குளிர்காலத்தில் உதடுகளை பராமரிப்பது எப்படி?
குளிர்காலத்தில் நம்முடைய சருமம் வறண்டு போவதற்கு காரணம் உடலிலுள்ள நீரின் அளவு குறைவது தான். இதனால் குறிப்பாக உதடுகள் வறண்டு போக ஆரம்பிக்கும். உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால் உதடுகளால் நீர்த்தரத்தைப் பற்றிக் கொள்ள முடியாது. இதனால்தான், உதடுகள் வறட்சியோடு சேர்த்து வெடிப்படையவும் செய்கின்றது.
எனவே உதட்டுக்கு எண்ணெய் பசை தன்மையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தேங்காய் எண்ணெய்யை ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதில் ஐந்து சொட்டு அளவுக்கு ஆலிவ் எண்ணெய்யை ஊற்ற வேண்டும். பின்னர், அதை லேசாகச் சூடுபடுத்தி காட்டன் துணியில் நனைத்து அதை உதட்டில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, காட்டன் துணியால் அதிகப்படியாக இருக்கக்கூடிய எண்ணெய் பசையைத் துடைத்துக்கொள்ள வேண்டும். இதை வாரத்துக்கு இரு முறை செய்தால் உதடுகள் வெடிக்காமல் இருக்கும். சிலருக்குக் குளிர்காலத்தில் உதடுகள் நிறம் மாற ஆரம்பிக்கும். அவர்களுக்கான டிப்ஸ்
கிரீன் டீ தற்போது பெரும்பாலானோர்களின் வீட்டிலும் பயன்படுத்துகிறார்கள். அந்த கிரீன் டீ பேக்கை எடுத்து சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், மெதுவாக அந்த டீ பேக்கால் உதட்டை தேய்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நிமிஷங்கள் வரை தேய்த்துக்கொள்ள வேண்டும். பின்னர், உலர்ந்த காட்டன் துணியால் உதடுகளைத் துடைக்கும்போது இயல்பான பிங்க் கலரில் உதடுகள் மாறிவிடும்.
பிங்க் நிற ரோஸ் இதழ்களை ஒரு நாள் இரவு முழுவதும் தேனில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதை உதட்டின் மேல் தடவிக் கொண்டு மெதுவாக மசாஜ் போன்று செய்ய வேண்டும். அந்தக் கலவை வாயினுள் போனாலும் எந்தப் பிரச்னையும் கிடையாது. அதனால், இரண்டு அல்லது மூன்று முறை மசாஜ் செய்ய வேண்டும். முதலில் கொஞ்சம், அடுத்து கொஞ்சம் என மேலே மேலே அந்தக் கலவைகளை தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர், 10 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு உதடுகளைக் கழுவி விட்டுப் பார்க்கும் போது உதடுகள் மிகவும் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும்.
கடைகளில் பாதாம் எண்ணெய் கிடைக்கும். அதில் ஸ்வீட் பாதாம் எண்ணெய்யை வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெய்யை ஒரு துளி அல்லது இரண்டு துளி இட்டு இரவு தூங்குவதற்கு முன்னர் உதடுகளில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். காலையில் பார்க்கும் பொழுது உதடுகள் ரொம்ப அழகாக இருக்கும்.