தாய்மை-குழந்தை பராமரிப்பு

குழந்தைகளும்.. உடல் பருமனும்..

இந்தியாவில் ஒரு கோடியே 44 லட்சம் குழந்தைகள் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் உடல் பருமன் கொண்ட குழந்தைகள் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தொழில் நுட்ப வளர்ச்சியும் குழந்தைகளின் உடல் பருமனுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. ‘‘பெரும்பாலான குழந்தைகள் வீடியோ கேம்ஸ், கணினி, செல்போன், லேப்டாப் போன்றவற்றுள் ஏதாவது ஒன்றை தினமும் சராசரியாக 5 முதல் 6 மணி நேரம் வரை உபயோகப்படுத்துகிறார்கள். இது பரிந்துரைக்கப்பட்ட நேரத்தை விட ஐந்து மடங்கு அதிகமானதாகும். அத்தகைய காட்சி ஊடகங்கள் வழியாக செலவிடும் ஒவ்வொரு மணி நேரத்திலும் குழந்தைகளின் உடல் பருமன் 2 சதவீதம் வரை அதிகரிக்கிறது’’ என்கிறார் குழந்தை நல ஆலோசகர் டாக்டர் வைஷாகி.மேலும் அவர் கூறுகையில், ‘‘உடல் இயக்க செயல்பாடு இல்லாமை, தவறான உணவு பழக்கம் போன்றவை உடல் பருமனுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. உலக அளவில் கோடிக்கணக்கான குழந்தைகளும், நடுத்தர வயதினரும் உடல் பருமன் தொடர்பான பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். உடல் எடை அதிகமாக இருப்பது பல்வேறு நோய் பாதிப்புகளுக்கும் அடித்தளமிடுகிறது. குறிப்பாக நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சினைகள், மூட்டு வலி, கருப்பை பாதிப்பு, புற்றுநோய், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடுகிறது’’ என்கிறார்.

குழந்தைகள் உடல் பருமன் பாதிப்புக்கு ஆளாகாமல் இருப்பதற்கு சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

குழந்தைகள் ஒரே நேரத்திலோ, ஒரே நாளிலோ அதிக அளவில் இனிப்பு பலகாரங்களை சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதிக அளவில் சர்க்கரை சாப்பிடுவது உடல் பருமனுக்கு முக்கிய காரணம். அதனால் குறைவான அளவே இனிப்பு வகைகளை சாப்பிடுவதற்கு அனுமதிக்க வேண்டும். குழந்தையின் வயதுக்கேற்பவும் சாப்பிடும் அளவை நிர்ணயிக்க வேண்டும்.

உணவில் அதிக காய்கறிகளையும், பழங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவற்றை தவிர்க்க நினைக்கும் குழந்தைகளுக்கு உணவுடன் சேர்த்து ஊட்டிவிட வேண்டும்.

உணவு உட்கொள்ளும்போது வேறு எந்தவிதமான கவனச்சிதறலுக்கும் இடம் கொடுக்கக்கூடாது. முக்கியமாக வீடியோ கேம், செல்போன் பார்த்தபடி சாப்பிடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.

குழந்தைகள் எந்தெந்த உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்களோ அவற்றை வீட்டிலேயே தயார் செய்து கொடுத்து சாப்பிட வைக்க வேண்டும்.

கணினி, வீடியோ கேம்ஸ், செல்போன் போன்றவற்றில் நேரத்தை செலவிடுவதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். வெளியே சென்று விளையாடுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.

குழந்தைகள் தினமும் போதுமான நேரம் தூங்குகிறதா? என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker