ஆரோக்கியம்மருத்துவம்

கர்ப்ப கால மசக்கையை எதிர்கொள்ளும் வழிகள்

கர்ப்பிணிப் பெண்களுக்கு தாங்கள் கருவுற்ற காலம் தொட்டு 12 முதல் 14 வாரங்கள்(முதல் மூன்று மாதங்கள்) வரை மசக்கைத் தொந்தரவு ஏற்படுகின்றது. காலை எழுந்தவுடன் வாந்தி,மயக்கம், குமட்டல், உடல் சோர்வு போன்ற பல தொந்தரவுகளுக்கு கர்ப்பிணிப் பெண்கள் ஆளாகின்றனர். இதனையே ‘மசக்கை’ என்று அழைக்கின்றனர். இந்த மசக்கை பெரும்பாலும் காலை நேரத்தில் சற்று அதிகமாகக் காணப்பட்டு பின்னர் படிப்படியாகக் குறைகின்றது. அதனாலேயே மசக்கையை ஆங்கிலத்தில் ‘மார்னிங் சிக்னஸ்’ என்று கூறுகின்றனர்.* காரம், எண்ணெய் மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பண்டங்களைத் தவிர்க்க வேண்டும்.

* அதிகமாக வாந்தி எடுப்பதால் உடலிலிருந்து நீர்ச் சத்து கணிசமான அளவு குறைந்துவிடுகிறது இதன் காரணமாகவே கர்ப்பிணிப் பெண்கள் மிகவும் உடல் சோர்வாக உணர்கின்றனர். ஆகையால் அவர்கள் தண்ணீர் போதுமான அளவு அருந்த வேண்டும். சிறிது சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டு தண்ணீர் அருந்திக் கொள்ளலாம். அதனால் அவர்களின் உடல் அசதி குறைய நிறைய வாய்ப்பு உள்ளது.

* மசக்கையினால் அவதிப்படும் பெண்கள் வெளியில் செல்வதைக் குறைத்துக் கொள்ளலாம்.அப்படிச் செல்ல நேரும் பட்சத்தில் கையில் புளிப்பு மிட்டாய் வைத்துக் கொள்வது நல்லது.

* சித்த வைத்திய கடைகளில் இஞ்சி மிட்டாய்கள் விற்கப்படுகின்றன.இதனை உட்கொள்வதாலும் வாந்தி கட்டுப்படும்.* எலுமிச்சைப் பழத்தை நுகர்வதால் குமட்டல் உணர்வு குறைகிறது.

* செயற்கை நிறம் கலக்கப்பட்ட உணவுப் பண்டங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் துரித வகை உணவுகள் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும். அதுவே தாய்க்கும் சேய்க்கும் மிகவும் நல்லது.

* உயிர்ச்சத்து பி6 நிறைந்த காய்கறிகளான பீன்ஸ்,கேரட் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

* இளநீர்,நுங்கு, மோர் மற்றும் பழவகைகளை அதிகம் உட்கொள்ளலாம்.குறிப்பாக மாதுளையை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

* பழங்களைச் சாறு பிழிந்தும் அருந்தலாம்.

* எதுவுமே சாப்பிட இயலாத சூழல் நிலவினாலும் வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு போதிய ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. ஆகையால் அதை மனதில் நிறுத்திக் கொண்டு உணவுகளைச் சற்று சிரமப்பட்டாவது, கர்ப்பிணிப் பெண்கள் உண்ண வேண்டும். ஒருவேளை என்ற கணக்கை விட்டுவிட்டு, ஆறு வேளையாகக் கூடப் பிரித்து, உணவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடலாம்.

* உடல் மிகவும் அசதியாக இருக்கும் தருணங்களில் மதிய வேளையில் சிறு ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.

* உணவு உண்ட உடனே படுக்கைக்குச் செல்லாமல் சுமார் ஒரு மணி நேரமாவது அமர்ந்துவிட்டுச் செல்வது நன்று.* மாலை வேளையில் சிறு நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. வெளிக்காற்று புத்துணர்ச்சி அளிப்பதோடு மனச்சோர்வை அகற்றவல்லது.

* மசக்கைக் குறித்தும் பிரசவத்தைக் குறித்தும் நேர்மறையாகப் பேசுபவரோடு பழகுவது நல்லது.

* மசக்கை காலத்தில் புளிப்புச் சுவையை உண்ண நாவிற்குப் பிடிக்கும்.அதனாலேயே கர்ப்பிணிப் பெண்கள் மசக்கை காலத்தில் மாங்காய்களையும் புளியங்காய்களையும் விரும்பி உண்கின்றனர்.இதுகுறித்து,“மாங்காய் திருடித் தின்ற பெண்ணே மாசம் எத்தனையோ?”என்று ஒரு அழகான பாடல் கூட உள்ளது.

* மசக்கையில் அவதிப்படும் பெண்களுக்கு வாய்க்கு ருசியான உணவைப் படைத்துத் தரலாம்.

* மசக்கையைக் கண்டு சில பெண்கள் மன பயமும் விரக்தியும் கொள்கின்றனர். இது மாதிரியான மனநிலை கொண்ட பெண்களுக்கு போதிய அறிவுரைகள் வழங்குவது நல்லது.இவர்களைத் தனிமையான சூழலில் விடாமல் இருப்பது நல்லது.

* ஒரு சில பெண்களுக்கு எதைச் சாப்பிட்டாலும் வாந்தி வந்து விடுகின்றது.அது மாதிரியான சூழலில் தவிக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையை நாடி,அவர்களின் அறிவுரையோடு உரிய மாத்திரைகளைக் எடுத்துக்கொண்டு வாந்தியைக் கட்டுப்படுத்தலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker