குளிர்காலத்தில் குழந்தைகளை எப்படி ஆரோக்கியமாக பாதுகாப்பது?
குளிர்காலம் அல்லது பனிக்காலம் (Winter) என்பது இலையுதிர்காலத்திற்கும், இளவேனில்காலத்திற்கும் இடையில் வரும் பருவ காலம் ஆகும். இந்தக் காலங்களில் இரவு நேரம் அதிகமாகவும், பகல் நேரம் குறைவாகவும் இருக்கும்.
எனவே குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு என்ன பிரச்சனைகள் ஏற்படும். அவற்றை எப்படி சமாளிப்பது என்பதைக் குறித்து பார்ப்போம். குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு காது, மூக்கு, தொண்டையை போன்ற பகுதிகளில் தொற்று நோய்கள் எளிதில் தாக்கும். இதற்கு காரணம் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான். குறிப்பாக இரவு முதல் அதிகாலை வரை குளிரின் தாக்கம் அதிகம் இருப்பதால், இதற்கு இடைப்பட்ட நேரத்தில் மூச்சு திணறல், சளி என பிரச்னைகள் குழந்தைகளுக்கு துவங்கும். குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில், இது காய்ச்சலாக மாறும்.
எனவே குளிர் அதிகமாக இருக்கும் நேரங்களில் குளிர் தாக்காத வண்ணம் காதுகளை நன்றாக மூடி வைத்துக்கொள்ள வேண்டும். குளிர் காலத்தில் எளிதில் தாகம் எடுக்காது. ஆனாலும், போதிய அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். தொண்டை வறண்டு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குளிர் காலத்தில் வெந்நீர் அருந்துவது உடலுக்கு மிகவும் சிறந்தது. இதன்மூலம் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வராது.
குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுப் பொருட்களை நேரடியாக எடுத்து சாப்பிடக் கூடாது. அதை சூடு செய்தோ அல்லது தட்ப வெட்பத்துக்கு அவை வந்ததும் சாப்பிட வேண்டும்.
குறிப்பாக குளிர் காலத்தில் உதடு வெடிப்பு அதிக அளவில் ஏற்படும். அவற்றை தவிர்க்க நெய் அல்லது எண்ணெயை உதட்டில் பூசுங்கள். அதேபோல வறண்ட சருமம் உள்ளவர்கள் தோலில் ஏற்படும் வறட்சியை தடுக்க ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் பூசி குளித்து வந்தால் சருமம் சீராக இருக்கும்.
முக்கியமாக குளிர்காலத்தில் நமக்கு பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க உணவில் கவனம் செலுத்த வேண்டும். காய்கறிகள், ஒமேகா 3 நிறைந்த மீன்கள், சிறுதானியங்கள், பாதாம், வேர்கடலை, தேன், போன்றவற்றை கூடுதலாக உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்கள் செயல் திறன் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்கும்.