தாங்கமுடியாத வலியைக் கொடுக்குமா சிசேரியன்?
அறுவை சகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரியாக 100 பிரசவங்களில் 60 பிரசவங்கள் சிசேரியனாகவே நடக்கின்றன. சுகப்பிரசவமாக இருந்தாலும், சிசேரியன் பிரசவசமாக இருந்தாலும் இரண்டிலும் வலி இருக்கத்தான் செய்யும்.
சிசேரியன் பிரசவத்தின்போது தாயின் அடிவயிற்றுப்பகுதி குழந்தையை வெளியே எடுக்கத் தேவையான அளவுக்குக் கீறப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதனால் அறுவை சிகிச்சை முடிந்த முதல் நாள் சற்று வலி இருக்கவே செய்யும். எனவே, வலி நிவாரணத்துக்கான ஊசி போடப்படும். அடுத்தடுத்த நாள்களில் வலி குறைந்துவிடும் என்பதால் அப்போது மாத்திரைகளைப் பரிந்துரைப்போம். சிலருக்கு சாதாரண பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துக்கொண்டாலே வலி குறைந்துவிடும். வலி நிவாரண மாத்திரைகளை 3 அல்லது 4-ம் நாள் நிறுத்திவிடுவோம். அதே நாள்களில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜும் செய்துவிடுவோம். ஆரோக்கியமாகக் குழந்தை பிறந்தால் 99% இதுபோன்ற நடைமுறைதான் பின்பற்றப்படும்.
முன்பெல்லாம், அறுவை சிகிச்சை செய்த இடத்தில் போடப்பட்ட தையலை, அந்த இடத்தில் புண் ஆறியதும் மருத்துவமனைக்குச் சென்று நீக்க வேண்டும். தற்போது அந்தப் பிரச்னையும் இல்லை. இன்று போடப்படும் நவீனத் தையல், குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு தானாகவே உடலால் கிரகிக்கப்பட்டுவிடும்.
குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருக்கும் நாள்களிலும், பிறகு குழந்தைக்குத் தடுப்பூசி போட வரும்போதும் மனநல மருத்துவரிடமும் பிரசவித்த பெண், ஒரு கன்சல்ட்டேஷன் செல்வது நன்று.