குழந்தைகள் அதிகமாக டிவி பார்த்தால் மூளை வளர்ச்சி பாதிக்கும்
குழந்தைகளை குழந்தைகளாக வளர்ப்பதும் குழந்தை பருவத்தில் சரியான வளர்ப்பை சொல்லி தருவதும் மிக மிக முக்கியம். ஹைபர்ஆக்டிவ், நடத்தையில் பிரச்னை இருக்கிறதா போன்ற சர்வேக்களை எடுத்துள்ளனர். அதில் அதிகமாக டிவி பார்த்தால் 1 வயதுள்ள குழந்தைகள் 1278 பேரும் 3 வயதுள்ள குழந்தைகள் 1345 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தனது 7 வயதுக்குள் 10% குழந்தைகள் இப்பிரச்னைகளால் பாதிப்புக்குள்ளாகின்றனர். கல்வி தொடர்பான விஷயங்களிலும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். படிப்பு, பள்ளி மீது ஆர்வம் குறைகிறது. மொழி திறனும் குறைந்து வருகிறது. டிவியில் உள்ள கார்ட்டூன்களைப் பார்த்து அங்கு பேசப்படும் மொழியை தாங்களும் பேசுகின்றனர். நட்பு நலம் கெடுகிறது. உறவுகளின் மீது உள்ள பந்தம் கெடுகிறது.
குழந்தைகள் அதிகமாக டிவி பார்த்தால் மொழி திறன் குறையும். 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் அதிகமாக டிவி பார்த்தால் கிராஸ் மற்றும் ஃபைன் மோட்டர் ஸ்கில்கள் குறையும். கை, கால்களால் செய்யும் அசைவுகள், வேலைகள் போன்றவற்றை குழந்தைகளால் அதிகமாக செய்ய முடியாது. 8 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை அதிக நேரம் டிவி பார்க்கவே விட கூடாது. ஒரு மணி நேரத்துக்கு மேல் பார்க்க கூடாது என சொல்லுங்கள். 10-12 வயதில் மூளை வளர்ச்சி (முதிர்ச்சி) ஏற்படும். மைலினேஷன் எனும் வளர்ச்சி அது. அப்போதுதான் உடல், உணர்வுகள் தொடர்பான வளர்ச்சி, மனம் தொடர்பான சமூக உணர்வுகள் ஆகியவை வரும். இது முக்கியமாக காலகட்டம் அதனால் டிவி பார்க்கும் குழந்தைகளை அதிகமாக பார்க்க விடாமல் தடுப்பது மிகமிக அவசியம்.
டிவியை பார்த்துக்கொண்டே அதிகமான நொறுக்குதீனிகளை சாப்பிடுகின்றனர். நிறைய சாப்பிட்டும் போதும் என்ற உணர்வை குழந்தைகள் உணர்வது இல்லை என்பதே உண்மை. அதிக நேரம் டிவி அல்லது வீடியோ கேம்ஸ் அல்லது லேப்டாப்பில் விளையாடும் குழந்தைகள் மற்ற குழந்தைகளைவிட அதிகமாக அதிவேக செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
9-16 வயது குழந்தைகள் உடல்பருமனாக மாற, டிவி ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. உடலுழைப்பு இல்லாததால் குழந்தைகள் தொப்பை போட்டு உடல்பருமனாக மாறுகின்றனர். சோர்வு, ஆர்வமின்மை, சோம்பேறித்தனம், அதிகமாக உண்ணும் பழக்கம் போன்ற பிரச்னைகள் உள்ள குழந்தைகளை பெற்றோர் கவனித்து திருத்த வேண்டும்.
டிவியில் வரும் விளம்பரங்களிலும் அதிக அளவு உணவு தொடர்பான விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. அதிக சர்க்கரை கொண்ட உணவுகள், துரித உணவுகளாக வருவதால் அதைப் பார்த்து குழந்தைகளும் அவற்றுக்கு அடிமையாகின்றனர்.
குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மிக எளிமையாக டிவி மூலம் குழந்தைக்கு அறிமுகமாகிறது. வேகமாக வண்டி ஓட்டுதல், குற்றங்கள், திருடு, கொலை, வன்புணர்வு, மிரட்டல், போதைப் பழக்கம் இப்படி பலவற்றையும் குழந்தைகள் டிவி மூலம் பார்க்கின்றனர். சிறு வயதிலே இதெல்லாம் இயல்பு என்றும் இதெல்லாம் பரவலாக இருக்கும் என்பதையும் புரிந்து கொள்கின்றனர்.
நாடகங்கள் மூலமாக பொய், சூழ்ச்சி, பகை, வஞ்சம், கோபம், கவலை, பழி வாங்குதல், பதுங்கி தாக்குதல், ஏமாற்றுதல், பேராசை போன்ற எதிர்மறை குணங்களை கற்கத் தொடங்குகின்றனர். இதற்கு முழு முக்கிய காரணம் வீட்டில் உள்ள பெரியோர்கள்தான்.