டிக் டாக் அவசியமானதா? ஆபத்தானதா?
சாப்பாடு தண்ணீர் வேண்டாம் தூக்கம் வேண்டாம் படிப்புல அக்கறையும் வேண்டாம்… என எப்போதும் செல்போனிலேயே கிடக்கும் பள்ளி கல்லூரியின் பதின்ம வயது பிள்ளைகளை எப்படி கையாள்வது என்பது தான் இன்று பெற்றோர்களின் பிரதான கவலையாகியுள்ளது.
அப்படி ஒரு மோகம் என்பதா?
வெறி என்பதா?
பைத்தியம் என்பதா?..
அல்லது எல்லாமுமேதான் என்பதா..?
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இன்று ஒரு தலைமுறையையே அடிமைபடுத்தியுள்ளது இந்த ‘டிக் டாக்’ என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. இளம்தலைமுறையினரின் பொன்னான நேரத்தை சூறையாடிவிடுவதில் டிக் டாக்கிற்கு இணையாக சொல்ல வேறில்லை.
இப்போது இந்தியாவில் மட்டுமே சுமார் 12 கோடிக்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். செல்போன் செயலிகளில் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை காட்டிலும் டிக்டாக்கையே இன்று அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பதின்ம வயதுள்ள இளம்தலைமுறையினரே இதன் வடிவமைப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள். டிக் டாக் பயன்பாட்டில் 40 சதவீத பள்ளி கல்லூரி மாணவர்களே பாட்டு டான்ஸ் நகைச்சுவை..
போன்றவற்றில் தங்கள் திறமைகளை உலகிற்கு தெரியப்படுத்த இளம்தலைமுறைக்கு இது ஒரு வரப்பிரசாதமாக மாறியிருப்பது கண் கூடாகத் தெரிகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் திரைப்பட பாடல்கள் திரைப்பட டான்ஸ்கள் திரைப்பட நகைச்சுவைகளை டப்மாஷ் செய்து டிக் டாக்கில் வெளியிடுகிறார்கள். வீட்டு தொலைக்காட்சிகளில் 24 மணிநேரமும் சதாசர்வ காலமும் இந்த தலைமுறையினர் எதைப் பார்த்து ரசிக்கின்றனரோ… அதிலிருந்து தான் அவர்களின் கற்பனை உருவாகியிருக்கிறது. சுமார் பத்து வயது சிறுவன் கூட இப்படி டிக் டாக் செயலியில் தன்னைத்தானே வெளிப்படுத்தி ரசிகர்களை பெற்றுவிடுகிறான்.
சாக்கோ டி பாய் என்ற இளைஞன் 6 லட்சத்து 40 ஆயிரம் பார்வையாளர்களை கொண்டுள்ளார். இதேபோல ஹேசல் சினி என்ற இளம்பெண் 11 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளார். புக்கரு என்ற பெயருள்ள மலையாள மொழியில் டிக் டாக் செய்யும் இளைஞன் 17 லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ளார். இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு அதிகம் பார்வையாளர்கள் யார் தயவும் இல்லாமல் கிடைக்கிறது என்பது மட்டுமல்ல இதில் அவர்களுக்கு ஒரு நல்ல வருமானமும் வரத்தொடங்கிவிடுகிறது. அத்துடன் கல்லூரி விழாக்களில் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுபவர்களாகவும் இவர்கள் மாறிவிடுகிறார்கள்… என்பது கூடுதல் இன்பமான விஷயமாகிவிடுகிறது.
இவை மட்டுமே டிக் டாக் என்றால் கூட பிரச்சினை எழுந்திருக்காது. இதில் இளைய தலைமுறையினர் செய்யும் சேட்டைகள் வரம்புகளைக் கடந்த ஆபாசமாக இருப்பதே டிக் டாக் தடை செய்யப்பட வேண்டும் என்ற சமூக குரலாக மாறியதற்கான காரணமாகும்.
ஆபாசங்களும் ஆபத்துகளும்
அரைகுறை ஆடைகளும் அங்க சேட்டைகளும் கொண்ட நடனத்தை அரங்கேற்றுவது பாலியல் ஆசைகளை தூண்டும் விதமான முகபாவங்களை வெளிப்படுத்துவது உதட்டை பிதுக்கியும் விழிகளை சுழற்றியும் அந்தரங்கத்தில் கணவனோடோ காதலனோடோ வெளிப்படுத்தும் பாவங்களை பொது வெளியில் படையலிடுவது.. போன்றவை கடும் விமர்சனத்திற்கு உள்ளாயின.
இது இவர்களுக்கு எண்ணற்ற தீவிர ரசிகர்களை பெற்றுத் தருகிறது. தர்மபுரி பாலக்கோடு கடமடை கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் இது போன்ற டிக் டாக் பதிவுகளை போட.. அதை தொடர்ந்து ரசித்துப் பார்த்த திருநெல்வேலி வாசுதேவநல்லூரை சேர்ந்த இளம்பெண் தன் வீட்டாருக்கே சொல்லாமல் அந்த வாலிபரை தேடி அவர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இது போலீஸ் வழக்காகி பெண் மேஜராகாத காரணத்தால் பெற்றோருக்கே மீட்டுத்தரப்பட்டார்.
இளம்பெண்கள் ஆர்வக்கோளாராக பதிவிடும் சாதாரண பதிவுகள் கூட பெரும் சர்ச்சையாகி குடும்பமே சீரழியும் நிலைக்கு சென்றுவிடுகிறது.
இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் தன் தோழிகளுடன் புர்கா போட்டவண்ணம் ஒரு பாட்டுப்பாடி டிக் டாக் பதிவு போட அதை பார்த்த அதே மதத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அப்பெண்ணை ஆபாசமாக திட்டி பதிவு போட அந்த பெண்ணின் குடும்ப வாழ்க்கையே கேள்விக்குறியானது.
இத்தனைக்கும் அதில் சிறிதும் ஆபாசமாக பேசவோ நடந்து கொள்ளவோ இல்லை.
சில பெண்கள் இதுபோன்ற சூழல்களில் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நடந்துள்ளன.
மதுரை உயர் நீதிமன்றத்தில் டிக் டாக்கை தடை செய்ய வழக்கு தொடுத்த வழக்கறிஞர் முத்துகுமார் இதுவரையில் டிக் டாக் பயன்பாட்டால் 400 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தன் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
எவ்வளவு லைக்குகள் வருகின்றன எவ்வளவு பின்னூட்டங்கள் வருகின்றன என்பதில் போதையாகி எந்த எல்லைக்கும் சென்று பதிவிடும் போக்குகள் தலைதூக்கிவிடுகின்றன. இவை இளைய தலைமுறையை இயல்பு நிலையிலிருந்து பிறழவைக்கின்றன.
மொத்தத்தில் தன்னுடைய அந்தரங்க ஆசையை வெளிப்படுத்தும் பொறுப்பின்மையும் மற்றவர்களுடைய அந்தரங்கத்தை அறிய விரும்பும் அற்பத்தனமும் டிக் டாக்கில் கைகோர்ப்பதே பெரும் விபரீதங்களுக்கு வித்திடுகிறது.
டிக் டாக்கால் சில நன்மைகளும் நடக்கின்றன. ஒருசிலரிடம் மறைந்திருக்கும் அற்புதமான திறமைகள் வெளிப்படுவதற்கான வடிகாலாகவும் இது உதவுகிறது.
ஒரு குடியிருப்பு பகுதியில் எப்படி துய்மை பணி அனைவராலும் ஒருங்கிணைந்து செய்யப்பட்டது என்ற ஒரு பதிவு பெரும் வரவேற்பு பெற்றதோடு அதுபோல வேறுபல இடங்களில் அந்த மாதிரி நடப்பதற்கும் வழிசெய்தது.
இணைய தொழில்நுட்ப வல்லுனர் செழியனிடம் பேசியபோது “இதை பயன்படுத்துபவர்கள் செய்யும் சேட்டைகள் தர்மசங்கடமாக இருக்கிறது என்பது ஒருபுறமென்றாலும் மறுபுறம் தவறு செய்யும் அரசியல்வாதிகளை கிண்டல் அடித்து டிக் டாக் போட்டு தட்டிக் கேட்பதற்கும் இளந்தலைமுறை தவறுவதில்லை.
பெரிய பெரிய ஊடகங்கள் கேட்கத் தவறிய அல்லது கேட்கத் தயங்கும் கேள்விகளை இந்த சிறுசுகள் துணிச்சலாக போகிற போக்கில் டிக் டாக்கில் அலட்சியமாக கேட்டு கேள்விக்குறியாக்குவதும் நடக்கிறது” என்றார்.