பழமை மாறா பாரம்பரிய நகை ஜிமிக்கி
பாரம்பரிய நகைகள் காலத்துக்கு ஏற்றவாறு பல மாறுதல்களை ஏற்று கொண்டு ஒரு நீண்ட பாதையை கடந்து வந்தாலும், சில நகைகளும் வடிவங்களும் பழமை மாறாமல் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று ஜிமிக்கி. ஆதியில் இது பரதநாட்யம் ஆடும் பெண்களால் அணியப்பட்டது.
வட்ட வடிவ முகத்திற்கு தான் ஜிமிக்கி பொருந்தும் என்றாலும் இந்த காதணியின் மீது உள்ள மோகத்திற்கு முகத்தின் வடிவம் ஒரு தடையல்ல. ஜிமிக்கியின் செல்வாக்கு பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவை பெண்களின் காதுக்கு அப்பால் ரவிக்கையில் சேலையிலும் ஆட்சி செய்வதை நாம் காணலாம்.
தோடு பகுதியில் தாமரை மீது அமர்ந்த மஹாலக்ஷ்மி வடிவம் கொண்ட லட்சுமி ஜிமிக்கி திருமண இல்லங்களில் மணமகள் மற்றும் விருந்தினர் விரும்பி அணிகின்றனர். இவை வட்டம், கூம்பு, மற்றும் மணி வடிவிலோ உள்ளது. முத்து, வைரம் மற்றும் இதர கற்கள் பதித்த ஜிமிக்கிகள் பிரசித்தம். சில சமயம் கூம்பு வடிவத்தில் அடக்கி வாசித்து விட்டு, தோடு பகுதியில் கற்பனை விஸ்தரித்து இருப்பதையும் நாம் காணலாம். மயில், மா வடிவம், மற்றும் கோவில் நகை வடிவங்களும் ஜிமிக்கியில் பிரபலம்.
ஜிமிக்கியில் தொங்கும் வட்ட பகுதி அகலமாகவோ, குறுகிய வடிவிலோ, நீண்ட தாகவோ உயரம் குறைவாகவோ இருக்கும். முக வடிவத்திற்கு ஏற்றவாறு ஜிமிக்கி வாங்குவது போய், பட்டு சேலைக்கும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கும் ஏற்றவாறு அணிவதால் ஜிமிக்கியின் கற்பனை விரிந்து செறிந்தது.
காதணியான ஜிமிக்கி தங்கம், வெள்ளியில் மட்டும் அன்றி குயில்லிங் நகைகளிலும் சக்கை போடு போடும் அளவிற்கு பெரும் வரவேற்பு பெற்றது.இத்துடன் ஒரு மெல்லிய தங்க சங்கிலி காதலி சுற்றி மாட்டும் விதமாகவும் உள்ளது. சிலர் இதனை ஒரு வளையத்தில் மாட்டியும் அணிவார்கள். ஒன்றன் கீழ் ஒன்றாகவோ, அருகருகிலோ ஜிமிக்கிகள் அமைத்து அணிபவரும் உண்டு. என்ன புதுமையையும் கற்பனையும் புகுத்தினாலும் அடிப்படை ஜிமிக்கி மறையாமல் இருப்பது விந்தையே.