குழந்தைகளின் லீவ் நாட்களுக்கான விளையாட்டுகள்
ஐந்து வயது வாண்டுகள் முதல் 50 வயது முதியவர்கள் வரை எல்லோருக்கும் மொபைல் போன்கள்தான் மூன்றாவது கை. அந்த பிசி போனுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து, வீட்டுக்குள்ளேயே விளையாட சுவாரஸ்ய கேம்ஸ் பல குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்.
செஸ்:
‘செஸ் விளையாடாத் தெரியும்’னு ஒருத்தர் சொன்னாலே போதும், ‘புத்திசாலி’ங்குற பிம்பம் எல்லோருடைய மனசுலயும் தோன்றும். எதிர்முனையில் இருப்பவர்களுடைய பலம், பலவீனம் பற்றி தெரிஞ்சு, அவர்களுக்கு ஏற்றபடி தன்னுடைய படை வீரர்களைக் களத்தில் இறக்கி, தன்னுடைய அரசவையைப் பத்திரமாக வைத்துக்கொள்ளப் போராடும் மிகவும் சுவாரஸ்யமான விளையாட்டு சதுரங்கம் எனப்படும் செஸ். இது கவனச் சிதறலைக் கட்டுப்படுத்தி, planning, problem solving உள்ளிட்ட திறன்களையும் மேம்படுத்துகிறது. இரண்டு பக்க மூளையையும் வேலை செய்யவைக்கும் இந்தத் தந்திர விளையாட்டை உங்கள் குழந்தையோடு சேர்ந்து விளையாடி மகிழுங்கள்.
கேரம் போர்டு:
ஒரு காலகட்டத்துல கேரம் போர்டு இல்லாத வீடுகளைப் பார்ப்பதே அரிது. ஆனால், இப்போதோ ஆன்லைனில் சிங்கிள் ஆளாக அமர்ந்து காயின்களை பாக்கெட் செய்து விளையாடுகின்றனர். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு விளையாடும்போது கிடைக்கிற சந்தோஷம் நிச்சயம் ஆன்லைனில் விளையாடும்போது கிடைக்காது. மேலும், இது problem solving skill மற்றும் அறிவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. பாயின்ட்ஸ் அடிப்படையில் விளையாடும்போது, எண்ணிக்கை, கண்களும் கைகளுக்குமான ஒருங்கிணைப்பு போன்றவற்றையும் பலப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல டிமென்ஷியா, அல்சைமர் உள்ளிட்ட மனநலப் பிரச்னைகளிலிருந்தும் விடுபட இந்த கேரம் கேம் உதவுகிறது.
பல்லாங்குழி:
நாம் மறந்த பாரம்பர்ய விளையாட்டுகளில் முக்கியமான ஒன்று பல்லாங்குழி. எதிரில் இருப்பவர்களின் எண்ண ஓட்டத்தை முன்கூட்டியே அறிந்து, அவற்றை நினைவில் வைத்து, தன்னுடைய தனிப்பட்ட யுக்தியைப் பயன்படுத்தி எதிரியை வீழ்த்துவதே இதிலிருக்கும் சுவாரஸ்யம். படிப்பில் கவனம் இல்லையென குழந்தைகளை நினைத்து வருத்தப்படுவதை விட்டுவிட்டு தினமும் ஒருமணிநேரம் அவர்களோடு இணைந்து பல்லாங்குழி விளையாடுங்கள். நிச்சயம் நினைவுத்திறன் அதிகரிக்கும்.
பரமபதம்:
முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தைச் சார்ந்து விளையாடப்படும் விளையாட்டு இது. ஆனால், இதனுள் சுவாரஸ்யங்கள் பல. பாம்பு, ஏணி, எண்கள் என பரமபதம் போர்டே ரொம்பவே கலர்ஃபுல்லா இருக்கும். ஏற்ற இறக்கங்கள் வாழ்க்கையின் அங்கம் என்பதை மிகவும் எளிமையாய் விளக்கும் அருமையான விளையாட்டு இது. முன்னேற்றப் பாதையில் ஏராளமான தடைகள் வரும். ஆனால், அவற்றைக் கண்டு துவண்டுவிடாமல் விடாமுயற்சி வேண்டும் என ஆழமாக வலியுறுத்தும் கேம் பரமபதம். மனவலிமையை மேம்படுத்தும் இந்த விளையாட்டை உங்கள் குழந்தைகளோடு விளையாடி மகிழுங்கள். நமக்கும் தன்னம்பிக்கை பிறக்கும்.
மியூசிகல் சேர்:
குடும்பத்தோடு இணைந்து விளையாடும் விளையாட்டுகள் பல இருந்தாலும், மியூசிகல் சேர் விளையாட்டில் கிடைக்கும் என்ஜாய்மென்ட் வேறெதிலும் இல்லை. மூன்று பேர், இரண்டு இருக்கைகள் இருந்தாலே போதும். ஸ்டார்ட் மியூசிக். முழுக்க முழுக்க ஃபன் ஃபில்டு கேம் இது. நிச்சயம் உங்கள் குழந்தைகளுக்குப் பிடிக்கும்.