இளம் பெண்களுக்கு ஏன் மாரடைப்பு வருகிறது.. தடுப்பது எப்படி?
மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் மட்டுமல்லாமல் எதிர்மறை எண்ணங்களும்கூட மாரடைப்பு வருவதற்கு வழிவகுக்கும்” என எச்சரிக்கிறது மருத்துவ உலகம். முன்பு, 50 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே வந்துகொண்டிருந்த மாரடைப்பு, இப்போது 20 வயதினரையும் விட்டுவைக்கவில்லை. இப்போது, இளம் பெண்களும் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
பெண்களுக்கு மாதவிடாய் இருக்கின்றவரை, 10 ஆண்களுக்கு ஒரு பெண் வீதம் மாரடைப்பு வரும். மாதவிடாய் நின்ற பிறகு 40, 45 வயது ஆகிவிட்டால், ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் மாரடைப்பு வரும். பொதுவாகப் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் அதிகமாகச் சுரக்கும். இதற்கு, மாரடைப்பைத் தடுக்கின்ற சக்தி உண்டு.
ஈஸ்ட்ரோஜென் குறைபாடு ஏற்படும் பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான சாத்தியங்கள் அதிகரித்திருக்கின்றன. எதிர்மறை எண்ணங்களும் வாழ்க்கைமுறையும், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களும் சில பெண்களிடம் உள்ளதால், 20-25 வயதிலேயே மாரடைப்பு வருகிறது. இந்தியாவில் மட்டும் ஒரு மணி நேரத்துக்கு 90 பேர் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர்.
முதல் அட்டாக் வந்த பின், அவர்கள் மருத்துவரிடம் சென்று, அவர் கூறும் வழிமுறைகளைத் தொடர்ந்து சரியாகக் கடைப்பிடித்தால், இரண்டாவது அட்டாக் வராது. ஒருவருக்கு 35 வயதில் மாரடைப்பு வந்தால், அதற்காக அவர் கவலைப்படக்கூடாது. அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றிலிருந்து வெளியே வர முயல வேண்டும்.
அப்படிச் செய்தால், அவர்களும் 90 வயதுவரை வாழ முடியும். மூன்று அட்டாக் வந்து, நான்காவது அட்டாக் வந்தால் இறந்துவிடுவோம் என்று சிலர் நம்புகின்றனர். அப்படியெல்லாம் இல்லை. சிலர், 30 அட்டாக் வந்த பின்னரும் உயிருடன் இருக்கிறார்கள். ஒரு மனிதனின் இதயம் 125 வருடங்கள் வரை ஆரோக்கியமாக இருக்குமாறு இயற்கை படைத்திருக்கிறது.