தாய்மை-குழந்தை பராமரிப்பு

திட்டுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல்

காலை முதல் மாலை, ஏன் இரவு வரையிலும் அலுவலக பணிகளை முடித்து விட்டு மன அழுத்தத்துடன் வீடு திரும்பும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வீட்டை அசுத்தமாக வைத்திருப்பது, சரியாகத் தின்பண்டங்களை உண்ணாமல் இருப்பது, வீட்டுப் பாடத்தை முடிக்காமல் இருப்பது என்று பலவற்றையும் கண்டு அவர்கள் மீது கோபம் கொள்கிறார்கள். மேலும் அவர்களைத் திட்டவும் தொடங்குகிறார்கள். அவ்வாறு குழந்தைகளைத் திட்டும் போது அது அவர்களின் மனம்,ஆரோக்கியமான சிந்தனை மற்றும் உடல் வளர்ச்சி ஆகியவற்றை எவ்வளவு பாதிக்கின்றது என்ற உண்மையை அறியாமல் பல பெற்றோர்கள் நாட்களை நகர்த்துகிறார்கள்.குழந்தைகள் சிறு சிறு தவறுகள் செய்வது இயல்பே. அவர்கள் ஒன்றும் பிறப்பதற்கு முன்பே இந்த உலகத்தில் வாழ்வதற்கான விதி முறைகளையும் சட்டங்களையும் கற்றுக் கொண்டு வருவதில்லை. ஏன் முதுமை அடைந்தவர்களும் இத்தனை கால வாழ்க்கை அனுபவத்திற்கு பிறகும் தவறுகள் செய்வது இயல்பே. ஆனால் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தவறு செய்வதை எண்ணிப் பொறுத்துக் கொள்ள முடியாமல் மனம் உடைகின்றனர்.

அவர்களைத் திருத்த அல்லது அவர்களது தவறுகளை எடுத்துச் சொல்ல முயலாமல் தங்களது அறியாமையால் குழந்தைகளை அதிகம் திட்டத் தொடங்கி விடுகின்றனர். இதனால் உற்சாகத்தோடு வளர வேண்டிய குழந்தைகள் பயத்துடன் வாழ மற்றும் வளரவும் தொடங்குகிறார்கள். பள்ளியில் ஆசிரியர்களுக்குப் பயந்து வீட்டில் பெற்றோர்களுக்குப் பயந்து தாங்கள் செய்வது சரியா அல்லது தவறா என்று தெரியாமல்,அறியாமையிலேயே பிள்ளைகள் தங்களது குழந்தைப் பருவத்தைத் தவறாகக் கடக்கின்றனர்.

இத்தகைய சூழல் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.முக்கியமாகப் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் சென்று விடுதல், வீட்டில் தாத்தா, பாட்டி அல்லது வேறு உறவினர்கள் அவர்களுடன் துணையாக இருந்து விளையாடி நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க இயலாத நிலை,அடுக்கு மாடி குடியிருப்பு வாழ்வு முறையில் வாசல் கதவிற்கு வெளியே எட்டிப் பார்ப்பதும் குற்றம் என்ற சூழலில் வளருதல் என்பன எல்லாம் ஆகும்.ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளைத் திட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தெரிந்து கொண்டால், நீங்கள் மாறுவதோடு, நேர்மறை சக்திகளையும் எண்ணங்களையும் உங்கள் குடும்பத்தில் ஏற்படுத்த முனைந்து ,உங்கள் குழந்தைகளையும் தன்னம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் வளர்க்கும் சூழலை ஏற்படுத்துவீர்கள்.

உங்கள் குழந்தையை நீங்கள் தொடர்ந்து திட்டிக் கொண்டே இருக்கும்போது அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அதிகம் வருத்தம் கொண்ட மனதோடு இருப்பதால் அவர்கள் எப்போதும் சோர்ந்தே காணப்படுவார்கள். இது அவர்களது வளர்ச்சியையும், வயதிற்கு ஏற்ற அறிவையும் பாதிக்கும். மன உளைச்சலே பல கடுமையான நோய்களுக்கும் முதல் படி என்பதை தயவு செய்து நினைவு கூறுங்கள்.எதிர்காலத்தில் இது தற்கொலை எண்ணத்தைக் கூடத் தூண்டிவிடும்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker