குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் முறை
குழந்தைகளுக்கு உடல்நலம் சரியில்லை என்றாலே பெற்றோர்கள் பதறி விடுவோம். அதிலும் குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது என்பது தாய்மார்களுக்கு பெரும் சிரமம். குழந்தைகளுக்கான மருந்துகளையும் அதனை கொடுக்கும் முறைகளையும் ஒவ்வொரு தாயும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
* மருந்து சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு அதை உணவுடன் கலந்து கொடுப்பது சில பெற்றோர்களின் வழக்கம். சிலவகை மருந்துகள் உணவுடன் கலக்கப்படும்போது செயல் திறனை இழப்பதாகத் தெரிவிக்கின்றார்கள் மருத்துவ நிபுணர்கள். சில மருந்துகள் பாலுடன் வினைபுரியும் என்பதால் இயன்றவரை தண்ணீருடன் மட்டும் அல்லது மருத்துவர் பரிந்துரைப்படி தான் கொடுக்க வேண்டும்.
* உங்கள் குழந்தைக்கு மருத்துவர் 6 முதல் 10 நாட்கள் வரை கொடுக்கச் சொல்லி ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம். குழந்தைகளின் உடல் நலம் தேறியதும் ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே மருந்துகளை நிறுத்தக் கூடாது. இதனால் அரை குறையாகத் தேறிய குழந்தையின் உடல் நிலை நோய்க்கிருமிகளின் வீரியத்தால் இன்னும் மோசமாகலாம்.
* சாதரண தும்மல், இருமல் போன்ற வற்றுக்கெல்லாம் மருந்து மாத்திரைகளைக் கொடுத்து குழந்தைகளைப் பழக்க வேண்டியதில்லை. சில தாய்மார்கள் குழந்தை உறங்க இருமல் சிரப்பைக் கொடுப்பதுண்டு.
* கடந்தமுறை நோய்வாய்ப்பட்டபோது குழந்தைக்கு தந்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இன்றி கொடுத்தல். அதே போல காலாவதியான மருந்து, மாத்திரைகளை உடனுக்குடன் அப்புறபடுத்த வேண்டும் ஏனெனில் தவறுதலாக உட்கொள்ளும் போது விளைவுகள் மோசமாகும்.
* பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஓரே மாதிரி அறிகுறிகள் தென்படும் போது, பெரியவர்களது மருந்து மாத்திரைகள் அளவைக் குறைத்து குழந்தைகளுக்குக் கொடுப்பது மிகவும் மோசமானது மருந்தின் சக்தியை எதிர் கொள்ள முடியாமல் அது குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக அமையலாம்.
* மருத்துவர் பரிந்துரைத்த பட்டியலில் உள்ளவையும், கடையில் வாங்கியவையும் ஒரே மருந்துதானா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும். பிறகு அதன் லேபிளின் மீதுள்ள எச்சரிக்கைகளையும் கொடுக்கும் முறைகளையும் படிக்க வேண்டும். சந்தேகம் இருப்பின் மருந்து வாங்கும் இடம் அல்லது மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.