விழிக்கும் பெண்மை.. ஜொலிக்கும் தன்னம்பிக்கை..
“பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி கடுமையான மனநெருக்கடியில் சிக்கி ‘கவுன்சலிங்’ பெற்றுக்கொண்டிருக்கும் அந்த பெண் என்னை சந்தித்தபோது, ‘சம்பவம் நடந்த நேரத்தில் உங்களிடம் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதேனும் இருந்ததா?’ என்று கேட்டேன். அவர் பாதுகாப்பு ‘ஆப்’களை டவுன்லோடு செய்த செல்போன் தனது கையில் இருந்தது என்றும், கைப்பையில் சிறிய கத்தி, பெப்பர் ஸ்பிரே, விசில் போன்றவை இருந்தது என்றும் சொன்னார். ‘அவற்றில் எதை எல்லாம் அந்த ஆபத்தான நேரத்தில் பயன்படுத்தினீர்கள்?’ என்று கேட்டபோது, ‘வெறித்தனமாக அவன் என் கையை எட்டிப்பிடித்ததுமே என் உடல் நடுங்கிவிட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே அதிர்ந்து, தளர்ந்துபோய்விட்டேன். இதயம் படபடவென துடித்தது. என்னிடம் இருந்த செல்போனையோ, பாதுகாப்பு உபகரணங்களையோ பயன்படுத்த முடியாத அளவுக்கு நான் நிலைதடுமாறிவிட்டேன்’ என்று அந்த பெண் கண்ணீர் வழிய சொன்னது என்னை அப்படியே உலுக்கிவிட்டது.
இதுதான் பெரும்பாலான பெண்களின் உண்மைநிலை. தனிமையில் சிக்கி பாலியல்ரீதியான பாதிப்பிற்கு உள்ளாகும்போது பெண்கள் முதலில் தங்களது மனோபலத்தையும், துணிச்சலையும் இழந்துவிடுகிறார்கள். இந்த இரண்டையும் இழந்துவிட்டால் அவர்களிடம் இருக்கும் எந்த பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. அப்படிப்பட்ட நிலையில் அவர்களிடம் துப்பாக்கி இருந்தால்கூட அதனை தங்கள் தற்காப்பிற்காக பயன்படுத்த முடியாது. அதனால் பெண் களுக்கு ஆப்களை விடவும், பாதுகாப்பு உபகரணங்களை விடவும் முக்கிய தேவை, முதல் தேவை மனோபலமும், தன்னம்பிக்கையும். இந்த இரண்டும் இருந்தால் அவர்கள் எந்த வகையான ஆபத்தையும் எதிர்கொள்வார்கள். எப்படிப்பட்ட சூழலையும் அதிரடியாக சமாளித்து தங்களை பாதுகாத்துக்கொள்வார்கள்” என்று தன்னம்பிக்கை மிளிர பேசுகிறார், மது சரண்.
‘பிரிவென்ஷன் ஆப் செக்ஸூவல் ஹராஸ்மென்ட்’ (போஷ்) எனப்படும் குழு, ஆண்- பெண்கள் இணைந்து வேலைபார்க்கும் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களிலும் இயங்கிவருகிறது. பெண்களுக்கு எதிராக அந்தந்த நிறுவனங்களில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் தொடர்புடைய புகார்களை விசாரித்து அலுவலக ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வது இந்த குழுவின் பணி. இ்ந்தியாவில் 28 கார்ப்பரேட் நிறுவனங்களில் இயங்கும் ‘போஷ்’ குழுவில் இடம்பெற்று, பாலியல்ரீதியான புகார்களை விசாரித்து வரும் பணியை செய்துகொண்டிருப்பவர்களில் மது சரண் குறிப்பிடத்தக்கவர். இவரது வயது 42.
15 ஆண்டுகளாக செய்துகொண்டிருக்கும் அந்த சேவையில் கிடைத்த அனுபவங்களை அடிப்படையாகவைத்து, ‘பாலியல்ரீதியான ஆபத்துக்கள் ஏற்படும்போது பெண்களுக்கு முதல் தேவை மனோபலமும், துணிச்சலும்தான்’ என்ற முடிவுக்கு வந்திருக்கும் மது சரண், இப்போது பெண்களுக்கு மனோ பலத்தையும், துணிச்சலையும் வழங்கும் பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்கிக்கொண்டிருக்கிறார்.
“பெண்களுக்கு தன்னம்பிக்கையுடன் கூடிய மனோபலத்தை வழங்கினால் அவர்களிடமிருந்து பயம் அகன்று விடும். துணிச்சல் வந்துவிடும். அப்போது பதற்றம், தடுமாற்றம் போன்றவை ஏற்படாது. சமயோசிதமாக செயல்படும் ஆற்றலும் உருவாகும். தாக்குவது அல்லது புத்திசாலித்தனமாக தப்பிப்பது போன்ற அதிரடிகளிலும் அவர்களால் ஈடுபடமுடியும். பெண்களின் மனோபலம் ஆண்களைவிட அதிகமானது. தாய்மை, பிரசவம் போன்றவைகளில் தங்கள் மனோபலத்தைக்காட்டும் பெண்கள், ஆபத்தான நேரங்களில் யானை பலத்துடன் வீறுகொண்டு எழுவார்கள் என்பதை நாங்கள் கொடுக்கும் பயிற்சிகள் மூலம் நேரடியாக கண்டிருக்கிறோம். அதனால் பாலியல் துன்புறுத்தலை நினைத்து பெண்கள் பயம்கொள்ளக்கூடாது..” என்று தன்னம்பிக்கை தருகிறார்.
“பெண்கள் அனைவருமே திறமைசாலிகள். அவமானம், புறக் கணிப்பு போன்றவைகளை சந்திக்கும்போது அவர்கள் சோர்ந்துபோகாமல், ‘ஜெயித்துக்காட்டுவேன்’ என்று சவால்விட்டு, திட்டமிட்டு கடுமையாக உழைக்கவேண்டும். அந்த உழைப்பு அவர்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டுசெல்லும். அதுபோல் பாலியல்ரீதியான ஆபத்துக்களும், அச்சுறுத்தல்களும் ஏற்படும்போது பெண்கள் துவண்டுபோகாமல், வெறித்தனமான வேகத்துடன் தனது முழுசக்தியையும் வெளிப்படுத்தி அதை முறியடிக்கவேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்று எதுவும் இந்த உலகத்தில் இல்லை. அதனால் எந்த ஆபத்தையும் எந்த நேரத்திலும் துணிச்சலோடு எதிர்கொள்ளும் அளவுக்கு பெண்கள் எப்போதும் விழிப்புடனும் இருக்கவேண்டும்” என்று வேண்டுகோள் விடுக்கிறார், தன்னம்பிக்கை பயிற்சியாளர் மது சரண்.
பெண்கள் தன்னம்பிக்கையில் ஜொலிக்கட்டும்!