மகிழ்ச்சி தரும் மாற்றங்கள்
நமது ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை நோக்கித்தான். மகிழ்ச்சி எல்லாவித மாற்றங்களையும் கொண்டு வரக்கூடியதாகும். ஆனால் மகிழ்ச்சிக்காக எதையும் செய்யத் துணியக்கூடாது. மகிழ்ச்சி என்றால் என்ன? எதெல்லாம் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் என்பதை உலக மகிழ்ச்சி தினமான இன்று (மார்ச் 20) தெரிந்து கொள்வோமா?
விருதுகள், சாதனைகள் மற்றும் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரக்கூடியவைதான். ஆனால் அவை தற்காலிகமானது. ஒருபோதும் முடிவடையாத கடின உழைப்புதான் நிரந்தர மகிழ்ச்சியைத் தந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு நாளும் உங்களால் முடிந்த அளவு கடினமாக உழைத்து, மகிழ்ச்சியுடன் வாழுங்கள். துயரத்தில் இழந்த நாள் என்றும் முழுமையானதல்ல. உழைக்காத நாளும் முழுமையான நாளல்ல.
உலகில் அதிக ஆயுள் வாழ்ந்தவர்களில் ஒருவர் ஆலிஸ் ஹெர்ஸ். இவர் 108 வயது வரை வாழ்ந்தார். அவரிடம் ஒருமுறை, கடினமான வாழ்க்கைக்கு இடையே எப்படி மகிழ்ச்சியுடன் வாழ்வது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் நல்லதையே தேடுகிறேன். நல்லதையே தேர்வு செய்கிறேன். இங்கு பல கெட்ட விஷயங்கள் இருந்தாலும், நான் நல்லதையே தேடி ஏற்றுக்கொள்வதால் எனது மகிழ்ச்சி நிலைக்கிறது.” என்றார். அவரது அனுபவம், நமக்கும் மகிழ்ச்சியின் வேரை நினைவுபடுத்துகிறது.
மகிழ்ச்சியை அளவிடுவதால் மகிழ்ச்சி அதிகரிக்காது. உணவை எடைபோட்டு சாப்பிடுவதால் உடலின் எடையை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியாது. உணவுப் பழக்கத்தையும், மற்ற உடல் செயல்களை (வேலைகள்) ஒரு பழக்கமாகவும் பின்பற்றும்போதுதான் உடல் எடையும், ஆரோக்கியமும் சீராகிறது. அதுபோலவே மகிழ்ச்சி சீராக இருக்க வேண்டுமானாலும் பழக்க வழக்கங்கள், உழைப்பு எல்லாவற்றையும் ஒரு முறையோடு செய்ய வேண்டும். தமக்கும், மற்றவர்க்கும் தீங்கு நேராமல் பார்த்துக் கொண்டால் மகிழ்ச்சியும் நிரந்தரமே.
ஆம், மகிழ்ச்சியை ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ள முடியும். அதற்கு எண்ணங்களையும், செயல்களையும் நேர்மறையானதாக மாற்ற வேண்டும். உங்களாலும் ஓட முடியும், தடகள வீரராலும் ஓட முடியும், டிரையத்லான், பென்டத்லான் போன்ற பலதிறன் போட்டிகளில் பங்கேற்பவர்களாலும் ஓட முடியும். சாதாரணமானவரைவிட, ஓட்டப்பந்தய பயிற்சி பெற்றவரால் சிறப்பாக ஓட முடியும். ஓட்டப் பந்தயத்துடன் மற்ற பயிற்சிகளிலும் ஈடுபட்டவரால் எல்லாவித சூழலிலும் சிறப்பாக ஓட முடியுமல்லவா? அதுபோலத்தான் உங்கள் மனதை நல்ல எண்ணங்களால் நம்பிக்கையை நிரப்பி, நல்ல செயல்களால் வழக்கமாக மாற்றினால் எல்லா நேரத்திலும், எத்தகைய சூழலிலும் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
மகிழ்ச்சி என்பதும் ஒரு திறமைதான். ஆம், உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள மிகமிகத் திறமை வேண்டும். தேவையற்ற எதிர்மறை விஷயங்களை விரும்பாமலும், அனுமதிக்காமலும், சிறந்த விஷயங்களையே பின்பற்றும் திறமை உங்களிடம் இருந்தால்தான் உங்களுக்கு மகிழ்ச்சி சாத்தியம். எனவே உங்களுக்கு மகிழ்ச்சி வேண்டுமானால் நீங்கள் தீங்கு தரும் எந்த செயல்களையும் செய்யாதிருங்கள்.
மகிழ்ச்சியைப் பெறும் நோக்குடன் செய்யும் எல்லா செயல்களும் மகிழ்ச்சியைத் தந்துவிடாது. தீங்கு விளையக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் செய்யும் செயல்களே மகிழ்ச்சியை அளிக்கும். அப்படி தீங்கற்ற செயல்களால் தன்னை உருவாக்கிக் கொள்பவர்கள் வெற்றி மனிதர்களாக இருப்பதை நீங்கள் அறியலாம். நீங்கள் பிரபலங்களாகவும், முன்னோடிகளாகவும் இருப்பவர்களின் குணநலன்களையும், செயல்களையும் கொஞ்சம் உற்றுப் பாருங்கள். அவர்கள் யாருக்கும் தீங்கு செய்ய நினைக்காமலும், தீங்கு விளைவிக்கும் செயல்களை ஆதரிக்காமலும் இருப்பார்கள். அதுவே அவர்களின் வெற்றிக்கும், உயர்வுக்கும் வழிவகுத்திருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம். இதிலிருந்து, மகிழ்ச்சி தரும் செயல்களால் நீங்கள் மகிழ்ச்சி அடைவதுடன் வெற்றியையும், உயர்வையும் பெறலாம் என்பது மறுக்க முடியாத உண்மை.
