ஆயுளை அதிகரிக்கும் விஷயங்கள்
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை வாழ்ந்தால், புற்றுநோய், இதயக் கோளாறுகள் மற்றும் நீரிழிவு நோய் இல்லாமல், ஆயுள் பெண்களுக்கு 10 ஆண்டுகளும், ஆண்களுக்கு 7 ஆண்டுகளும் அதிகரிக்கும் என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
ஆயுளை நீட்டிக்க, உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும், மது பானத்தைத் தவிர்க்க வேண்டும், உடல் எடை ஆரோக்கியமான நிலையில் இருக்க வேண்டும், உணவு வகைகள் ஆரோக்கியமானவையாக இருக்க வேண்டும், புகைபிடிக்கக் கூடாது என்று பல ஆலோசனைகளை அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஒரு லட்சத்து 11 ஆயிரம் பேரை 20 ஆண்டுகளுக்கும் மேலாக கண்காணித்து வந்தனர். ‘இந்த ஆய்வின் மூலம், பொதுமக்களுக்கு ஆக்கபூர்வமான தகவல் கிடைத்துள்ளது’ என்று பாஸ்டனில் உள்ள பொது சுகாதாரத்துக்கான ஹார்வர்டு கல்லூரியைச் சேர்ந்த, இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய டாக்டர் பிராங் ஹியு கூறியுள்ளார்.
புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் இல்லாத பெண்களைக் கணக்கெடுத்தால், மற்றவர்களைக் காட்டிலும் அவர்கள் 10 ஆண்டுகள் வரை கூடுதலாக வாழ்கிறார்கள். ஆண்களில் இந்தப் பிரிவினர் கூடுதலாக 7 ஆண்டுகள் வாழ்கிறார்கள்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் ஏன் வித்தியாசம் உள்ளது?
சராசரியாகவே ஆண்களைவிட பெண்கள் நீண்டகாலம் வாழ்கிறார்கள் என்ற உண்மையுடன் அதற்குத் தொடர்பு இருக்கலாம்.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் மிக ஆரோக்கியமாக உள்ள ஆண்களும், பெண்களும் ஒருபோதும் புகைபிடிக்காதவர்களாக உள்ளனர்.
தினமும் அதிக எண்ணிக்கையில் சிகரெட் புகைப்பவர்கள், உடல்பருமனாக உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள், நோயற்ற வாழ்வு வாழ்வதற்கான வாய்ப்புக் குறைவுதான் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆனால் இரு பாலாருக்கும் பொதுவான சில விஷயங்கள் உள்ளன. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைபிடித்தால், புற்றுநோய், இதயக் கோளாறுகள், நீரிழிவு போன்றவற்றுக்கான ஆபத்து குறைவதுடன், மற்ற நோய்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டாலும் ஆயுளில் அவற்றின் தாக்கம் குறைவாக உள்ளது.
சரி, ஏன் இந்த நோய்கள் மீது மட்டும் கவனம் செலுத்தப்படுகிறது?
புற்றுநோய், இதய நோய்கள், நீரிழிவு நோய் ஆகியவைதான் பெரும்பாலும் முதிய வயதில் வரக்கூடிய நோய்களாக உள்ளன. அவைதான் மக்களின் வாழ்க்கை முறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன.
உதாரணமாக, அதிக உடல் எடை அல்லது உடல்பருமனாக இருப்பது, மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய் உள்ளிட்ட 13 வெவ்வேறு வகையான புற்றுநோய்களுடன் தொடர்புடையதாக இருப் பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சில புற்றுநோய்கள், உடல்பருமன் போன்ற வாழ்க்கைமுறை காரணிகளுடன் நெருக்கமான தொடர்புகொண்டவையாக உள்ளன. இது பரந்த அளவிலான, கண்காணிப்பு அடிப்படையிலான ஆய்வு. எனவே, நோயற்ற வாழ்வை நீட்டிப்பதில் இந்த வாழ்க்கை முறைகள்தான் நேரடிக் காரணிகளாக உள்ளன என்ற உறுதியான முடிவுக்கு வந்துவிடவும் முடியாது.
மற்ற காரணிகளைப் பற்றி அறியவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. குடும்பத்தின் மருத்துவ வரலாறு, மரபுவழிப் பின்னணி, வயது போன்றவையும் இந்த முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.
ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்தபடி, அவர்களின் உணவுப்பழக்கம், உடற்பயிற்சி பழக்கம், உயரம் மற்றும் எடை ஆகியவற்றை குழுவினர் எடுத்துக்கொண்டனர். ஆனால் அனைத்து சமயங்களிலும் அவை சரியானவையாக இருக்கும் என சொல்ல முடியாது என்ற கருத்துக் கூறப்படுகிறது.
பொதுவில், ஆயுள் விஷயத்தில் நல்ல பழக்கங்கள் சாதகமாகவும், தீய பழக்கங்கள் பாதகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதுதான் புரிந்துகொள்ள வேண்டிய செய்தி.