குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்வியல் பாடங்கள்
பொதுவாக ஒரு குழந்தையை பள்ளியில் சேர்த்துவிடும் வரை ஆர்வமாக பல விஷயங்கள் சொல்லிக் கொடுப்போம். ஆனால் சேர்த்த பிறகு நம் பிள்ளைகளுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் பள்ளி தந்து விடும் என்று எண்ணி நம் வேலைகளை கவனிக்க தொடங்கி விடுவோம். பள்ளியில் மொழி, கணிதம், வரலாறு, அறிவியல் என்று பொதுவாக உள்ள பாடங்களை சொல்லித் தருகிறார்கள்.ஆனால் வாழ்க்கை சீராக அமைய பலபல விஷயங்கள் தெரிந்திருக்கவும் வேண்டுமே!
அதையெல்லாம் ஏன் பள்ளியே சொல்லித்தரக் கூடாது என்ற உங்கள் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக கட்டு ரையைத் தொடர்கிறேன். நம் வீட்டில் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இருவரின் படிப்பு முறை, புரிந்து கொள்ளும் சக்தி எல்லாம் வெவ்வேறுதானே? சில குழந்தைகள் அன்புக்கு அடிமை, சில குழந்தைகள் மிரட்டினால் கட்டுப்படும். சில குழந்தைகள் ஆரவாரம் செய்யும், சில எதற்கும் கட்டுபடாது.
அப்போது நாம் என்ன செய்கிறோம். அவர்களுடைய குணத்திற்கு ஏற்ப அமைதியாகவோ அதட்டியோ புரிய வைக்கிறோம். அவ்வளவு நுணுக்கமாக சொல்லித்தர நம் பாடத்திட்ட முறையில் இடம் இல்லை. எனவே வீட்டில்தான் இதனை கற்றுக் கொடுக்க வேண்டும். உங்களைத் தவிர வேறு யாரால் முடியும்?
நாம் தினமும் செய்யும் ஒவ்வொரு விஷயமும் நம்மை நல்லவிதமாகவோ கெட்ட விதமாகவோ பாதிக்கும். சிறு வயதிலேயே ஓர் இலக்கை நிர்ணயம் செய்துவிட்டால் அதுவே அந்த குழந்தைக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறந்த வழிகாட்டியாக இருக்கும். முடிவெடுக்க உதவும். டாக்டர், இஞ்சினீயர் என்று எந்த தொழிலை தேர்ந்தெடுக்க போகிறோம் என்பது அக்குழந்தைக்கு வெகு நாளைக்கு பிடிபடாது. ஆனால் “எது செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும்; செய்வன திருந்தச் செய்ய வேண்டும்” “ஏமாற்றி முன்னேறக் கூடாது”. “பிறரை கீழே தள்ளி முன்னேறக்கூடாது”, “எது செய்தாலும் என் மனசாட்சிக்கு உட்பட்டு செய்ய வேண்டும்”, குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்” என்பது போன்ற தொலை நோக்கு பார்வையுடன் நிர்ணயிக்கும் இலக்குகள் தாம் வாழ்க்கை கோட்பாடுகள்.
இந்த கோட்பாடுகள் தான் ஒவ்வொரு குழந்தையின் அடித்தளம். இந்த அடித்தளத்தை வலுவாக போட நாம் கை கொடுத்தோம் என்றால் அதைவிடப் பெரிய சொத்து எதுவும் இல்லை.
ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய விருப்பு வெறுப்பு அதற்கான காரணங்கள், திறமை, இயலாமை, எதில் இன்னும் கூர்மையாக வேண்டும் என்ற சுய பரி சோதனை செய்தால் “நான் எந்த இடத்தில் இருக்கிறேன்” என்று அந்த குழந்தைக்கு புலப்படும். வலுவாக இல்லாத விஷயங்களை வலுப்படுத்திக் கொள்ளலாம். வானம் வசப்படும்.
தவறு செய்வது மனித இயல்பு. யாரும் இங்கு அனைத்தையும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை. ஆனால் தவறு செய்தால் அதிலிருந்து கற்ற பாடத்தை மறக்கவே கூடாது. அந்த தவறை மீண்டும் செய்யக் கூடாது என்று குழந்தைகளுக்கு புரிய வைக்கலாம்.
அண்மையில் ஒரு வீடியோ பார்த்தேன். அதில் இந்திய பெற்றோர்கள், தங்கள் டீனேஜ் மகன்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை முழுதாக கூட கேட்டுக் கொள்ளாமல் இடைமறித்து தாங்கள் சொல்வது தான் சரி என்று கத்திவிட்டு செல்வதை போல் சித்தரித்திருந்தார்கள். கேள்வி கேட்டால் அதிகபிரசங்கிதனம் என்று கூறாமல் குழந்தைகள் எதையும் பகுத்தறிந்து பயில கற்றுக் கொடுக்கலாம். தர்க்கம் செய்து பகுத்தறியட்டும்.
ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒளிந்திருக்கும் தனித்தன்மைக்கும் படைப்பாற்றலுக்கும் தீனிப் போட வேண்டும். ஓவியம் வரைவது, கதை கவிதை எழுதுவது, ஹைகூ எழுதுவது, நகைச்சுவையாக பேசுவது போன்றவையெல்லாம் ஒரு குழந்தைக்கு ஏற்படும் வெளிப்படுத்த தெரியாத மனஅழுத்தங்களுக்கு வடிகால். எனவே அவர்களின் படைப்பாற்றலை வரவேற்போம். அரைத்த மாவையே அரைக்கத்தான் பல ஆயிரம் பேர் இருக்கிறார்களே!
குழந்தைகள் இன்றைய காலக்கட்டத்தில் தற்காப்புக் கலை கற்பது மிக அவசியம். அவர்களுக்கு மனதளவில் சுய பச்சாதாபம், அமைதியின்மை இருந்தால் உளவியல் நிபுணரையோ தாய் தந்தையையோ அணுக வழிகாட்ட வேண்டும்.
இது மிகமிக முக்கியமான கலை. எப்போது கவனிக்க வேண்டும்? எப்போது பேச வேண்டும்? எப்படி எதிராளியிடம் அணுக வேண்டும்? என்பதெல்லாம் ஒருவருக்கு வாழ்க்கையில் சுனாமியோ பொன்மழையையோ தரக்கூடிய விஷயங்கள். எனவே சிறு வயது முதலே நீங்கள் எங்கே சென்றாலும் அவர்களை உடன் அழைத்துச் செல்லுங்கள். எவ்வளவு சொன்னாலும் பழகாத பிள்ளை, நீங்கள் செய்வதைப் பார்த்து “டக்” என்று புரிந்து கொள்ளும். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் – நாம் சரியாகத்தான் பழகுகிறோமா என்ற சுயபரிசோதனையை முன்னரே செய்து விடுங்கள் – பாவம் பிள்ளை!
வாழ்க்கை பாதை கரடுமுரடானது தான். அதை தைரியமாக எதிர்கொள்ள தயார்ப்படுத்துதல் அவசியம். தோல்வியை கண்டு துவளாமல், எதிரியைக் கண்டு பதறாமல், துரோகம் கண்டு கலங்காமல் வஞ்சகம் கண்டு நடுங்காமல் “உள்ள நாள் வரையிலே நன்மையும் தீமையும் ஒன்றென்றே எண்ண வரம்தா!
உறவோடு பகையையும் இரவோடு பகலையும் ஒருமித்து பார்க்க வரம்தா”என்ற கண்ணதாசனின் வரிகளுக்கு ஏற்ப துணிவு பழக்குவோம்.
எமோஷனல் இன்டெலிஜன்ஸ் என்று சொன்னால் சட்டென்று புரியும். உங்கள் உணர்வுகளை புரிந்து, ஆராய்ந்து அதை பாஸிடிவாக பயன்படுத்தி ஒரு விஷயத்தை அமைதியாக எடுத்துரைக்கவும், தடைகளை வெல்லவும் உதவுவது தான் ஈஐ என்ற எமோஷனல் இன்டலிஜன்ஸ். இது ஐ.கியூ.வைவிட முக்கியமானது. இதை தினசரி ஏதேனும் ஒரு வகையில் பழக்கலாம்.
ஒரு விஷயத்திற்காக உழைக்கிறோம் என்றால் தடைகள் தாண்டி வெற்றி பெற மனஉறுதி மிக அவசியம். சில பேர் கிட்டத்தட்ட சிகரம் தொட்ட நிலையில் முயற்சியை கைவிட்டுவிடுவார்கள். மனவுறுதி இருந்தால் தான் இறுதிவரை போராடி வெற்றி பெறலாம்.
அதேபோல் ஒரு சூழ்நிலையில் இருந்து கட்டென்று வெளியே வரும் திறனே நெகிழ்திறம். இதனை கைவரபெற்றால் தான் எந்த பிரச்சினைக்குள்ளும் மூழ்கிவிடாமல் தப்பிக்கலாம்.
கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டிய பாடம். ஒரு திருமணம் வெற்றியடைய வேண்டும் என்றால் கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் தோற்றுப்போக வேண்டும். ஈகோவிற்கு இடமில்லை. ஒருவரை ஒருவர் பாராட்டி கொள்ள வேண்டும்; விட்டுக்கொடுக்க வேண்டும். இன்னும் பல பக்கங்கள் எழுதலாம். உங்களுக்கு தெரியாததா? சொல்லிக் கொடுங்கள். குறைந்த பட்சம் அக்குழந்தையின் முன் சண்டையிட்டு திருமணத்தை பற்றி ஒரு திகில் ஏற்படுத்தாமல் இருக்கலாம்.
ஒரு குழந்தையை நம் வாழ்க்கையில் சேர்க்க முற்படுகிறோம் என்றால் நம் வாழ்க்கை தலைகீழாக மாறப் போகிறது. அது நமக்கு தெரியும். நம் பிள்ளைகளுக்கும் அவர்களை வளர்ப்பதில் நாம் பட்ட மனரீதியான பொருளாதார ரீதியான சிரமங்களை எல்லாம் அவ்வப்போது நினைவுபடுத்தி மிகைப்படுத்தாமல் கூறலாம். மகிழ்ச்சி தந்த விஷயங்களையும் கூறலாம். எது எப்படியோ “அக்குழந்தையை சார்ந்துதான் உன்னுடைய அடுத்த 25 வருடங்கள் இருக்கும்” என்பதை சொல்லாமல் சொல்லி விடுங்கள்.
வாங்குகிற சம்பளத்திற்குள் செலவு செய்யவும், சேமிக்கவும் வேண்டும் என்பதை சிறு வயது முதலே பழக்க வேண்டும். முழுவதுமாக காசு கொடுத்து வாங்கக்கூடிய பொருளை தவணை முறையில் வாங்கி அதை குழந்தைகளுக்கும் பழக்க வேண்டாமே!
சிறு வயதில் உண்டியல் வாங்கிக் கொடுத்து பழக்கும் நாம் அதே பிள்ளை வளர்ந்த பின் கேட்கும் தேவையற்ற விலை மதிப்புள்ள பொருளை வாங்கிக் கொடுக்கிறோம். குழந்தை அதற்கு பிடித்த பாடத்தை எடுத்துக்கொள்ளும். சேமிப்பதில் அக்கறை இருந்தால் வீட்டிற்கு நல்லது. இன்னும் முக்கியமான 15 விஷயங்கள் இருப்பதனால் இந்த இடத்தில் ஒரு புல் ஸ்டாப். அடுத்த வாரம் பேசுவோம்.