ஆரோக்கியம்மருத்துவம்

எந்த காரணங்களுக்காக தலைவலி வரும்

ஒற்றை தலைவலி (மைக்ரேன்) என்பது பரம்பரையாக வரக்கூடும். பெற்றோரில் ஒருவருக்கு தலைவலி (மைக்ரேன்) இருந்தால், குழந்தைக்கு வரும் வாய்ப்பு 50 சதவீதம், இருவருக்கும் இருந்தால் வரும் வாய்ப்பு 75 சதவீதம் உள்ளது.

மைக்ரேன் தலைவலியானது முன்னெச்சரிக்கை அல்லது சமிக்ஞையுடனோ அல்லது அவை இன்றியோ வரக்கூடும். சமிக்ஞைகள், திடீரென்று தோன்றி மறையும் பார்வைக் கோளாறுகள், தோலில் தொடு உணர்ச்சி, நல்ல மணம் அல்லது துர்நாற்றம், காதில் இரைச்சல், இசை, பேசும் குரல்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக, ஒற்றை தலைவலி வருவதற்கு முன்பாக நோயாளியால் அறியப்படும்.

ஒற்றை தலைவலியை தூண்டக்கூடிய சில காரணிகள் உள்ளன. அவற்றை அறிந்து, தவிர்க்க முடிந்தால், ஓரளவுக்கு இதனை கட்டுப்படுத்தலாம். உதாரணமாக, ‘டைரமின்’ என்னும் வேதிப்பொருள் அதிகமாக உள்ள கெட்டுப்போன வாழைப்பழங்கள், சாக்லேட், மது வகை போன்றவை ஒற்றை தலைவலியை தூண்டக்கூடும். அதிக நெடியுள்ள வாசனைப் பொருட்கள், மாதவிடாய் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள், சோர்வு, மினுக்கும் வெளிச்சம், அதிகத் தூக்கம் அல்லது தூக்கமின்மை, அதிக காபி, சில கொழுப்பு உணவு வகை, நீண்ட நேரம் கணினியைப் பார்த்தல், தட்பவெப்பநிலை மாற்றங்கள் போன்றவையும் ஒற்றை தலைவலியை தூண்டவல்லவை என்பதால், அவற்றை பற்றியும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.



அறிகுறி தோன்றும் நிலையிலேயே அல்லது வலி மிதமாக இருக்கும் நிலையிலேயே மருந்துகள் உட்கொண்டால் ஓரளவுக்கு கட்டுப்படும். மிகத் தீவிரமான வலி, வாந்தி ஆகியவை தோன்றிய பிறகு, மருந்துகள் வேலை செய்யாமல் போகலாம். ஒற்றை தலைவலியை தூண்டும் காரணிகளைத் தவிர்ப்பது அவசியம். அது நல்ல நோய்த் தடுப்பு முறை.

30 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு டென்ஷன் தலைவலி அதிக அளவில் வருகின்றன. 90 சதவீதம் மகளிருக்கும், 70 சதவீதம் ஆண்களுக்கும் டென்ஷன் தலைவலி வருவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. மிகக் குறைந்த அளவு மருந்துகள், அளவான ஓய்வு, நல்ல பழக்கவழக்கங்கள் போன்றவை மனதையும் உடலையும் தளர்த்தி, டென்ஷன் தலைவலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கக்கூடியவை. ஐஸ் ஒத்தடம், இளஞ்சூடான நீரில் குளித்தல், சரியான நேர நிர்வாகம், அக்குபஞ்சர், சுவாசப் பயிற்சி, மனோ நிலை, நடத்தை முறையை மாற்றும் பயிற்சிகள், மசாஜ், ரிலாக்சேஷன் பயிற்சிகள் போன்றவையும் உதவும்.



திட்டமிட்ட, அமைதியான, ஆரோக்கியமான மன, உடல் நிலையுடன் கூடிய வாழ்க்கை போன்றவை நம்மிடம் டென்ஷன் தலைவலிகளை நெருங்கவிடாது.

கிளஸ்டர் தலைவலி அல்லது ‘கொத்துத்’ தலைவலி என்பது ஒற்றை தலைவலியை போலவே வரக்கூடியவை. ஆனால் தினமும், பல முறை கொஞ்ச நேரமே இருக்கக்கூடிய தலைவலி இது. சில நாட்கள் அல்லது சில மாதங்கள் இருந்து, பிறகு ஆறு மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை காணாமல் போய்விடக் கூடியவை.

புகை பிடித்தல், மதுப் பழக்கம் உள்ள ஆண்களுக்கு அதிகமாக வரக் கூடியது. இந்த வலியின் கொடுமை தாங்காமல், சிலர் தற்கொலை செய்துகொள்ளவும் முயற்சிப்பார்கள் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனால் இதற்கு ‘தற்கொலை தலைவலி’ என்ற பெயரும் உண்டு. இந்த தலைவலி வந்தால் உடனடி மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் செய்துகொள்வது அவசியம்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker