ஆரோக்கியமான கர்ப்பகாலம் செய்ய வேண்டியவை
இளம் வயதில் திருமணம், உணவுமுறை விபரீதம், வாழ்வியல் சூழலில் பெரும் மாற்றம், மனதளவில் நிலவும் பதற்றச்சூழல், குழந்தையின்மைக்கு எடுத்துக்கொள்ளும் அதிதீவிரமான சிகிச்சை, பொறுமையில்லாமல் அவசர அவசரமாக எதையும் செய்ய நினைக்கும் நவநாகரிக வேகம், வயது கடந்து உண்டாகும் கர்ப்பம்… இவையெல்லாம்தான் முக்கியக் காரணிகள். இவற்றையெல்லாம் சரிசெய்த பின்னர், தாய்மையும்கூட இன்னும் சற்றுக் கூடுதலாகக் கவனிக்கப்பட வேண்டும். உடலளவிலும் மனதளவிலும் நல்ல தாய்மைக்குத் தயார் ஆகி, நல்ல மக்கட்பேறு உண்டானால் இந்த நாடும் ஒவ்வொரு வீடும் ஆரோக்கியமாக இருக்கப்போவதில் ஐயம் இல்லை.
உலகில் உள்ள எண்ணற்ற பிரச்னைகளுக்கு மூலகாரணமாகவும் குறைகளின் ஆரம்பமாகவும், கவலைகளின் தொடக்கமாகவும், போராட்டங்களின் ஆணிவேராகவும் இருப்பது… அன்பு குறைவதே. நோய்களின் ஆரம்பமாகட்டும், மன உளைச்சலின் மருந்தாகட்டும், உறவுகளின் சிக்கலாகட்டும், சிறிய விஷயம் முதல் பெரிய பெரிய நிகழ்வுகளின் மூலாதாரம் என்பது எங்கோ, யாரோ அன்புக்காக ஏங்கும் அந்த நிமிடத்தில் தொடங்குகிறது. அதைச் சரிசெய்யாமல் எந்த மாதிரி சோதனைகள் அதன் பின்னால் நடந்தாலும் எதிலும் மாற்றம் வராது.
கணவன், மனைவியிடம் அன்பு குறையும் பொருட்டு அது குழந்தைகளிடம் எதிர்மறை குணாதிசயங்களாக வெளிப்படும் என்பது மிகப்பெரிய உண்மை. அது அனைவருக்கும் புரிந்தே ஆக வேண்டும். குழந்தை என்பதும் கடவுள் என்பதும் என்னைப் பொறுத்தவரை வேறு சொற்கள் இல்லை.
ஒரு குழந்தை வளரும் தருவாயில் எந்த நேரமும் கணவன், மனைவிக்குள் இருக்கும் உறவுச் சிக்கல்கள் எல்லாம், பின்னர் எதிர்காலத்தில் குழந்தையிடம் எதிர்மறை எண்ணங்களாக வெளிப்பட்டே தீரும் என்கின்றன ஆராய்ச்சிகள்.
ஒரு குழந்தையின் உருவாக்கமும் வளர்ப்பும் அப்படி தாய்க்கு மட்டுமே பெரும்பங்கானதாய் இருப்பது ஏன் என்று ஆச்சர்யப்பட வேண்டியதில்லை. கருமுட்டையிலேயே தொடங்குகிறது அந்த வேறுபாடு.
ஆணின் விந்துவின் அளவை ஒப்பிட்டால் பெண்ணின் கருமுட்டை 30 மடங்கு பெரியது. அடுத்தபடியாகக் குழந்தையை வளர்த்து ஆளாக்க அவள் தன் உதிரம், தனக்குக் கிடைக்கும் பிராணவாயு, அவளுடைய ஆற்றல் இப்படி அனைத்திலும் 30% கொடுத்து இன்னோர் உயிரை ரத்தமும் சதையுமாக மாற்றுகிறாள். அதோடு தூக்கத்தை எல்லாம் இழந்து, தன் எண்ணங்கள் முழுக்க அக்குழந்தையை மட்டுமே ஆக்கிரமித்து, அவளின் உடலில் நடக்கும் பற்பல மாற்றங்களைத் தாங்கி, மனதளவில் அதைவிட பலமடங்கு நடக்கும் மாற்றங்களை ஏற்று, இப்படி எல்லா இடங்களிலும் அவள் ஆணைவிட ஒரு படி மேலே இருக்கும் ஒரு தெய்வத்தைப் போன்ற ஜீவன். அன்பு காண்பிப்பதில் அவள் ஆதி ஊற்று. உணர்ச்சியின் உச்சம். ஆக, பெண் இனத்தை உடல், மன, ஆன்ம நிலையில் யாரிடமும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அளவுக்கு அவளுக்கு நிகர் அவள் மட்டுமே.
அப்படியிருக்கையில் கர்ப்பிணிப்பெண்ணை நாட்டின் கண்களாகப் பேண வேண்டும். படைப்பின் கடவுளாக நான் அவர்களை எப்போதும் உருவகப்படுத்துவேன். அது மிகையாகாது. அடுத்த தலைமுறை நல்லபடியாக உருவாக அவளே ஆணிவேர். அப்படிப்பட்டவள், தாய்மைக்கு நல்ல முறையில் தயார்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு மட்டுமே என்னில் ஓங்கி நிற்கிறது. இன்னும் அதிகப்படியாக இன்றைய பதின்ம வயதுப் பெண்ணிடமிருந்து இந்த முன்னேற்பாடுகள் தொடங்கியே ஆக வேண்டும். அது கட்டாயம்.
அப்படிப்பட்ட அழகான கர்ப்பகால முன்னேற்பாடுகள் இன்னும் ஆளுமை மிக்க ஆரோக்கியமான குழந்தைகளையும் தலைமுறையையும் கொண்டுவரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மேலும் நாளை கர்ப்பம் ஆன பிறகு கருச்சிதைவு, உதிரப்போக்கு, குறைமாத பிரசவம், குறைவான வளர்ச்சி, பலவீனமான நஞ்சுப்பை, பனிக்குட நீர் வற்றிப்போதல்,நோய்த்தொற்று போன்ற பலவிதமான குழப்பங்கள் இன்றியும் குழந்தைகள் பிறப்பார்கள். பின்னாளில் அந்தக் குழந்தைகள் நல்ல புரிந்துணர்வும் பக்குவமும், முதிர்ச்சியும் பெறுவதை தாயின் கர்ப்பகாலமே தீர்மானிக்கிறது என்பதையெல்லாம் சற்று உள்வாங்கி அடுத்த தலைமுறையை நல்வழியில் எடுத்துச்செல்வோம்.
ஆக முடிவுரையாக, கர்ப்பகாலத்தில் ஆண், பெண்ணின் நல்ல அணுக்களின் கூட்டு மட்டுமே குழந்தையாக மாறுவது இல்லை. அதோடு அந்தக் கர்ப்பிணியின் சுற்றுப்புறச் சூழலும் பாதி குழந்தையைத் தீர்மானிக்கிறது என்ற உண்மையை உணர்ந்து நல்ல உணவுகளைச் சாப்பிட்டு, நல்லமுறையில் ஆழ்ந்து தூங்கி எழுந்து, அளவான உடற்பயிற்சிகள் மேற்கொண்டு, மனதளவில் பதற்றம் இல்லாமல் சாந்தமாக இருக்க எல்லா வழிமுறையும் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், கர்ப்பத்துக்குத் தயாராவதற்கு முன்பே வைட்டமின் குறைபாடுகள், ரத்தசோகை, ஹார்மோன் மற்றும் வேறு சில ஆரோக்கியக் குறைபாடுகளின் ஆரம்ப அறிகுறிகள் இருந்தால் அவற்றையெல்லாம் சரிசெய்து அதற்கான தீர்வு தரும் சில உணவுமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
கர்ப்பப்பையைத் திடமாக்க சில உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். ஆணும் இவற்றையெல்லாம் புரிந்துகொண்டு செயல்படுத்தி, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் கணவன், மனைவி அடுத்த தலைமுறைக்குப் பெரும் புண்ணியத்தையும் ஆரோக்கியத்தையும் தங்கள் குழந்தை மூலமாகச் சேர்க்கிறார்கள். குழந்தையை மட்டுமல்ல… நல்ல சமுதாயத்தையே உருவாக்கிய பெருமையைப் பெறுவார்கள்.