் விஷயம் என்ன தெரியுமா? வழுக்கை தலை. தங்கள் தலை வழுக்கையாகிவிட்டால், அழகே குலைந்துபோய் விட்டதாகவும், வயது திடீரென்று அதிகமாகிவிட்டது போலவும் உணர்கிறார்கள்.

ஆண்களில் பலரும், தங்கள் தலை வழுக்கையாகிவிடக்கூடாது என்று கருதினாலும், நடப்பது நேர் எதிராகத்தான் இருக்கிறது. வழுக்கைக்கு காரணமான முடி உதிர்வு, ஆண்கள் 30 வயதை கடக்கும்போதே தொடங்கிவிடுகிறது. 87 சதவீத ஆண் களுக்கு இந்த காலகட்டத்தில்தான், முடி அடர்த்தி குறைந்து வழுக்கைக்கான ஆரம்ப அறிகுறி தென்படுவதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முன்பு 40 வயதுகளில் தெரிந்த இத்தகைய அறிகுறிகள் தற்போது 20 வயதிலே சிலருக்கு தெரிவது கவனிக்கத்தக்கது. நெற்றியின் அருகில் உள்ள முடி குறைந்து, மேல் பகுதி முடியின் அடர்த்தி குறைவதை கருத்தில் கொண்டு பெரும்பாலான இளைஞர்கள், தங்களும் எதிர்காலத்தில் வழுக்கைத் தலையர்களாகி விடுவோமோ என்று கவலை கொள்கிறார்கள்.வழுக்கைத் தலை உள்ளவர்களின் தேவையை உணர்ந்து, இப்போது தலையில் முடியை நட்டு வைக்கும் சிகிச்சைகள் நடந்துகொண்டிருந்தாலும் இளைய தலைமுறையினர் வழுக்கைத்தலை ஆகும் முன் காப்பதே சிறந்தது. உங்கள் தலை வழுக்கையாகிவிடாமல் தடுக்க புதிய ஆய்வுகள் சொல்லும் கருத்துக்களை கவனியுங்கள்.

தலைப்பகுதியை, குறிப்பாக மண்டை ஓட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். தொலைதூர பயணங்கள் சென்று வந்தால் உடனடியாக குளியுங்கள். மண்டை ஓட்டுப் பகுதியையும் கழுவி சுத்தம் செய்யுங்கள்.பொடுகு சாதாரண அளவில் இருந்தால் பிரச்சினை இல்லை. கூடுதலாக பற்றிப்பிடித்த நிலையில் இருந்தாலோ, சிவப்பாகவும்-தடித்தும் காணப்பட்டாலோ, அரிப்புத் தன்மை அதிகமாக தோன்றினாலோ, சரும நோய் டாக்டரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

முடி நன்றாகவும், அடர்த்தியாகவும் காணப்பட வேண்டும் என்பதற்காக, விளம்பரங்களில் பார்த்த எண்ணெய், கிரீம், ஜெல், ஷாம்பு போன்றவைகளை பயன்படுத்தாதீர்கள். அவை இருக்கிற முடிக்கும் பாதிப்பை உருவாக்கிவிடலாம்.

உணவிலும் அதிக அக்கறை காட்டுங்கள். போதுமான அளவில் சத்தான உணவுகளை உண்ண வேண்டும். உடலில் சத்துக்கள் குறைந்தால், அது முடி உதிர்தலுக்கு காரணமாகிவிடும்.

மன அமைதியும் தேவை. வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை நினைத்து வருந்தி, புலம்பிக்கொண்டிருந்தால் மன அழுத்தம் தோன்றும். அதனாலும் முடி உதிரும். மன அழுத்தத்தை உங்களால் குறைக்க முடியாவிட்டால் அதற்குரிய நிபுணரின் கவுன்சலிங் பெறுங்கள்.வழுக்கையை போக்குவதற்கு பலவிதமான சிகிச்சைகள் இருந்தாலும், அவை களின் பலன் தாமதமாகத்தான் கிடைக்கும். அத்தகைய சிகிச்சைகளில் சில பின் விளைவுகளும் உண்டு.

ஆண்மை ஹார்மோனான ‘டை ஹைட்ரோ டெஸ்டோஸ்டிரான்’ தாக்கமே, வழுக்கைக்குக் காரணமாக இருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் மருந்தினை கொடுக்கும்போது முடி உதிர்வது குறையும். மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக இந்த மருந்தினை சாப்பிட்டால்தான் ஓரளவாவது பலன் கிடைக்கத் தொடங்கும். ஆனால் இதற்கான மருந்தை அதிக நாட்கள் சாப்பிடும்போது ஆண் களுக்கு மார்பக வளர்ச்சி ஏற்படலாம். அவர்களுக்கு பாலியல் ஆர்வம் குறைவதோடு, மன அழுத்தம் ஏற்படவும் இடமுண்டு.

மண்டை ஓட்டில் பூசுவதற்கான மருந்துகளும் இருக்கின்றன. அவை முடியின் வேர்க்காலில் செயல்பட்டு வளர்ச்சியைத் தூண்டும். ஆனால் அந்த மருந்துகள் சிலருக்கு தலைவலியையும் அலர்ஜியையும் தோற்றுவிக்கும்.வழுக்கையை மறைக்க தற்காலிக நிவாரணங்களும் இருக்கின்றன. ‘விக்’ வைத்து வழுக்கையை மறைக்க முடியும். ஆனால் மற்றவர்கள் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் பலரும் இதை பயன்படுத்துவதில்லை. ‘ஹேர் வீவிங்’ என்பது இருக்கிற முடியில் ‘கிளிப்’ மூலம் கூடுதல் முடிகளை இணைப்பது. ஆனால் ‘கிளிப்’களின் பயன்பாட்டால் இருக்கிற முடியும் பாதிக்கப்படலாம்.

‘ஹேர் பிக் ஷிங்’ என்பது ஒருவித பசை மூலம் கூடுதல் முடிகளை ஓட்டுவது. இதை எளிதாக மற்றவர்களால் கண்டறிய முடியாது என்றாலும், இதை தினமும் ஒட்டுவது கடினமாக கருதப்படுகிறது. அந்த பசை ரசாயன கலப்பு கொண்டது. அதனால் அலர்ஜியும் ஏற்படலாம்.

இந்த பிரச்சினைகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் இரண்டு விதமான தீர்வினை சொல்கிறார்கள். ஒன்று: தொடக்கத்திலேயே கவனம் செலுத்தி வழுக்கை விழாமல் தவிர்ப்பது. இரண்டு: வழுக்கை வந்துவிட்டால் அதை ‘புருஷ லட்சணம்’ என்று ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வது. வேற வழி இல்லைங்க..

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker