குழந்தைகளின் முறையற்ற உணவு பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு
உடல் பருமனால் அவதிப்படுகிறவர்களின் எண்ணிக்கை கணிசமாக கூடி வருகிறது. முன்பெல்லாம் ஆண், பெண் இருவருமே திருமணத்துக்கு முன்பு வரை ஒல்லியாக இருப்பார்கள். திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்ததும் சற்றே பூசினாற்போல மாறிவிடுவார்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக சிறியவர் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் உடல் பருமனால் அவதிப்படுவது அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்கள் அதிக உடல் எடையுடனும், ரத்த அழுத்தத்துடனும் இருக்கிறார்கள் என்று எச்சரிக்கை செய்கிறார்கள் மருத்துவர்கள். பெண் குழந்தைகள் சீக்கிரமே பருவம் எய்தி விடுகிறார்கள். சிலருக்கு ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் சிக்கல், திருமணத்துக்குப் பிறகும் அவர்களை விடாமல் துரத்துகிறது.
குழந்தைகளுக்கு சிறு வயது முதலே அவர்கள் விரும்பியதை எல்லாம் வாங்கிக் கொடுப்பது, அவர்கள் பருமனான பிறகு அவற்றை ஒரே அடியாக தவிர்த்துவிடுவது, இதுதான் பல குடும்பங்களிலும் நடந்து வருகிறது. அதுவும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், குழந்தைகள் மீது செலுத்துகிற ஆதிக்கம் எல்லை கடந்தது. அவற்றில் சேர்க்கப்படும் நிறமூட்டிகளும், சுவையூட்டிகளும் நாக்குக்கு இனிமையே தவிர, உடலுக்கு நல்லதல்ல.
குழந்தைகள் கேட்கிறார்களே என்று ஆரம்பத்தில் அளவுக்கு அதிகமாக கொடுப்பதும் தவறு, பிறகு அவற்றை ஒரேயடியாக தவிர்ப்பதும் தவறு. குழந்தைப் பருவத்தில் இருந்தே சரியான உணவுப்பழக்கத்தை நாம்தான் அறிமுகப்படுத்த வேண்டும். வாரத்தில் குறைந்தது 5 நாட்களாவது வேக வைத்த காய்கறிகளையும் உணவுகளையும் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பெரியவர்களும் இப்படித்தான் சாப்பிட வேண்டும்.
குழந்தைப் பருவம் முதலே காய்கறி, கீரை வகைகள் சாப்பிடுவதை பழக்கி விட்டால், வளர்ந்த பிறகும் அவற்றை விரும்பிச் சாப்பிடுவார்கள். இப்போதெல்லாம் தெருவில் இறங்கி விளையாடுகிற குழந்தைகளைப் பார்க்கவே முடிவதில்லை. கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் என உட்கார்ந்த நிலையிலேயே விளையாட பழகிவிட்டார்கள். அதைத் தவிர்த்து விட்டு குழந்தைகளை குறைந்தது முக்கால் மணி நேரமாவது, அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து ஓடியாடி விளையாடப் பழக்க வேண்டும். இதனால் உடல் தசைகள் வலுப்பெறுவதுடன், உடம்பில் தேவையில்லாமல் கொழுப்பு சேர்வதும் குறையும்.
சிலர் தங்களுக்குப் பிடித்த உணவுகளை அளவில்லாமல் சாப்பிட்டுவிட்டு, திடீரென எடையைக் குறைக்கிறேன் என்று அவர்களாகவே பட்டினி கிடக்க ஆரம்பித்து விடுவார்கள். இது உடல் சோர்வுடன் பக்க விளைவுகளையும் உண்டாக்கும். வேலைக்குச் செல்கிறவர்கள் உணவில் காட்டும் அலட்சியம்தான் பல கோளாறுகளுக்கும் காரணம். முறையற்ற உணவுப் பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத் தாழ்வு ஏற்படும். நம் உணவுப்பழக்கம் சீராக இருந்தாலே எந்தச் சிரமமும் இல்லாமல் நலமுடன் வாழலாம்.