கேட்கும் திறன் குறைபாடு
இன்னும் கொஞ்ச நேரத்தில் செத்துப்போயிடுவோம் என்கிற மாதிரி, எல்லோருமே ஆம்புலன்ஸ் ஓட்டுவது போல சைரனை அடித்துக்கொண்டே சாலையில் செல்வது, உலகிலேயே நம்ம ஊரில் மட்டும் தான் நடக்கிறது. ஒலி மாசு காரணமாக உங்கள் கேட்கும் திறன் குறைந்திருப்பது நரம்பு சார்ந்த பிரச்சினையாகவே இருக்கக்கூடும். நரம்பு பாதிப்பு அடைவதன் மூலம் ஒலிகளை கடத்தும் திறன் குறையும் பட்சத்தில், அதற்கு தீர்வு தரும் மூலிகை மருந்துகளின் பயன் குறித்து இதுவரை முழுமையாக ஆய்வு செய்து அறிவிக்கப்படவில்லை.
காது, தலை பகுதியில் செய்யப்படும் வர்ம மருத்துவம் பயனளிக்கக் கூடும். தேர்ந்த வர்ம மருத்துவரை அணுகி ஆலோசியுங்கள். பிற காது நோய்களுக்கு மூலிகை மருந்துகள் அதிக அளவில் பயன்படும். ஆனால் காது கேட்கும் திறன் குறைவுக்கு பயன்படும் மூலிகை மருந்துகள் அதிகம் இல்லை. சளி, நீர் அடைப்பதால் ஏற்படும் கேட்கும் திறன் குறைவுக்கு சுக்கு தைலம் தேய்த்து குளித்தால், படிப்படியாக காது, தொண்டை குழலில் தங்கியுள்ள நீர்த்திவலைகள் குறைந்து கேட்கும் திறன் சீராகும்.
மூக்கடைப்புடன் கூடிய செவித்திறன் குறைவுக்கு, சீந்தில் எனும் தாவர தண்டின் உலர்ந்த பொடியை உள் மருந்தாக அரை டீ ஸ்பூன் அளவு வெந்நீருடன் சேர்த்து சாப்பிடுகையில், கபம் குறைந்து கேட்கும் திறன் சரியாகும். மருத்துவ வாய்ப்புகள் இல்லாத நரம்புதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது எனும் பட்சத்தில், காது கேட்கும் கருவியின் உதவியை நாடுவதில் தயக்கம் வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இன்றளவும் காது கேட்க உதவும் கருவி (ஹியரிங் எய்டு) பயன்படுத்துவதை சமூக அவமானமாக கருதும் நிலை வேதனையானது. கண் பார்வைக்கு உதவும் மூக்கு கண்ணாடியை அழகாக ஏற்றுக்கொள்ளும் மனோபாவம், காது கேட்க உதவும் கருவிக்கு வராதது ஏன் என உண்மையில் புரியவில்லை. ஏளனப்படுத்துவார்கள் என்ற எண்ணத்திலேயே பலரும் அதை தவிர்ப்பது நம் ஊரில் மிக அதிகம். நவீன தொழில்நுட்பத்தில் மிக துல்லியமாய் கேட்கச் செய்யும் பல வகை கருவிகள் தற்போது கிடைக்கின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த திறன் குறைவாக இருந்தால், அவர்களின் பேச்சு திறன், கல்வி் திறன் இரண்டுமே குறையும். எனவே கேட்கும் திறன் குறைவு விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்.
\