மகிழ்ச்சிக்கும், சிரிப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மகிழ்ச்சியின் அடிப்படையாக உணரப்படுவது சிரிப்பு. மகிழ்ச்சியாக இருப்பவர்களே சிரிக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். எனவே சிரிப்பதன் மூலம் மகிழ்ச்சியைத் தூண்ட முடியும். மகிழ்ச்சியின் மூலம் சிரிப்பைத் தூண்ட முடியும். சிரிப்பு ஆரோக்கியம் தருவதாக தற்போதைய மருத்துவ கண்டு பிடிப்புகள் கூறுகின்றன. சிரிப்பு மன அழுத்தத்தை குறைக்கிறது, ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. முகத் தசைகளை இயக்குகிறது. மூளையை புத்துணர்ச்சிப் படுத்தி ஆயுளை அதிகரிக்கிறது. இதுபோலவே மனநிலையை மகிழ்ச்சியாக பராமரிப்பதன் மூலம், சிரிப்பையும், ஆரோக்கியத்தையும் வாழ்வில் தக்க வைக்க முடியும்.
மகிழ்ச்சியும் தொற்றிப் பரவக்கூடியது. நாம் அனைவரும் ஒருவருடன் ஒருவர் தொடர்பில் இருக்கிறோம். நாம் சிரித்தால் மற்றவரும் சிரிக்கிறார்கள். நாம் கண்ணீர் சிந்தினால் மற்றவர் இரக்கப்படுகிறார். ஆதரவு தருகிறார். இதெல்லாம் நாம் ஒருவருடன் ஒருவர் இணைப்பாகவும், இணக்கமாகவும் இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. எனவே நாம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்போது அது மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்தி பரவிக்கொண்டே செல்லும். எனவே நாம் மகிழ்ச்சியெனும் நேர்மறை ஆற்றலை சமூகத்தில் விதைத்து எங்கும் மகிழ்ச்சியை பரவச் செய்வோம்.
மகிழ்ச்சியானவர்கள் மகிழ்ச்சி இல்லாதவர்களைவிட சுதந்திரமாக இருப்பதாகவும், பேசுவதாகவும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. வதந்திகளை பரப்புபவர்கள் எதிர்மறை சிந்தனையாளர்கள் என்றும், மகிழ்ச்சியான மக்கள் நேர்மறையான எண்ணத்துடன், புத்தியைத் தூண்டும் ஆழமான உரையாடல்களை கொண்டுள்ளனர் என்றும் ஆந்த ஆய்வு கூறுகிறது.
எதிர்மறை எண்ணங்களைத் தவிர எல்லாமும் மகிழ்ச்சியைத் தூண்டக்கூடியதுதான். குறிப்பாக சக மனிதர்கள் நமக்கு மகிழ்ச்சியைத் தூண்டுகிறார்களோ இல்லையோ இயற்கையான விஷயங்கள் பல நமக்குள் மகிழ்ச்சியைத் தூண்டக் கூடியவையாகும்.
நீங்கள் வளர்க்கும் ஒரு பூச்செடி, நீங்கள் வளர்க்கும் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள், பறக்கும் பறவைகள், ஓடும் ஆறுகள், இயற்கைக் காட்சிகள் எல்லாம் உங்களுக்குள் மகிழ்ச்சியைத் தூண்ட முடியும். நீங்கள் விரும்பும் புத்தகங்களும், சிறந்த சிந்தனைகளும் உங்களுக்குள் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தூண்டும். உடல்பயிற்சியானது உடல் ஆரோக்கியம், வலிமையின் வழியாக மனநிலையில் மாற்றத்தைத் தூண்டி மகிழ்ச்சியை கொடுக்கிறது.
இதுபோல விரும்பிய உணவுகளும், குறிப்பிட்ட வகை உணவுகளும் மனநிலையில் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் உருவாக்கக்கூடியதாகும். இங்கிலாந்தில் உள்ள நரம்பியல் மற்றும் உளவியல் ஆய்வு மையமானது, “ஐஸ்கிரீம் சாப்பிடுவது உடனடியாக உடலிலும், மூளையிலும் மகிழ்ச்சியான மனநிலையைத் தூண்டுவதாக கண்டுபிடித்தனர். இதுபோல துரித உணவுகள் எதிர்மறை மனநிலையைத் தூண்டுவதாகவும் கண்டுபிடித்தனர். துரித உணவு மனச்சோர்வை தூண்டுவதாகவும், தனிமையைத் தூண்டவும், சுறுசுறுப்பை குறைப்பதாகவும்” தெரியவந்தது.
செய்யும் வேலையில் திருப்தி இருந்தால், மகிழ்ச்சி அதிகரிக்கும். பிடித்தமான, விருப்பமான வேலையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். செல்வம் இருந்தால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்ற மனநிலை பலரிடம் இருக்கலாம். செல்வத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது. ஆனால் மகிழ்ச்சி இருந்தால் செல்வத்தை அதிகரிக்க முடியும்.
மொத்தத்தில் பிடித்தமான வேலை, பிடித்தமான உணவு, பிடித்தமான செயல்கள், பிடித்த நடனம், புத்தகம், இயற்கை இடங்கள் ஆகியவற்றின் மூலம் மகிழ்ச்சியை அதிகப்படுத்தி வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம். இன்றைய தினம் சர்வதேச மகிழ்ச்சி தினமாகும். எல்லோரும் மகிழ்ச்சியைப் பெருக்கி நலமுடன் வாழ்வோம்.