குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்கும் நிமோனியா
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக இருந்தால், தொற்றுநோய்கள் நம்மை அண்டுவதற்கு அஞ்சும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு காயத்துக்குப் போடும் பிளாஸ்திரி மாதிரி பல நோய்கள் வந்து ஒட்டிக்கொள்ளும். அதிலும் குறிப்பாக பச்சிளம் குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்கும் நோய்கள்தான் நம் நாட்டில் அதிகம். அவற்றில் மிக முக்கியமானது, நிமோனியா.
எது நிமோனியா? :’ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே’ எனும் பாக்டீரியா கிருமிகள் காற்றில் கலந்து வந்து நுரையீரலைத் தாக்குவதால், நிமோனியா ஏற்படுகிறது. இந்த நோயுள்ளவர் இருமும்போது, தும்மும்போது, சளியைக் காறித் துப்பும்போது, இந்தக் கிருமிகள் காற்றில் கலந்து, அதைச் சுவாசிக்கும் அடுத்த நபருக்கும் தொற்றிக்கொள்ளும். எனவே, இந்த நோய் உள்ளவரோடு நெருங்கிப் பழகும் குழந்தைக்கு நிமோனியா பரவ வாய்ப்புகள் அதிகம்.
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், தேவைக்குத் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள், குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகள், அசுத்தமான இடங்களிலும், அதிக நெரிசலான இடங்களிலும், மாசு நிறைந்த சூழலிலும் வளரும் குழந்தைகள், விறகு அடுப்புப் புகையை சுவாசிக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் ஆகியோரை நிமோனியா எளிதில் தாக்கும்.
அறிகுறிகள் :இந்த நோயுள்ள குழந்தைக்குப் பசி இருக்காது. சாப்பிடாது. கடுமையான காய்ச்சல், இருமல், சளி, வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத்திணறல், உதடுகள் வெளிறிப்போவது அல்லது நீலம் பூத்துப்போவது போன்ற அறிகுறிகளும் தோன்றும். இருமும்போது நெஞ்சு வலிக்கும். குழந்தை எந்த நேரமும் அழுது கொண்டிருக்கும்; மிகவும் சோர்வாகக் காணப்படும்.
இந்த நோயைக் கவனிக்கத் தவறினால், இந்தக் கிருமிகள் நுரையீரலையும் கடந்து, ரத்தத்தில் கலந்து, உடல் முழுவதும் பரவக்கூடிய ஆபத்து உள்ளது. முகத்தில் உள்ள சைனஸ் அறைகள், எலும்பு, ரத்தம், வயிறு, காது, மூளை உறை போன்றவற்றைப் பாதித்து, உயிரிழப்பை ஏற்படுத்தும் ரத்தப் பரிசோதனைகள் மற்றும் மார்பு எக்ஸ்-ரே மூலம் இந்த நோயை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
சிகிச்சை என்ன :நிமோனியாவை இரு வகைகளாகப் பிரித்து சிகிச்சை அளிப்பது நடைமுறை. ஆரம்பநிலை நிமோனியா முதல் வகையைச் சேர்ந்தது. இதற்கு நோயாளி வீட்டில் இருந்தபடியே ஒரு வாரத்துக்குச் சிகிச்சை பெற்றால் குணமாகும். தீவிர நிமோனியா இரண்டாம் வகை. இந்த நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்து, அவர்களின் சிரை ரத்தக் குழாய்களில் தகுந்த ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் சலைனைச் செலுத்தியும், மூக்கு வழியாக ஆக்ஸிஜனைச் செலுத்தியும் சிகிச்சை தரப்படும்.
அதேநேரத்தில் நிமோனியாவை நெருங்க விடாமல் தடுக்க தடுப்பூசிகள் உள்ளன. அவற்றைக் காலத்தோடு போட்டுக்கொண்டால் ஆபத்துகள் வராது. தடுப்பூசி வகை :’பிசிவி 13′ தடுப்பூசி (PCV-13) என்பது ஒரு வகை. பச்சிளம் குழந்தைகள் முதல் 50 வயதைக் கடந்தவர்கள் வரை அனைவரும் இதைப் போட்டுக்கொள்ளலாம். குழந்தைக்கு ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதம் முடிந்தவுடன் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். இதற்கு ‘முதன்மைத் தடுப்பூசி’ என்று பெயர். அதன் பிறகு, 15 மாதங்கள் முடிந்ததும், ஊக்குவிப்பு ஊசியாக ஒரு தவணை போடப்பட வேண்டும்.
‘பிபிஎஸ்வி 23’ (PPSV 23) என்பது மற்றொரு வகை. இத்தடுப்பூசியை இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே போட வேண்டும். அதிலும் எல்லா குழந்தைகளுக்கும் இது தேவையில்லை. இதய நோய், சிறுநீரக நோய், நீரிழிவு நோய், ஆஸ்துமா, கல்லீரல் நோய், புற்றுநோய், மண்ணீரல் நோய், எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள், உறுப்பு மாற்றுச் சிகிச்சை மேற்கொள்கிறவர்கள் ஆகியோர் ‘PCV 13’ தடுப்பூசியை ஒருமுறையும், 2 மாதம் கழித்து ‘PPSV 23’ தடுப்பூசியை ஒருமுறையும் போட்டுக்கொள்வது நல்லது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ‘PPSV 23’ தடுப்பூசியை மீண்டும் ஒருமுறை போட்டுக்கொள்ள வேண்டும்.
முதியோரையும் தாக்கும் :நிமோனியா சில சமயம் பெரியவர்களையும் தாக்கும். முதுமையில் நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். அந்த நேரத்தில் நிமோனியா அவர்களைத் தாக்கினால் உடனடியாக உயிரிழப்பும் நேரலாம். இதைத் தவிர்க்க 50 வயதைக் கடந்தவர்கள் ‘பிசிவி 13’ தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக்கொண்டு, ஒரு வருடம் கழித்து ‘பிபிஎஸ்வி 23’ தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக்கொள்ள வேண்டும்.
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் நிமோனியாவால் உயிர் இழக்கின்றனர். இதில் 25 சதவீதம் பேர் இந்தியக் குழந்தைகள். அதாவது, நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது. ஆகவே, இந்த நோயை வரவிடாமல் தடுப்பதுதான் முக்கியம். இதற்குத்தான் இந்த இரண்டுவகைத் தடுப்பூசிகள் உதவுகின்றன.
சுத்தம் அவசியம் :நிமோனியா மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க சுற்றுப்புறம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டியது அவசியம். தெருக்களில் எச்சில் மற்றும் சளியைத் துப்பக்கூடாது. இருமும்போது கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும். வீடுகளில் விறகு/கரி அடுப்புகளைப் பயன்படுத்தக்கூடாது. வீட்டில் எவரும் புகைபிடிக்கக்கூடாது.
குழந்தைக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதற்கு ஆறு மாதம் முடிகிற வரை தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும். அதற்குப் பிறகு தாய்ப்பாலுடன் ஊட்டச்சத்து நிரம்பிய இணை உணவுகளை இரண்டு வயது வரை தர வேண்டும். குழந்தைக்கு உடல் சுத்தம், கை, ஆடை மற்றும் படுக்கை விரிப்புகளும் சுத்தமாக இருக்க வேண்டும்.