கவனச்சிதறலும், தடுக்கும் வழிமுறையும்
சமீபத்தில் ஒரு குடும்பத் தலைவர் இரு சக்கர வாகனம் ஓட்டிச் சென்ற போது சாலை ஓரமாக இருந்த பேருந்து நிறுத்தத் தில் மோதி உயிர் இழந்த சம்பவம் போன்ற நிகழ்வுகள் தனியாக எப்போதாவது நடப்பது அல்ல. எத்தனையோ விபத்துகள், சாலைகளிலும் வேறு இடங்களிலும் நாள்தோறும் எத்தனையோ மனிதர்கள் வாழ்வில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த சம்பவங்கள் உடல் ரீதியாகக் காயத்தை ஏற்படுத்துவதோடு நின்று விடாமல் மனதளவிலும் காயங்களை ஏற்படுத்துகின்றன..
தசாவதானிகள், சதாவதானிகள் என்ற எண்ண வரிசையில் இன்று நம் சமுதாயத்திலும், கலாசாரத்திலும் ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடிய அல்லது ஒரே நேரத்தில் பல விஷயங்களில் கவனத்தை செலுத்துகின்ற திறமை எல்லோரிடம் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் உச்சகட்டம் தான் நம் நாட்டின் இரும்பு சட்டமாக ’ஸ்டீல் ப்ரேம்’ ஆக இருக்கக்கூடிய குடிமைப்பணியான இந்திய ஆட்சிப்பணி கூட பொதுமைப்பட்டவர்களாகத் தான் தேர்வு செய்யப்படுகிறார்கள். குடும்ப சூழலிலும் அலுவலக சூழலிலும் மற்றும் பல்வேறு அமைப்புச் சூழல்களிலும் அவ்வாறு ஒரே நேரத்தில் பல செயல்களைச் செய்ய முயற்சிக்காதவர்கள் கூட மற்றவர்களால் ஏற்படும் அழுத்தத்தால் அவ்வாறு முயலும் போது பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.
ஒரு செயலை செய்யும் போது ஒன்றுக்கு மேற்பட்ட மற்ற செயல்கள் பற்றிய சிந்தனை பின்மனதில் உள்மனதில் ஓடிகொண்டிருப்பதால் நாம் செய்து கொண்டிருக்கும் செயலில் முழுக் கவனம் செலுத்த முடியாமல் போவதோடு மட்டுமல்லாமல், மற்ற சிந்தனைகளால் கவனம் சிதைந்து, ஒரு வேலையைக் கூட உருப்படியாக செய்ய முடியாமல் போகிறது. மேலும் மனதில், அனைத்து வேலைகளையும் ஒரே நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற அவசரத்தை மனதில் ஏற்படுத்துகிறது. அதனால் மனதில் உள்ள எண்ணங்களில் கவனம் செலுத்த முடியாமை ஏற்படுவதோடு மட்டுமன்று, அந்த எண்ணங்களுக்கு எல்லாம் செயல்; உருவம் கொடுக்க முடியாமையால் ஏற்படும் பதற்றமும் அதனடிப்படையில் ஏற்படும்.கவனமின்மையும் ஆழமாகச் சுழலும் ஒரு மோசமான சுழற்சிக்குள் மனதைக் இழுத்துச் சென்று விபரிதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது திண்ணம். ஆராய்ச்சிகளின் மூலம், பல செயல்களை ஒரே நேரத்தில் செய்யும் திறமை என்பது அந்தந்த வேலைகளை தனித்தனியாக செய்யும்போது எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட அதிகமான நேரத்தை எடுத்துகொள்வதோடு மட்டுமல்லாமல் முழுமையான செயல்பாட்டையும் முற்றுபெறாத செயல் வடிவத்தையும் கொடுக்கும் என்று நிரூபணமாகியுள்ளது.
பெரும்பாலான சாலை விபத்துகள் ஓட்டுனர்கள் மற்றும் சாலையைப் பயன்படுத்துபவர்களின் கவனமின்மையால் ஏற்படுகின்றன. கவனமின்மைக்கு முக்கிய காரணம் கவனச்சிதறலா கும். கவனச்சிதறலுக்கு காரணம் வாகனம் ஓட்டும் போது ரோட்டில் முழுக் கவனத்தையும் செலுத்தாமல் வீட்டுச் சிந்தனை, வேலைச் சிந்தனை, நாட்டுச் சிந்தனை என பல எண்ணங்களால் கவனம் சிதறுண்டு எதிரே வரக்கூடிய வாகனம் தெரியாமலும், அவற்றின் வேகத்தை சரியாக கணிக்காமலும் செல்வதால் சாலை ஓரங்களில் உள்ள மரங்கள், பஸ்நிறுத்தங்கள் மீது மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. சிறு வயதிலிருந்து குழந்தைகளை எல்லா விஷயங்களிலும் அவர்கள் சிறந்து விளங்க வேண்டுமென்று, அவர் கள் பல வித அறிவு மற்றும் திறமைகளை வளர்த்து கொள்ள, அதுவும், ஒரு சில நேரம் ஒரு சில விஷயங்களில் ஆர்வம் இல்லாத குழந்தைகளைக்கூட பெற்றோர்கள் அவர்கள் இளம் வயதில் செய்யத் தவறிய விஷயங்களை எல்லாம் குழந்தைகள் செய்ய வேண்டும் என எதிர்பார்த்து குழந்தைகள் மனதில் ஒரு அவசர உணர்வையும், பதற்ற உணர்வையும் ஏற்படுத்துகிறார்கள்.
ஆகவே, சிறு வயதிலேயே ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் போதே இன்னொரு வேலைப் பற்றிய எண்ணங்கள் உள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டு இரண்டு வேலைகளையும் சரிவர செய்ய முடியாமல் அந்தக் குழந்தைகள் வளர்ந்து அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது கவன சிதறல்கள் அதிகமாக ஏற்படுகின்றன.
பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளில் இந்தியா முதல் நிலை வகிக்காததற்குக்கூட இது ஒரு காரணம் எனலாம். தனிப்பட்டத்துறைகளில் அல்லது வேலைகளில் கவனம் செலுத்தி அந்தத் துறைகளில் செயல்களில் சிறந்த வல்லுனர்களாக ஆகக்கூடிய பண்பு சிலரிடமே இருக்கிறது. அவர்கள் அந்தந்தத் துறைகளில் முழுக்கவனம் செலுத்துபவர்களாக பலர் எல்லா பாடங்களிலும் சிறந்த அறிவு பெற வேண்டுமென்று நினைத்து முயற்சி செய்து பல துறைகளில் தங்களின் அறிவு மற்றும் நேரத்தை ஒரே சமயத்தில் செலவிடுவதால் பெரும்பாலான தருணங்களில் எந்த செயலும் முழுமையாக நிறைவேறாமல் போவதற்கு வாய்ப்புண்டு.
ஏனெனில் நமது மூளை, மனம் இரண்டும் ஒரு நேரத்தில் ஒரு வேலை செய்வதற்கு மட்டுமே தான் பயிற்சி பெற்றுள்ளது. இதற்குத் தீர்வு எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும், குறிப்பாக வாகனம் ஓட்டுவதற்கு முன்பு இரண்டு நிமிடம் அமைதியாக இருந்து மனதில் எழக்கூடிய மற்ற வேலைகள் பற்றிய சிந்தனையை பட்டியலிட்டு பின்பு செய்ய விரும்பும் செயலை செய்ய தொடங்க லாம்.
அவ்வாறு செய்வதால் வாகனம் ஓட்டும் போது மற்ற எண்ணங்கள் வராமல் பார்த்துக் கொள்ளலாம். அதையும் தாண்டி வேறு எண்ணங்களோ, கேள்விகளோ வாகனம் ஓட்டும்போது மனதில் எழும்பும் போது அவற்றை முக்கியமானவைகள் என்று அங்கீகரித்து, அதே நேரம் அந்த எண்ணத்தின் பின்னால் மனதை தொடரவிடாமல் வாகனம் ஓட்டி முடித்தபின் அந்த செயல்களை செய்து கொள்ளலாம் என்று மனதுக்குள் தனக்குத் தானே சொல்லிக் கொள்வதும், பின்பு வாகனம் ஓட்டி முடித்த பின் ஏற்கனவே மனதில் வந்த எண்ணங்களுக்கு ஒரு அட்டவணைத் தயார் செய்து செயல்படுத்துவதும் முக்கியமானதாகும்.
வாகனம் ஓட்டும் போது கவனச் சிதறல் ஏற்படுவது மட்டுமல்லாது, கடந்து செல்லும் பாதையில் ஏதாவது மனதை ஈர்க்கக்கூடிய பொருளையோ, செயலையோப் பார்த்துவிட்டால் அதைப் பற்றிய எண்ணங்களுடன் பயனிப்பதும் தவறான முறையாகும். அதற்கு பதில், அந்தப்பொருட்களையோ, செயல்களையோ பார்ப்பதோடு நிறுத்தி கொண்டு தேவைப்பட்டால் இடையில் சிறிய ஓய்வு எடுப்பதோ அல்லது பயணம் முடித்த பின்பு அந்த எண்ணங்களுக்கு இடம் கொடுப்பதோ செய்யலாம். இதே பிரச்சினை தான் இளைஞர்களுக்கு! ஒரு வேலையை எடுத்து செய்யும் போதுஅதில் முழுமையான கவனம் செலுத்த முடியாமல், மனதில்; தன்னுடைய திறமையை தானே சந்தேகிக்கும் கேள்விகளில் தொடங்கி உலகத்தை பற்றிய எண்ணங்கள் வரை அனைத்தையும் மனதில் நினைத்து கொண்டு செயல்படுவதால் எந்தச்செயலையும் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
ஆகவே, பல வேலைகளை ஒரேநேரத்தில் செய்வது என்பது கேட்பதற்கு ஒரு அசாத்தியத் திறமை என்று தோன்றினாலும் அது ஒரு சிறந்த செயல் வகை இல்லை என்பது ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு நேரத்தில் ஒரு செயலில் கவனம் செலுத்துவதும் ஒரு எண்ணத்தை எண்ணுவதும் மனிதனுக்கு மன வளத்தைக் காப்பது மட்டுமல்லாமல் விபத்தில்லா வாழ்க்கையையும் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.