தங்கம், வெள்ளி நாணயங்களில் செய்யப்படும் அழகிய ஆபரணங்கள்
நம் மூதாதையர் காலத்திலிருந்து இன்று வரை காசுமாலைக்கு என்று ஒரு தனி அங்கீகாரத்தை நாம் வழங்கிக்கொண்டுதான் வருகிறோம். காசுமாலை மட்டுமல்லாமல் தங்க, வெள்ளி நாணயங்களைக் கொண்டு பலவிதமான நகைகள் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்திருப்பதோடு அவை பெண்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளன.
காயின் நெக்லஸ்கள்
* தங்க நாணயங்கள் என்றாலே அதில் பெரும்பாலும் லஷ்மி தெய்வத்தின் உருவமே அச்சிடப்பட்டிருக்கும். இது போன்ற நாணங்களின் காதுப்பகுதியானது அன்னம் போன்ற உருவத்துடன் இணைக்கப்பட்டு தங்கச்சரடு மற்றும் செயின்களில் கோர்ப்பதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் காசுகளின் கீழ்புறம் தங்க மணிகள் சிறிய அளவில் ஒற்றையாகவோ, முக்கோணம் போன்றோ அல்லது நாணயங்களைச் சுற்றிலுமோ இணைக்கப்பட்டுள்ளன. இந்த நாணயம் ஒன்று கெம்ப்கல் பதிக்கப்பட்ட திலக டிசைன் என்று அடுத்தடுத்து செயினில் கோர்க்கப்பட்டு வரும் நெக்லஸ்கள் மிகவும் அழகாக இருக்கின்றன.
* இன்னும் சில நெக்லஸ்களில் லஷ்மி உருவம் கொண்ட நாணயங்களில் தெய்வத்தின் உருவமானது மேலெழும்பியது போன்று இருக்கும். அதன் காதுப்பகுதியில் சிவப்புக்கல் டிசைனும், கீழ்பகுதியில் சிறிய சிவப்புக்கல்லும் பதித்த நாணயமானது கழுத்தைச்சுற்றியும் இருப்பது போல் கோர்க்கப்பட்டு நெக்லஸ்கள் வடிவமைக்கப்படுகின்றன. இவை பார்வைக்கு கழுத்தை நிறைக்கும் நகையாக உள்ளது.
* அடர்த்தியான தங்க அட்டிகையின் கீழ்புறம் தங்க நாணயங்கள் ஒரு வரிசையாக இருக்க அதன் கீழ்புறம் வெள்ளைக்கல் நாணயங்கள் ஒரு வரிசை கோர்க்கப்பட்டு இந்த நெக்லஸின் மத்தியில் வெள்ளை மற்றும் பச்சை அல்லது சிவப்பு கற்கள் பதித்து செய்யப்பட்டிருக்கும் நெக்லஸை தனி நகையாக அணிந்து சென்றாலே அது கம்பீரமான தோற்றத்தைத் தருவதாகவே இருக்கின்றன. இந்த நெக்லஸ் முற்றிலும் பாரம்பரியமான தோற்றத்தையும் தருகின்றது.
* கருப்பு மனிச்சரங்களிலும் முன் கழுத்துக்கு மட்டும் தங்க நாணயங்களை கோர்த்து செய்யப்படும் நெக்லஸ்களும் மிகவும் அழகாக இருக்கின்றன.
* இது போன்ற தங்கள் நாணயங்களில் கடவுள்களின் உருவங்கள் மட்டுமல்லாது செழிப்பு மற்றும் வெற்றிக்கான உருவங்கள், பெண் அதிகாரத்தைக் குறிக்கும் உருவம், காதல் மற்றும் அழகைக்குறிக்கும் கிரேக்க தெய்வங்கள், ராஜா, ராணி தலைகள், பழைய இந்திய நாணயங்கள் மற்றும் பழைய பத்து மற்றும் ஐந்து காசுகளின் டிசைன்களிலும் நாணயங்கள் வந்துள்ளன.
* தங்க மற்றும் வெள்ளி நாணயங்களை அடுத்தடுத்து கோர்த்து மூன்று மற்றும் நான்கு சரங்களாகச் செய்யப்பட்டிருக்கும். நெக்லஸ்களும் அருமை என்றே சொல்ல வேண்டும்.