எடிட்டர் சாய்ஸ்

மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள்

இந்த வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சிதான் இருக்கிறது. அது, நேசிப்பது, பிறரால் நேசிக்கப்படுவது’ என்கிறார் பிரெஞ்ச் நாவலாசிரியை ஜார்ஜ் சேண்ட். நம்மை எல்லோரும் விரும்பவேண்டுமென்றால் அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது, நாம் பிறரை விரும்புவது. அதிலும், பிறருக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர்கள்தான் அதிகம் நேசிக்கப்படுகிறார்கள். தான், தன்னலம் என்று வாழ்கிறவர்களிடம் சந்தோஷம் நிரந்தரமாக தங்குவதில்லை. பிறரைப் பற்றிய யோசனைகூட இல்லாத மனிதர்களிடம் மகிழ்ச்சி நீடித்திருப்பதில்லை.

அதைத் தக்கவைத்துக்கொள்வது ஒன்றும் பிரம்ம சூத்திரமில்லை. கொஞ்சம் விரிவான பார்வை இருந்தாலே போதும், சந்தோஷம் என்கிற அபூர்வ சக்தியை என்றென்றும் நம்முடனேயே வைத்துக்கொள்ளலாம். மகிழ்ச்சியாக இருப்பதைவிட, சிறந்த உந்துசக்தி இல்லை என்கிறார்கள் தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள். நாம் மகிழ்ச்சியாக இருந்தாலே, நம்மைச் சுற்றியுள்ளவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆகையால், மகிழ்ச்சி தராத பழக்கவழக்கத்தையும், எண்ணங்களையும் மாற்றிக்கொண்டால் மகிழ்ச்சியை நிரந்தரமாக்கி கொள்ளலாம்.



உள்ளுக்குள் மகிழ்ச்சி இல்லையென்றால், எவ்வளவு செயல்கள் நடந்தாலும் உங்களுக்குத் திருப்தியாகவே இருக்காது. ஒன்று நடந்து முடிவதற்கு முன்னாலேயே உங்களைப் பின்வாங்கச் சொல்லும். அந்த நிலையைச் சமாளிக்க, எப்பொழுதுமே திருப்தியாக இருக்கப் பழகிக்கொள்ளுங்கள். ஒரு செயல் இவ்வளவு நேரத்தில் முடிக்கப்பட வேண்டுமென்று கால வரையறையை உருவாக்கிக்கொள்ளுங்கள். வேலை முடியும்போது, தானாக ஒரு திருப்தி உங்கள் மனதில் குடிகொள்ளும். நல்ல எண்ணங்களின் ஆதிக்கத்தால் ஒரு புது உலகம் உங்களுக்குக் காட்சியளிக்கும். இதற்கு நீங்கள் நல்லெண்ணம் உடையவர்களோடு பழகுதல், பிடித்த பாடல்களை கேட்டல், புத்தகம் படித்தல் போன்றவற்றைச் செய்யலாம்.

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்று நம் முன்னோர் சொன்னதை நாம் நன்கு அறிவோம். பழைய நிகழ்வுகள் சில, நமக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தி இருக்கும். எப்போதுமே அதை நினைத்துக்கொண்டிருந்தால், புதிய பாதைகள் உருவாகாது. எதிர்காலம் பற்றி இப்படி நடக்குமோ அப்படி நடக்குமோ என்ற பயமும் சிலருக்கு உண்டு. இவற்றைத் தவிர்க்க, நாளை எப்படி இருக்க வேண்டும் என்பதை நேற்று நடந்ததில் இருந்து கற்றுக்கொள்ளும்படி நமது நடப்பு நிகழ்வுகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.

நம்முடைய வாழ்வை நாம்தான் அனுபவிக்கிறோம். அதற்கு பிறரோடு ஏன் நம்மை ஒப்புமைப்படுத்தி பார்க்க வேண்டும். அப்படி நமது வாழ்வை பிறரோடு ஒப்பிடுவது, நமக்குள் ஒரு சின்ன பொறாமையை, தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும். அதற்குப் பதிலாக, உங்களை உங்களோடு ஒப்பிடுங்களேன். அப்புறம் பாருங்க, நீங்கள் பட்டாம்பூச்சியாய் பறப்பீர்கள். ‘நேற்றைக்கு 3 கி.மீ. வாக்கிங் போனேன். இன்றைக்கு 4 கி.மீ. போயிருக்கேன். சபாஷ்டா’ என்று நீங்களே உங்களை ஒப்பிட்டு, பாராட்டி கொள்ளுங்கள்.



“எப்பவும் தீய செயல்கள் மீது கவனம் செலுத்திக்கொண்டிருக்க கூடாது. எல்லா இடங்களிலும் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருந்தால், அது சரியாக இருக்காது. அதனால், அதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு மகிழ்ச்சி நிரந்தரமாகும் வகையில் நல்ல எண்ணங்களை வளர்த்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும்.பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டாம். அது, நமது வளர்ச்சியைத் தடுக்கும். ஆகையால், அதையெல்லாம் விட்டுவிடுங்கள். வாழ்க்கையை கடினமான முறையில் சிலர் எதிர்கொள்வார்கள். இது, மன அழுத்தத்தை உருவாக்கும். இதற்கெல்லாம் காரணம் அவரவர்தான். எதுவாக இருப்பினும் எதிர்கொள்வோம் எனும் மனநிலையில் தன்னம்பிக்கையோடு அணுகுவோம்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker