எடிட்டர் சாய்ஸ்

நாளை உலக மகளிர் தினம்: கடந்து வந்த பாதையும் கடக்க வேண்டிய பயணமும்

நாளை (மார்ச் 8) உலக மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டு ஆகிறது. நம்முடைய இந்திய நாட்டில் கடந்த இருபது ஆண்டுகளாகத்தான் மகளிர் தினம் பரவலாக கல்வி நிலையங்களிலும், சமூக அமைப்புகள் சார்ந்தும் கொண்டாடப்படுகிறது. உலக மகளிர் தினம் என்பது மற்ற தினங்களைப் போன்று வெறுமனே கொண்டாடப்படுவதற்காக உருவானது அல்ல!மனித குலம் தோன்றிய போது பெண்தான் தன் இனக்குழுக்களை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பில் இருந்துள்ளாள் என்று சில ஆதாரங்களின் வழி தன்னுடைய “வால்கா முதல் கங்கை வரை” எனும் நூலில் நிறுவுகிறார் இராகுல சாங்கிருத்தியாயன். உலகமெங்கும் முதலில் இருந்தது தாய்வழிச் சமூகம்தான். பசுக் கூட்டங்களை கவர்ந்து செல்லுதல் போல் (ஆநிரை கவர்தல்) ஒரு கூட்டத்திலிருக்கும் பெண்களை மற்றொரு கூட்டத்தினர் கவர்ந்து செல்ல ஆரம்பித்த பின்னர் அவர்களை மீட்டுவர குழுவில் இருக்கும் வலிமை மிக்க ஆடவர்கள் அனுப்பப்பட்டனர். இச் சூழலுக்குப் பின்னரும், சொத்துடைமை சமுதாயம் உருவான பின்னரும் தலைமைப் பொறுப்பு பெண்ணிடம் இருந்து பறிக்கப்பட்டு ஆணின் கைகளுக்குச் சென்றது. அதற்குப்பின்னரே பெண்ணின் மீதான எல்லா அடக்குமுறைகளும் ஆரம்பித்தன.

மனித குலம் வாழ்க்கை முறைகளில் நாகரிகம் கண்டதே தவிர, வாழ்வியலில் ஆணை உயர்வாகவும், பெண்ணை ஆணுக்கு அடிமையாக இருப்பதற்குரியவளாகவும் நடத்தத் தொடங்கியது. பெண்கள் பொருளாதார உரிமையற்றவர்களாக, பொருளீட்ட அனுமதிக்கப்படாதவர்களாக, ஆண்களால் கைவிடப்படும் பொழுது நாதியற்றவர்களாக தள்ளப்பட்டனர். இந்நிலை அங்கிங்கெனாதபடி உலகமெங்குமே காணப்பட்டது.

அமெரிக்க சுதந்திரப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அபிகெய்ல் ஆடம்ஸ் என்ற அமெரிக்கப் பெண் ஒருவர் மார்ச் 31, 1776 ல் தன் கணவர் ஆடம்சுக்கு எழுதிய “பெண்களை நினையுங்கள்” எனும் கடிதம் உலகப்புகழ் பெற்றதோடு பெண்ணுரிமையை வலியுறுத்தி புரட்சியை நோக்கி ஒரு பெண் விதைத்த முதல் எழுத்து விதையாகும்.“நீங்கள் இந்நாட்டின் சுதந்திரத்தை அறிவிப்பதை நான் விரும்புகிறேன். குடிமக்களுக்கான சட்டவிதிகளை உருவாக்குவதற்கு முன்னால் பெண்களின் நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது இங்கே எல்லா மனிதனுமே கொடுங்கோலன்தான். பெண்களுக்கு குறிப்பிட்ட கவனிப்பும், கவனமும் செலுத்தப்படாவிட்டால், நாங்கள் ஒரு கிளர்ச்சியைத் தூண்டுவதில் உறுதியாக இருக்கிறோம், எங்களுக்கான குரல் அல்லது பிரதிநிதித்துவம் இல்லாத எந்தவொரு சட்டங்களுக்கும் கட்டுப்பட மாட்டோம்” என்று அக்கடிதத்தில் அபிகெய்ல் எழுதியுள்ளார். இக்கடிதமும் இதற்குப்பின்னர் இக்கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து நிகழ்த்திய எழுத்துப் போராட்டங்களும்தான் அமெரிக்கப் பெண்களுக்கு வாக்குரிமை உள்ளிட்டவற்றை பெற்றுத் தந்தது.

பெண்களுக்கு வேலை கிடைத்துவிட்டதே என்று மகிழ முடியவில்லை. ஒரு ஆண் செய்யும் அதே வேலையை பெண் செய்தாலும் ஆணை விட அதிகமாக உழைப்பைத் தந்தாலும் ஊதியம் என்பது பெண்களுக்கு மிகக் குறைவாகவே அளிக்கப்பட்டது. வேலை பார்க்கும் இடங்களில் பெண்கள் மரியாதைக் குறைவாகவே நடத்தப்பட்டனர். பாலின பாகுபாடுகள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிரவிக்கிடந்தன. வேலை பார்க்கும் இடங்களிலும் பெண்கள் மீது அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளும் நிகழ்த்தப்பட்டன. இந்த அநீதிகளை எதிர்த்து பெண்கள் குரல் கொடுக்கத் தொடங்கினர்.

1920-ல் சோவியத் ரஷ்யாவில் நடைபெற்ற மகளிர் போராட்டத்தில் அலெக்சாண்டிரா கெலன்ரா ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதியில் உலக மகளிர் நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று அறிவித்தார். அதன்படி 1921 மார்ச் 8 முதல் ‘உலக மகளிர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.உலகமெங்கும் நிகழ்கின்ற பல்வேறு பண்பாட்டு கலாச்சார சூழல்களில் பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வாக்குரிமை, தேர்தலில் நின்று ஆட்சிமன்ற உறுப்பினர்களாகும் உரிமை என பல்வேறு உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும் பெண்கள் பெரும் போராட்டங்களையும், இன்னல்களையும் சந்திக்க வேண்டி வந்தது. இன்னமும் சமத்துவம் என்பது பெரும்பாலான நாடுகளில் கனவாகவே இருந்துவருகிறது.

இந்திய நாட்டைப் பொறுத்தவரை இன்றைக்கு பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நுண்ணிய அறிவுடன் பெண்கள் இயங்கிவருவது ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சான்றாக கூறவேண்டுமெனில் இதுவரை இந்திய நாட்டின் குடியரசுதின விழாவில் ஆண்வீரர்களின் அணிவகுப்பிற்கு பெண் அதிகாரிகள் தலைமை தாங்கி நடத்தியதில்லை. கடந்த 70-ஆவது குடியரசு தினவிழாவில் ஆண் வீரர்களின் அணிவகுப்பிற்கு லெப்டினன்ட் பாவனா கஸ்தூரி தலைமை தாங்கி நடத்தினார். அதுமட்டுமின்றி இரு சக்கர வாகனங்களில் பெண்கள் செய்த சாகசங்கள் அதிசயத்தக்கவை.

இந்திய நாடு சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இன்றுவரை இந்நாட்டின் தலைமைப் பதவிகளில் உட்கார்ந்த பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒரேயரு பிரதமர், ஒரேயரு குடியரசுத்தலைவர், இரண்டே மக்களவைத் தலைவர்கள், முதல்வர் நாற்காலியைத் தொட்டவர்கள் பதினைந்து பேர்.
125 கோடி மக்கள்தொகையில் சரிபாதிக்கு சற்றே குறைவான எண்ணிக்கை உள்ள பெண்களுக்கு இந்நாட்டில் முழு உரிமை இன்னும் கிடைக்காததும் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு இன்னமும் சட்டமாகாமல் கிடப்பில் கிடப்பதும் பெரிதும் வேதனைக்குரியது.பெண்களுக்குரிய இயல்பான சமத்துவ உரிமைகளை அளிக்காமல் நாட்டின் வளர்ச்சி என்பது கேள்விக்குறிதான். இன்றைக்கு நாடெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சாதிய ஒடுக்குமுறைகளும், பாலியல் வன்கொடுமைகளும் என்றைக்கு தீருமோ தெரியவில்லை. இன்னும் எத்தனைப் பெண்களை, சிறுமிகளை நாம் பலிகொடுக்க இருக்கிறோமோ என்று நினைக்கும்போது நாம் சுதந்திர நாட்டில்தான் வாழ்கிறோமா? பெண்களுக்கான சட்டங்கள் எல்லாம் முழு வீச்சுடன் செயல்படுத்தப் படுகின்றனவா? என்று எண்ணும்போது வெறும் பெரும் மூச்சுதான் எழுகிறது. வீட்டில் இருக்கின்றபோதும் சரி, படிக்கவோ, வேலைவாய்ப்பிற்காகவோ வெளியே அனுப்பும்போதும் சரி, பெண்குழந்தைகளை பெற்றவர்கள் குறிப்பாக தாய்மார்கள் அன்றிலிருந்து இன்றுவரை வயிற்றில் நெருப்பை சுமந்துகொண்டுதான் இருக்க வேண்டி உள்ளது.

தகவல்தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியும் கூட பெண்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. இன்றைக்கு கைப்பேசிகளும், சமூக வலைதளங்களும் பெண்களை ஆபாசப்படுத்திப் பார்ப்பதில் முன்னணியில் இருக்கின்றன. முன்பெல்லாம் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், வேலைபார்க்கச் செல்லுமிடங்களில் இருந்த பெண்களுக்கான தொந்தரவுகள் இன்று சமூக வலைதளங்கள் மூலமாக இராட்சசத்தனமாய் பல்கிப் பெருகி பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆண்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது என்பதை இன்றைய யதார்த்த நிலையை வைத்து பின்வரும் கவிதை ஒரு கேள்வியோடு முடிக்கிறது.

திக்குகள்தோறும் எரிக்கப்படுகிறோம்

யாமத்தின் இருட்டினை
தன்னுள்ளே அப்பிக் கொண்டு
பகலின் சட்டையை வெளியே
அணிந்துகொண்டிருக்கும்
அந்த வடிவத்தை பார்க்கவே
அச்சமாகத்தான் இருக்கிறது
இரவில் மட்டுமே இருந்தபயம்
இப்போது பகலிலும்
அதற்கு பிஞ்சும் ஒன்றுதான்
பழுத்ததும் ஒன்றுதான்
அதற்குத்தேவை எம் தேகம்
அன்றையப்பொழுதிற்கு ஒருதேகம்
அதன்தீயை தணித்துக் கொள்ளவே
நாங்கள் படைக்கப்பட்டிருப்பதாய்
ஏளனம் கொண்டு திரியும்
அந்த வடிவத்தை தனியாகவோ
கூட்டமாகவோ பார்த்தாலே
எம்மை நோக்கிதான் வருகிறதென
எம்மை இறுக்கி கிழித்துவிடுமென
கிழித்தப்பின் எம்மை
தீயிட்டு எரித்துவிடுமென
எப்போதுமே அஞ்சுகிறோம்
ஒரேயரு சந்தேகம்தான்
நாடு முழுக்க எப்படி
அம்மன் ஆலயங்களும்
அனைத்து மத ஆண்டவன்
வழிபாடுகளும்?இவையெல்லாம் ஒருபுறம் பெண்மையை கீழ்மைப்படுத்திக் கொண்டிருக்க, நாடகங்கள் என்ற பெயரில் இந்தியத் தொலைக்காட்சிகள் அனைத்துமே பெண்களை பகுத்தறிவுச் சிந்தனை அற்றவர்களாக மாற்றுவதில் கங்கணம் கட்டிக் கொண்டு மூடத்தனங்களை பரப்புவதிலும், பெண்களை கொடுமைக்காரிகளாக, ஒரு ஆடவனுக்கு இரண்டு மூன்று பேர் போட்டி போடுபவர்களாக, மணமான ஆடவன் பின்னால் சென்று அவன் வாழ்க்கையை குலைத்து தன்பக்கம் திருப்ப வைக்கும் சூழ்ச்சிக்காரிகளாக, அரைகுறை ஆடைகளோடு நடனமாடுபவர்களாக என்று இன்னும் பட்டியல் போட்டுக் கொண்டே போகுமளவிற்கு பெண்களை அறிவார்ந்த வகையில் உயர்த்திக் காட்டாமல் பிற்போக்குத்தனத்தில் மூழ்கடிப்பவைகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. சத்தமில்லாமல் நிகழ்ந்துவரும் இந்த பிற்போக்குத் தனத்தை பொறுப்புள்ள யாருமே கண்டிப்பதில்லை, தடுத்து மடைமாற்ற முன்வருவதுமில்லை என்பதும் கசப்பான உண்மை.

இன்றைய பெண்களின் மனநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றமும் பெரிதாக போற்றும்படி இல்லை என்பதுதான் வருத்தத்திற்குரியதாக இருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது ஒருபுறம், அதேநேரம் குடும்ப அமைப்புகள் பெரிதும் சிதைந்து வருகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் கல்வி என்பது அறிவைப் பெறுவதற்கும், வேலைவாய்ப்பிற்கு துணை நிற்பதற்கும்தான் என்பதை உணர வேண்டியது அவசியம். அதைப் போன்றே வேலைக்குச் செல்வதும், பொருளீட்டுவதும் நாமும் நம் குடும்பமும் வளமாகவும் குறைகளின்றி வாழ்வதற்கும், இயன்றவரை இயலாதவர்களை கைதூக்கிவிடுவதற்கும் என்பதையும் உணர வேண்டும்.குடும்பத்தின் பொறுப்புகளை இருவரும் சுமந்தால்தான் இல்லறம் இனிக்கும் என்கின்ற அழுத்தமான உண்மையை உணர்வதும், பெண்பிள்ளை, ஆண்பிள்ளை என்ற பாகுபாடு காட்டாமல் இருவருக்கும் குடும்பத்தின் அருமையை, வேலைகளைப் பகிர்ந்து செய்வதை, தாய்தந்தையை முதுமைக் காலத்தில் கைவிட்டுவிடாமல் பரிவோடு கவனிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வை உணர்த்தி வளர்ப்பதும், கணவன்-மனைவி இருவருமே குழந்தைகள் நலனில் அறிவுபூர்வமாக அக்கறை செலுத்தி ஆளாக்குவதும், சமத்துவத்தோடு சுமைகளைப் பகிர்ந்து கொள்வதும்தான் இன்றைய தலையாய தேவையாக இருக்கிறது.

பெண்கள் தங்களின் சுய கட்டுப்பாட்டை இழந்து கட்டவிழ்த்து விட்டதுபோல் சமூக வலைதளங்கள், டிக்டாக் போன்றவற்றில் தமக்கான கௌரவத்தை இழந்து தம்மை வெளிப்படுத்துவதெல்லாம் கூட தவிர்ப்பது சிறந்தது. எண்ணங்களிலும், செயல்பாடுகளிலும் அறிவார்ந்த மேம்பாட்டை வளர்த்துக் கொள்வதையும், சமூக இழிநிலைகளைப் போக்குவதற்கு போராட்ட குணங்களை வளர்த்துக் கொள்வதையும் இன்னும் பயணிக்க வேண்டிய தூரங்களை எண்ணி, உயர்நிலையை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, மீண்டும் பிற்போக்குத் தனங்களில் தம்மை இழந்துவிடுதல் கூடாது.

இன்றைக்கு எல்லா இடங்களிலும், எல்லா வகைகளிலும் பெண்மையை வீழ்த்த வலைகள் விரிக்கப்படுகின்றன. அவற்றில் மாட்டிக் கொள்ளாமல் சிறகை விரிப்பதிலும், சிகரத்தைத் தொடுவதிலும் கவனத்தைத் திருப்புங்கள் பெண்களே! அதற்கு உற்ற துணையாய் நில்லுங்கள் ஆடவரே! அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்!

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker