எடிட்டர் சாய்ஸ்

மாணவர்கள் ‘சபை கூச்சம்’ தவிர்த்தால் சிகரத்தை தொடலாம்

எதையும் சாதிக்க துணையாக இருப்பது பேச்சுத் திறன். ஆனால் பேச்சுத்திறனை முற்றிலும் முடக்கிவிடக்கூடியது கூச்சம். சிறந்த மாணவர்கள்கூட தங்கள் கருத்துக்களை கூச்சமின்றி மற்றவர் மத்தியிலும், அவையிலும் எடுத்துக் கூற தயக்கம் கொள்கிறார்கள். அத்தகைய கூச்ச சுபாவம் மாணவர்களை எப்படி பின்னோக்கித் தள்ளுகிறது. கூச்சம் தவிர்த்தால் எப்படி வெற்றி பெறலாம் என்பதை இங்கே பார்க்கலாம்…

எல்லோருக்குமே ஆளுமைத்திறன் அவசியம். அதுதான் நமது திறமையை வளர்க்க கூடியது. நமது அடையாளமாக மாறக்கூடியது. மற்றவர் நமது தகுதியை எப்படி எடைபோடுவார்கள் என்றால் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதைப் பொறுத்துதானே?நன்றாகப் படித்து எழுதினால் நல்ல மாணவன் என்று பெயர் பெறுகிறோம். நிறைய மதிப்பெண் பெறுகிறோம். அதுபோல நாம் என்ன செய்கிறோம் என்பதே நமது ஆளுமைத் திறனாகும். அதுவே மதிப்பெண்கள்போல வாழ்வின் மதிப்பையும் உயர்த்துகிறது.

ஆளுமையை வளர்த்துக் கொள்ள அவசியமானது பேச்சுத்திறன். மாணவப் பருவத்திலேயே பேச்சுத்திறன் நிரம்பப் பெற்றவர்கள் பிற்காலத்தில் தாங்கள் சார்ந்திருக்கும் துறையில் உச்சம் பெற்றுவிடுவார்கள் என்பது நிச்சயம்.

ஏனெனில் நாம் நினைப்பதையும், செய்வதையும் பேச்சுத்திறனால்தான் வெளிப்படுத்த முடியும். சொல்ல முடியாததை செய்து காட்டலாம். ஆனால் சொல் ஆற்றலால் ஜெயித்தவர்கள், அதை செய்து காண்பிக்கும் முன்னாலே மற்றவர் மத்தியில் செல்வாக்கு பெற்றுவிடலாம். செயலுக்கு மற்றவரின் ஆதரவையும் பெற்று முன்னேறலாம் என்பதே பேச்சு ஆற்றலின் மகிமையாகும். நீங்கள் இதை பல இடங்களில் நிதர்சன உண்மையாக உணர முடியும்.சிறப்பாக படிக்கும் மாணவர்களைவிட, சிறந்த பேச்சாற்றல் கொண்ட மாணவர்கள், செயல்திறன் சார்ந்த பல இடங்களில் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பதை கண்கூடாக காணலாம். சொல்லப்போனால் வாழ்வில் மதிப்பெண்களைவிட, உங்களுக்கு மதிப்பு பெற்றுத் தரப்போவது பேச்சாற்றல்தான். பேசும்போது நாம் பேசும் தன்மை, குணம், தைரியம், அறிவுத்திறன் அனைத்தும் வெளிப்படும்.

பேச்சுத்திறனில் இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும். சொல்லக்கூடிய விஷயத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். அதே சமயம், அதை யாரிடம் சொல்கிறோமோ, அவர்கள் கேட்கக்கூடிய நிலையில் இருக்கிறார்களா? என்று உறுதிசெய்ய வேண்டும். மேலும் மற்றவர் சொல்வதை முழுமையாகக் கேட்க வேண்டும். அப்படியிருந்தால்தான் நாம் அவர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகாமல், நம்மால் அவர்களுக்கு புரிய வைக்க முடியும். சொல்ல வந்ததைத் தவறாக வெளிப்படுத்தும்போது அது கருத்து வேற்றுமை, மனவருத்தம், உறவில் விரிசல் போன்ற பிரச்சினையை ஏற்படுத்தும்.

பேசப் பேசத்தான் பேச்சாற்றல் வளரும். தயங்கி நிற்பதால் தாழ்வு மனப்பான்மையே பெருகும். ஒரு அவையில் அல்லது நண்பர்கள் மத்தியில் பேசப்போகிறோம் என்றால் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். முதலில் எதைப்பற்றி பேசுகிறோம் என்று திட்டமிட வேண்டும். மற்றவரை மட்டம் தட்டிப் பேசக்கூடாது. பொதுவாக மற்றவர்களை ஊக்குவிக்கும் கருத்துகளையே பேச வேண்டும். அவர்களுக்குப் புரியும்படி பேச வேண்டும்.

கோபத்துடன் பேசக்கூடாது. வீண் வாதங்களை தவிர்க்க வேண்டும். சொல்ல வரும் விஷயத்தைச் சுருக்கமாக சொல்லி முடிக்க வேண்டும். ஆனால் பேச்சுத்திறனை வெளிப்படுத்த கூச்சம் தடையாக இருந்தால் அதை தவிர்க்க பின்வரும் வழிகளை பின்பற்றலாம்…முதலில் எதைப் பற்றி பேசப்போகிறோம் என்பது பற்றி முடிவு செய்து கொண்டு அதற்கு தேவையான விவரங்களை திரட்டி குறிப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். பேசும் முன் ஒத்திகை செய்து கொள்ளலாம். நண்பர்கள் அல்லது பெற்றோர் முன்னிலையில் பேசிப் பார்க்கலாம்.

கூட்டத்தினரைப் பார்த்து கூச்சம் வேண்டாம். அவர்கள் உங்களைப் போன்ற சக மாணவர்கள் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். தவறு ஏற்பட்டால் திருத்திக் கொள்ளலாம் என்று தன்னம்பிக்கை கொள்ளுங்கள். பல தலைவர்களின் பேச்சுகளை கேட்பதன் மூலம் அவர்களின் பேச்சுத் திறமை பற்றியும், அவர்கள் அவையில் எப்படி செயல்படுகிறார்கள் என்பது பற்றியும் விளங்கிக்கொள்ளலாம்.

ஒருவர் இடை மறிக்கும்போது எப்படி பேச வேண்டும், தடுமாற்றம் ஏற்படும்போது எப்படி சமாளிக்க வேண்டும் என்பது பற்றிய தெளிவுகளையும் பிரபலங்களின் மேடைப்பேச்சில் இருந்து அறியலாம். சொல்ல வேண்டிய கருத்துகளில் தெளிவிருந்தால் பயமும், கவலையும் மறந்து பேச முடியும் என்பது உண்மை. மாணவர்களே பேச்சாற்றலை வளர்த்து வெற்றி சிகரம் தொடுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker