ஃபேஷன்

பெண்கள் விரும்பும் ஆடை வடிவமைப்பு

ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, கவர்ச்சியான வகையில் ஆடைகளை வடிவமைப்பதே ஆடைகள் வடிவமைப்புத் தொழிலாகும். மற்ற தொழில்களை காட்டிலும் ஆடைகள் வடிவமைப்புத் தொழில் முற்றிலும் மாறுபட்டதாகும். ஆடைகள் வடிவமைப்புத் தொழிலானது காலத்திற்கு ஏற்றவாறும், நாகரிகம் வளர, வளரவும் மாறும் தன்மையைக் கொண்டது.ஆடைகள் வடிவமைப்புத் தொழிலுக்கு மூலகாரணமாக இருந்தவர்கள் செல்வந்தர்களே. பணம் படைத்த செல்வந்தவர்கள் சாதாரண குடிமக்களைவிட தங்களை வித்தியாசப்படுத்தி காட்ட வேண்டும் என்பதற்காகவும், வகை, வகையான கண்ணைக்கவரும் வகையில் ஆடைகளை அணிந்து மற்றவர்களை கவரவேண்டுமெனவும் விரும்புவர். இதுவே, ஆடைகள் வடிவமைக்க முக்கிய காரணமாக உருவெடுத்தது. மனித இனத்திற்கு தேவைப்படும் உணவு, உடை, இருக்கையில் உடையானது முக்கிய இடத்தை வகிக்கிறது. ஒரு மனிதன் அணிந்துள்ள உடையின் அடிப்படையிலே சமுதாயத்தில் அவனது மதிப்பும், மரியாதையும், அளவிடப்படுகிறது. ஆள்பாதி ஆடை பாதி என்ற பழமொழியே இதற்கு சான்றாகும். ஆடைகள் வடிவமைப்பதை செல்வந்தர்கள் அணியும் ஆடைகள், சாதாரண நடுத்தர மக்கள் அணியும் ஆடைகள் என இருவகையாகப் பகுக்கலாம்.மிக உயர்ந்த விலையுள்ள துணிகளைக் கொண்டு சரியான அளவுடன் தரமான தொழில்நுட்ப பணியாளர்களால் செல்வந்தருக்கென ஆடைகள் தயாரிக்கப்படுகிறது. இத்தகைய ஆடைகள் மிக குறைவான எண்ணிக்கையில்தான் தயாரிக்கப்படுகிறது. பொதுவான அளவை அடிப்படையாகக் கொண்டு சாதாரணமான விலையுள்ள துணிகளை கொண்டு மிக அதிக அளவில் சாதாரண அல்லது நடுத்தர மக்கள் அணியும் ஆடைகள் தயாரிக்கப்படுகிறது.

ஆடைகள் வடிவமைப்பு தொழிலில் ஆடைகள் மட்டுமின்றி வீட்டிற்கு தேவைப்படும் அலங்காரப்பொருட்கள், படுக்கை அறை, சமையல் கூடத்திற்கு தேவைப்படும் பொருட்களும் அடங்கும். தற்போது இந்தியாவில் ஆயத்த ஆடைகள் மற்றும் அதன் தொடர்பான இதர பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை பல ஆயிரம் ஆகும். இவற்றில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மிகப்பெரிய அளவில் ஆடைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகும். துணிகளை வடிவமைத்தல், எம்பிராய்டரி போடுதல், தைத்தல், பல்வேறு நாடுகளுக்கும் இந்தியாவிற்குள்ளும் துணிகளை அனுப்புதல் போன்ற பணிகளில் பலர் ஈடுபடுவதால் ஆடைகள் வடிவமைப்புத் தொழில் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தொழிலாகவும் திகழ்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் தரமான ஆடைகளுக்கு உலக அளவில் தற்போது அதிக வரவேற்பு உள்ளது. இந்தியாவில் இத்தகைய ஆடைகளின் தயாரிப்பு மட்டும் அடுத்து வரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு 300 பில்லியன்களாக இருக்கும் எனவும் இதன் தொடர்பான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆடைகள் வடிவமைப்பு தொழில் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வந்தாலும், மேன்மேலும் வளர்ச்சி அடைவதற்கும், வளர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்கவும் இத்தொழிலில் ஈடுபடுவோர் பல்வேறு பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது.நாகரிகம் வளர்ச்சி அடைவதற்கு ஏற்றவாறு அவ்வப்போது புதிய டிசைன்களை உருவாக்குவது ஆடைகள் வடிவமைப்புத் தொழிலின் முக்கிய அம்சமாகும். ஒரே டிசைனில் அமைந்த ஆடைகளை தொடர்ச்சியாக பல ஆண்டுகள் மக்கள் அணிய விரும்புவதில்லை. வெளிநாடுகளில் ஆடைகள் வடிவமைப்பில் அவ்வப்போது புதிய டிசைன்கள் உருவாகிறது. இதுபோன்று புதிய டிசைன்களை இந்தியாவில் உருவாக்க குறைந்தது 5 அல்லது 10 ஆண்டுகளாகிறது. உதாரணமாக இந்தியாவில் பல நூற்றாண்டு காலமாக சேலைதான் பெண்கள் விரும்பி அணியும் ஆடையாக இருந்தது. பல ஆண்டுகளுக்கு பின் சுடிதார், சல்வார் கமிஸ் போன்ற ஆடைகள் உருவாக்கப்பட்டு தற்போது பெண்களால் விரும்பி அணியும் ஆடையாகத் திகழ்கிறது.

ஆடைகளை வடிவமைப்பது ஒரு நுட்பமான பணியாகும். போதிய பயிற்சி அனுபவம் இல்லாதோர் இத்தொழிலில் ஈடுபட இயலாது. இதற்கென முறையாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் படித்து, பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட முடியும். மக்களால் விரும்பி அணியும் ஆடைகளை வடிவமைக்கும் அனுபவம் மிக்க தொழில்நுட்ப பணியாளர்களுக்கு இன்று உலக அளவில் அதிக வரவேற்பு உள்ளது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker