தாய்மை-குழந்தை பராமரிப்பு

சிறுவர்கள், இளைஞர்களிடையே இருக்கும் போதை பழக்கம்

போதை என்பது பகுத்தறிவை பாதாளத்தில் தள்ளிவிடுவது, போதைக்கு அடிமையாவது மனநோயின் அறிகுறி. போதைகள் பல வகைப்பட்டாலும் நாம் இந்த கட்டுரையில் பார்க்கப்போவது வஸ்துகளை முறையற்ற வகையில் பயன்படுத்துவதால் ஏற்படும் போதை. முக்கியமாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே இருக்கும் போதை பழக்கங்களைப் பற்றியது ஆகும்.

சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல் துறையால் “ஓ” என்ற புற்றுநோயாளிகள் பயன்படுத்தும் ஒரு மருந்தை போதைப்பொருளாக பயன்படுத்திய இளைஞர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு விற்பனை செய்த திருப்பூரைச் சேர்ந்த நபர்கள் உள்பட நான்கு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததைத் தொடர்ந்து, தென் இந்தியாவில் இந்த மருந்தை முறைகேடாக பயன்படுத்தி இருப்பது முதன் முதலாக தெரியவந்தது.இதை தொடர்ந்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் காவல்துறை இது பற்றி விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கஞ்சா, ஹெராயின் போன்ற வழக்கமான போதைப் பொருட்கள் தவிர நடைமுறையில் மருந்துப் பொருட்களாகவோ அல்லது வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடியப் பொருட்களையோத் தவறாக பயன்படுத்தி போதை ஏற்படுத்திக்கொள்வது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாகும்.

எந்தெந்த பொருட்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து அதில் உள்ள அபாயங்களை இளைஞர்களுக்கு உணர வைப்பது முக்கியமாகும். மருந்துகள் பற்றிய ஆராய்ச்சி கோடிக்கணக்கான பணம் முதலீடு செய்யப்பட்டு செயல்படும் தொழில் என்பதால் புதிய புதிய மூலக்கூறுகள் தொடர்ந்து பல்வேறு நோய்களுக்கு எதிராக வந்து கொண்டிருக்கின்றன. அதைப்போல் ஒவ்வொரு மருந்தின் வழக்கமான பயன்பாட்டை மீறி முறையற்ற வகையில் எப்படி பயன்படுத்துவது என்ற சட்டத்திற்கு புறம்பான ஆராய்ச்சியும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

குறிப்பாக அதிக அளவில் கிடைக்கக்கூடிய விலை குறைந்த மருந்துகளை அவ்வாறு முறைகேடாக பயன்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகம் நடைபெறுகிறது. அவ்வாறு முயற்சிப்பவர்கள் அந்த மருந்தை அப்பாவி இளைஞர்கள் மீது சோதனை செய்வதற்கும் தயங்கமாட்டார்கள். எடுத்துக்காட்டாக உணவுடன் உட்கொள்ளக்கூடிய மருந்தை தண்ணீரில் கரைத்து ஊசியாக பயன்படுத்தும் போது ஏற்படும் எதிர் விளைவுகளும், பின் விளைவுகளும் அபாயகரமானவை; உயிரிழத்தல் கூட ஏற்படலாம்.

போதையால் ஏற்படும் பின்விளைவுகளில் மிக முக்கியமானது போதைப்பொருள் உட்கொண்டவுடன் ஏற்படும் போதை நிலையைத் தொடர்ந்து வரும் வேதனை நிலை. உடன் விளைவு மற்றும் பின்விளைவு எந்த அளவுக்கு போதையால் உயரப்பறக்கும் எண்ணம் வருகிறதோ, அதே அளவுக்கு கீழே விழும் எண்ணமும் இருக்கும். எவ்வளவு வேகத்தில் உயரத்தில் செல்கிறார்களோ அதைவிட அதிவேகமாக கீழே விழுவது நிச்சயம்.உயரம் சென்றபோது ஏற்பட்ட போதை உணர்வில் இருந்த நேரத்தைவிடக் கீழே விழுந்து கிடந்து துயரப்படும் நேரம் பல மடங்கு அதிகமானதாக இருக்கும். போதையால் ஏற்படும் அளவற்ற கோபம், மனஉளைச்சல், அடிக்கடி ஏற்படும் மனசோர்வு, தொடர் சோக உணர்வு போன்றவை மனநோய்க்கான அறிகுறிகள். மேற்கண்ட உணர்வுகள் எல்லாம் மிதமாக இருக்கும்போது இயல்பான உணர்வுகள் என்றாலும் போதையின் பின் விளைவால் அவை ஏற்படும் போது இயல்பை விட அதிகமாக அல்லது முறையற்று மாறி மன நோயாக திரிகிறது. இந்த மனநோய்களைப் போதை வஸ்துகள் தீவிரப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதிகப்படுத்தவும் செய்கிறது.

இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, எந்தெந்த மருந்தை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்ற ஆராய்ச்சியை விட மாணவர்களையும், இளைஞர்களையும் விழிப்புணர்வு மூலமாக அந்த போதை பாதையில் பயணிக்காமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வது முக்கியம். அதில் பெற்றோர்கள் ஆசிரியர்கள், மருந்து கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் மற்றும் காவல் துறையினரின் பங்கு முக்கியம்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் ஒரு நாளைக்கு குறைந்த நேரமாவது செலவிட வேண்டும். அவர்களுக்கு அறிவுரைப் பொழிவதை மட்டும் செய்யாமல் பொறுமையாக அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். அவர்கள் கருத்துக்கு உடனுக்குடன் எதிர்கருத்தை சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டு கருத்து பரிமாற்றத்திற்கு கருத்தடை செய்வதை விட்டு விட்டு அவர்கள் மனதில் உள்ளதைச் சொல்வதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே உள்ள நட்புணர்வு மற்றும் நம்பிக்கை வளரும். இது குழந்தைகள் தங்கள் மனதில் உள்ளவற்றைப் பெற்றோர்களிடம் தயக்கமில்லாமல் பகிர்ந்துகொள்வதற்கு வழிவகுக்கும்.போதை பாதையைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பதற்கு உதவும். அதற்கு பொறுமை, அவசர அவசரமாக தங்கள் கருத்தை அவர்கள் மீது திணியாமை, அவர்கள் சொல்லக் கூடிய கருத்துகளை வைத்து அவர்களைப் பற்றிய ஒரு உடனடி முடிவுக்கு வரும் செயல் போன்றவைகளை பின்னுக்கு தள்ளி ஒருநாள் அரைமணி நேரம் செலவிட்டால் கூட போதும். அந்த அரைமணி நேரம் அதிசயம் நிகழ்த்தும் சக்தி கொண்டது. அவர்கள் மனதில் எந்த விஷயமாக இருந்தாலும் பெற்றோர்களிடம் பரிமாறிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். அடுத்து, நீங்கள் அவர்களுடன் பேசும் போது அவர்கள் மன ஓட்டங்களைத் தெரிந்துகொள்வதோடு உடல் ரீதியில் உள்ள மாற்றங்களையும் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.

நல்ல விஷயங்களைச் சொல்லும் போது வாழ்த்துங்கள். தவறான விஷயங்களைச் சொல்லும்போது அதைப்பற்றி அதிகமான தகவல்களைக் கேட்பதன் மூலம் அந்த பிரச்சினையை முழுமையாக தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் உடலில் கண்டிப்பாக மாற்றம் தெரியும். குறிப்பாக ஊசி பயன்படுத்துபவர்கள் ஊசிபோட்ட அடையாளங்களை மறைக்க முடியாது.

இதே போன்ற பொறுமையும், பொறுப்புணர்வும் ஆசிரியர்களுக்கும் முக்கியம். இந்த இரண்டு பாதுகாப்பு அரண்களும் சரியாக இருந்தால் எந்த போதைப்பொருள் குற்றவாளிகளாலும் உங்கள் குழந்தைகளை நெருங்க முடியாது. அதைப்போல் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் விற்கும் பழக்கத்தை மருந்து கடை முதலாளிகள் நிறுத்த வேண்டும். புதுக்கோட்டையில் பிடிபட்ட போதை மருந்து மருந்து கடைகளில் மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் வழங்கப்பட்டிருக்கிறது.

இதுபோல் ஒரு சில பேர் மருந்துகளின் தவறானப் பயன்பாட்டைத் தெரிந்தும், பணத்திற்காக அதிக விலைக்கு விற்றும் பணம் சம்பாதிக்கிறார்கள். நம் மருந்து கடைகளில் மளிகை கடை பொருட்கள் போல் மருந்துகளை விற்பது எவ்வளவு அபாயகரமானது என்பதை மருந்து கடை வைத்திருப்போர் உணர வேண்டும். இளைஞர்களிடையே போதைத் தரக்கூடியப் பொருட்களுக்கு தேவை உருவாக்கப்பட்டுள்ளது. போதைப் பொருளால் ஏற்படும் உணர்வு உண்மையென என்னும் போலி உணர்வு, மனதில் உள்ள மனநல குறைபாடுகள், ஏக்கங்கள் நிறைவேறாவிட்டால் அதைச் சரிப்படுத்த போதை தேவை என்ற உணர்வு சரியான வழிகாட்டல் இல்லாமை ஆகிய காரணங்களின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது.பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், எந்த விதமான செயல்பாடுகளை வெளிபடுத்துகிறார்கள், எதைப் பற்றி பேசுகிறார்கள், யாரைப் பற்றி பேசுகிறார்கள், அவர்கள் சகஜமாக எல்லோருடனும் பழகுகிறார்களா அல்லது தனிமையை விரும்பிச் செல்கிறார்களா? என்பது போன்ற விஷயங்களைக் கடைக்கண்ணால் பார்த்தாலே போதும், தெரிந்து கொள்ளலாம்.

இறுதியாக போதை என்பது விதவைகளை உருவாக்கும் உற்பத்திக்கூடம். விதவை என்ற வார்த்தையை இங்கு கணவனை இழந்த கைம்பெண் என்ற பொருளைத் தாண்டி, இழப்பு என்ற பொருளைக் கொண்ட ஒரு பொதுச் சொல்லாக பயன்படுத்துகிறேன். போதை பெற்றோர்களின் அன்பை இழந்த ‘விதவைக் குழந்தைகளை’ பலிகடா ஆக்குகிறது. எதிர்காலம் பறிக்கப்பட்ட விதவை மாணவர்களை உருவாக்குகிறது. விதவைக் கணவர்களும், மனைவிகளும் பெருகுகிறார்கள். நம்மில் ஒவ்வொருவரும் உடனடி நடவடிக்கை எடுக்க தவறினால் எதிர்காலம் இருள் மயமானதாகிவிடும்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker