ஆரோக்கியம்மருத்துவம்

இரைப்பை புற்றுநோய் வரக்காரணமும்- தடுக்கும் வழிமுறையும்

உயிர் வாழ உணவு அவசியம், சிலர் உயிர் வாழ உணவு சாப்பிடுகின்றனர். சிலரோ சாப்பிடுவதற்கே உயிர் வாழ்கிறார்கள். சாப்பிடும் உணவு சென்று அடைவதற்கு உடலில் இரைப்பை உள்ளது. இதுவே மனிதர்கள் உயிர் வாழ மிக முக்கியமான உறுப்பு.

வயிறு-இரைப்பை

இரைப்பை மற்றும் வயிறு ஆகிய இரண்டும் ஒன்று என பலர் நினைக்கின்றனர். அது தவறு. இரண்டும் வெவ்வேறானவை. இரைப்பை என்பது வயிற்று பகுதியில் உள்ள ஒரு உறுப்பு. நாம் வாயில் போட்டு மென்று சாப்பிடும் உணவானது உணவுக்குழாய் வழியாக இரைப்பையை சென்றடைகிறது. அங்கு செரிமானம் அடையும் உணவு குடல் பகுதியை சென்றடைகிறது. பின்னர் முன்குடல், சிறு குடல் வழியாக பெருங்குடலை அடைகிறது. அங்கிருந்து மல குடலுக்கு சென்று ஆசனவாய் வழியாக மலம் ஆக வெளியேறுகிறது. ஆகவே ஜீரணம் தொடங்கி உடலுக்கு சக்தி தரும் முதல் உறுப்பாக இரைப்பை திகழ்கிறது.

இரைப்பை புற்று நோய்இத்தகைய திறன்மிகுந்த இரைப்பையை பேணி காக்க வேண்டியது அவசியம். அதை சரிவர பேணாத பட்சத்தில் ‘கியாஸ் டிரைசிஸ்’, ‘அல்சர்’, இரைப்பை புற்று நோய் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றில் இரைப்பை புற்று நோய் முக்கியமானது. இந்த நோயின் தாக்கம் சர்வதேச அளவில அனைத்து நாடுகளிலும் பரவலாக உள்ளது.

ஆனால் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக ஜப்பான், கொரியா மற்றும் சீனாவில் அதன் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. இது உலக அளவில் பாதியாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் மிக குறைந்த அளவில் இரைப்பை புற்று நோய் தாக்கம் உள்ளது.

மிசோரம் மாநிலத்தில் அதிக அளவில் இருக்கிறது. அதற்கு அடுத்தப்படியாக இரைப்பை புற்றுநோய் தாக்குதல் தமிழ்நாட்டில் உள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் குறைந்த அளவில் காணப்படுகிறது. இந்த நோய் ஆண், பெண் ஆகிய இரு பாலரையும் தாக்குகிறது. இவர்களில் பெண்களை விட ஆண்களுக்கு தான் இந்நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது.

காரணம் என்ன?

இரைப்பை புற்று நோயின் தாக்கத்துக்கு மக்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களே முக்கிய காரணங்களாக விளங்குகிறது. மிசோரம் மாநில மக்களிடம் புகை பழக்கம் அதிகம். அங்கு வாழும் மக்கள் தண்ணீரில் கூட புகையை கலந்து குடிக்கிறார்கள். இது தவிர சமையல் எண்ணையும் முக்கிய காரணியாக உள்ளது.ஏற்கனவே சமையல் செய்த எண்ணையை மீண்டும் கொதிக்க வைத்து உணவு தயாரித்து அதை சாப்பிடுவதன் மூலம் இரைப்பை புற்று நோய் உண்டாகிறது. இதுவும் இந்நோய் தாக்கத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. உணவில் அதிக அளவு உப்பு சேர்ப்பதும் மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சராசரியாக ஒருமனிதன் நாள் ஒன்றுக்கு உணவில் 4 முதல் 5 கிராம் வரை மட்டுமே உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்க்கப்படும் கருவாடு மற்றும் ஊறுகாய் போன்றவற்றை அசைவம் மற்றும் சைவ உணவு பிரியர்கள் தாராளமாக சேர்த்து கொள்கிறார்கள். இதுவும் இரைப்பை புற்று நோய்க்கு ஒரு காரணம்.

இதனுடன் மதுப்பழக்கம் மற்றும் புகையிலை பழக்கம் உள்ளவர்கள் இந் நோயால் பாதிக்கப்படுகின்றனர், இவை அனைத்தையும் தாண்டி இன்றைய கால கட்டத்தில் ‘எச்‘ பைரோரை என்ற நச்சு கிருமி இரைப் பையை தாக்குகிறது. இதுவும் இந்நோய் தாக்க காரணமாகிறது.

மரபு வழி முறை

மரபு வழி முறையிலும் 10 சதவீதம் பேரை இரைப்பை புற்று நோய் தாக்குகிறது. இதற்கு உதாரணமாக மாவீரன் நெப்போலியன் போனபாட்டை சொல்லலாம். வெற்றி வீரனாக திகழ்ந்த அவர் தனது 52-வது வயதில் திடீரென இறந்து விட்டார். வயிற்று வலி காரணமாக அவர் மரணம் அடைந்ததாக முதலில் கூறப்பட்டது.அவரது இறப்புக்கு பின் பல வருடங்கள் கழித்து நடத்திய ஆய்வில் அவரது மூதாதையருக்கு இரைப்பை புற்று நோய் இருந்தது தெரிய வந்தது. எனவே மரபு வழி காரணமாக அந்நோய் இவரை தாக்கி உயிரை பறித்து இருப்பது பின்னர் கண்டறியப்பட்டது.

நோயின் அறிகுறிகள்

சாதாரணமாக பசியின்மையே இந்நோயின் முக்கிய அறிகுறியாகும். பசி இல்லாததால் அவர்களால் சாப்பிட முடியாது. கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிறைந்தது போன்று திம்மென்று இருக்கும். சரிவர சாப்பிடாததால் உடம்பு இளைக்கும். எடை குறையும், ரத்த சோகை ஏற்படும். இரைப்பையில் புற்று நோய் கட்டி உடைந்து ரத்தக் கசிவு ஏற்படும்.இதனால் நோய் தாக்கப்பட்டவர்கள் களைப்படைவார்கள்.

இரைப்பையில் புற்று நோய் கட்டி இருப்பதால் சாப்பிட்ட உணவு செரித்து முன்குடலுக்கு செல்ல முடியாது. இதனால் புளிச்ச ஏப்பம் ஏற்படும். நெஞ்செரிச்சல் மற்றும் வாந்தி உண்டாகும். 2 அல்லது 3 நாட்கள் செரிமானம் ஆகாமல் இருக்கும். உணவு துர்நாற்றத்துடன் கூடிய வாந்தியாகவும் வெளிப்படும். சில வேளைகளில் ரத்த வாந்திக்கும் வாய்ப்பு உண்டு. மலம் கருப்பு நிறத்தில் வெளியாகும்.

புற்று நோய் ஏற்பட்டால் கடுமையான வலி இருக்கும். என பலர் நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறு. ஆரம்ப காலத்தில் இந் நோய் தாக்கம் உள்ளவர்களுக்கு வலி இருக்காது. பரவிய நிலையிலும், கடைசி கால கட்டத்தில்தான் வலி தெரியும். உடலில் வீக்கம் மற்றும் வயிறு, மார்பில் நீர் சேர்ந்து பாதிப்பை உருவாக்கும்.பரிசோதனைகள்

இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனே டாக்டரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவர் நோயாளியின் உடலை தொட்டு பார்த்து புற்று நோய் கட்டி இருப்பதை கண்டு பிடிக்க வாய்ப்பு உள்ளது. அதை உறுதி செய்ய முதலில் என்டாஸ்கோபி பரிசோதனை செய்வார். இந்த பரிசோதனை மிகவும் கஷ்டமானது, சிக்கலானது என சிலர் தவறாக புரிந்து இருக்கிறார்கள். இது சாதாரணமானது. 5 முதல் 10 நிமிடங்களில் செய்து முடிக்க கூடியது.

என்டாஸ் கோபி செய்யும் போது பயாப்சி எனப்படும் சதை பரிசோதனை நடத்தப்படும். நோய் பாதித்த இடத்தில் சதையை எடுத்து அதை தனியாக பரிசோதித்து நோய் புற்றுநோய் உள்ளதா என்பதை டாக்டர் துல்லியமாக கண்டுபிடித்து விடுவார். இவை மட்டுமின்றி சி.டி.ஸ்கேன், றிணிஜி ஸ்கேன் மூலம் இரைப்பை புற்று நோய் பரவியுள்ளத்தை கண்டுபிடிக்க முடியும்.

அறுவை சிகிச்சை

இரைப்பை புற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு ஆரம்ப காலத்திலேயே கண்டு பிடித்தால் முறையான அறுவை சிகிச்சை மூலம் அதை பூரணமாக குணப்படுத்த முடியும். கத்திபட்டால் நோய் பரவி விடும் என்ற தவறான கருத்து பலரிடம் உள்ளது. நோயாளிக்கு ஆபரேசன் செய்தால் நல்லது என டாக்டர் கூறினால் பயப்படத்தேவையில்லை.

புற்று நோய் பரவி இருந்தால் ஹீமோதெரபி மருந்து கொடுத்து கட்டியின் அளவை குறைத்து அதன்பின் அறுவை சிகிச்சை (ஆபரேசன்) செய்து கட்டியை எடுத்து விடுவார்கள். அதன் பிறகும் திரும்ப வராமல் தடுக்க ஹீமோ தெரபி மருந்து மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். புற்று நோய் இரைப்பை மட்டுமின்றி மற்ற உறுப்புகளுக்கு பரவி இருந்தாலும் அதை எடுத்து குணப்படுத்த முடியும். எடுக்க முடியாத சூழலில் பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்தகைய அறுவை சிகிச்சை மூலம் உணவு சாப்பிட முடியும். அதே நேரத்தில் புற்று நோய் பாதித்த உடல் உறுப்புகளுக்கு ஹீமோ தெரபி மருந்து சிகிச்சையின் மூலம் கட்டுப்படுத்தலாம். ஹீமோ தெரபியால் முடி கொட்டும். வலி உண்டாகும் என நினைக்கின்றனர். உயிர் பிழைத்தால் மீண்டும் முடி வளர்ந்து விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தடுக்கும் முறைகள்

இரைப்பை புற்று நோய் வராமல் தடுக்கும் வழி முறைகளும் உள்ளன. நமது அன்றாட உணவில் நார் சத்து மிகுந்த பழங்கள், பச்சை காய்கறிகள் மற்றும் உணவு தானிய வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவில் குறைந்த அளவில் ஆடு மற்றும் மாட்டிறைச்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். மற்ற நாட்களில் சத்துமிகுந்த புரோட்டீன் உள்ள துவரை மற்றும் அவரை பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். சமையலுக்கு சுத்தமான எண்ணையை பயன்படுத்த வேண்டும்.

மரபு வழி இரைப்பை புற்று நோய் பாதிக்கும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் முன்பே பரிசோதனை செய்து கொள்வது நல்லது. நோய் தாக்குதல் தெரிந்தவுடன் ஆபரேசன் (அறுவை சிகிச்சை) மூலம் இரைப்பையை அகற்றி விடலாம். இரைப்பையை எடுத்து விட்டாலும் ஜீரண பிரச்சினை இல்லாமல் உயிர் வாழ முடியும்.உடலில் அஜீரண கோளாறு, நெஞ்சு எரிச்சல் போன்ற உபாதைகள் இருந்தால் மருந்து கடைகளுக்கு சென்று மருந்து மற்றும் மாத்திரைகளை தாமாகவே வாங்கி சாப்பிடக் கூடாது. சிலர் இணைய தளத்துக்கு சென்று அதில் கூறப்படும் மருத்துவ ஆலோசனைகள் மூலம் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ள கூடாது.

அவ்வாறு செய்வதன் மூலம் வேறு சில பக்க விளைவுகள் ஏற்படலாம். என்னைப் பொறுத்தவரை இணையதள மருத்துவ அறிவு மருத்துவர்களுக்கு வரம் ஆகவும், மக்களுக்கு சாபம் ஆகவும் கருதுகிறேன். எனவே இரைப்பை புற்று நோய் அறிகுறி தெரிந்தால் உடனே சம்பந்தப்பட்ட டாக்டரை அணுகி மருத்துவ ஆலோசனை பெற்று பூரண குணமடைலாம்.


Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker