எடிட்டர் சாய்ஸ்

நேர்மையே முன்னேற்றத்திற்கு வழி

இன்று ஒழுக்கம், நேர்மை இவற்றைக் காணுவது என்பது அரிதாகவே உள்ளது. ஒழுக்கம், நேர்மை உடையவர்கள் பரிதாபத்திற்குரியவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறுவதில்லை. மாறாக வெறுத்து ஒதுக்கப்படுகிறார்கள். பணம் கொடுத்தால் பொய் சாட்சி சொல்வது, பிறர் சொத்தை அபகரிக்க நினைப்பது, ஒரு பொய்யையே பலமுறை சொல்லி அதை உண்மையாக்குவது, சுயநலத்தோடு வாழ்வது போன்றவை நல்ல சமுதாயத்திற்கு அடையாளமல்ல. தீய செயல்கள் செய்பவர்களிடையே இருக்கும் ஒற்றுமை நேர்மையானவர்களிடம் காணப்படுவதில்லை.காரணம் நேர்மையானவர்கள் சிலராகி, நேர்மையற்றவர்கள் பலராகி விட்டதுதான். இத்தகையவர்களுக்குத்தான் சமுதாயத்தில் பயம் கலந்த மரியாதை கொடுக்கப்படுகிறது. இதனால், நேர்மையான எண்ணம் கொண்டவர்கள் பயந்து விலகி விடுகிறார்கள். நல்லவர்கள் தீமையை எதிர்த்து சண்டையிடுவது அரிது. ஏனெனில் அதனால் வெற்றியைவிட அவர்களுக்கு அவமானம் தான் மிஞ்சும். நேர்மையாக இருப்பவர்களுக்கே நெருக்கடி, அச்சுறுத்தல் கொடுக்கப்படுகிறது. நேர்மை உறங்கும்போது அநியாயம் விழித்தெழும் என்பது தான் காலம் காட்டும் உண்மை.

பெற்றோர்களிடம் நேர்மை இருந்தால் தான் பிள்ளைகளிடமும் நேர்மை இருக்கும். முன்னேற வேண்டும் என்ற விருப்பம் உடையவர் முதலில் நேர்மையானவராக இருக்க வேண்டும். பிறர் பொருளின் மீது ஆசை கொள்ளாதவராக இருக்க வேண்டும். நேர்மையற்றவர்களின் உள்ளம் எதிர்காலத்தையே அழித்து விடும்.

பணம் இல்லாதவனுக்கு பணம் சம்பாதிப்பதுதான் வெற்றி. ஆனால் பணம் இருந்தும் அதை அனுபவிக்க முடியாமல் நோயால் அவதிபடுபவருக்கு அதிலிருந்து மீண்டு, ஆரோக்கியமாக வாழ்வதுதான் வெற்றி. இப்படி ஒவ்வொருவருக்கும் வெற்றி என்பது அவர்களிடம் இல்லாத ஒன்றை தேடி ஓடுவதே என்றாகி விடுகிறது. ஆனால் எல்லோருக்கும் பொதுவான ஒரு வெற்றி இருக்கிறது.

அது வாழ்க்கையில் நிறைவாக வாழ்வது, அடுத்தவருக்கு வழிகாட்டியாய் இருப்பது, பிற உயிர்களை மதிப்பது அவற்றுக்கு துன்பம் தராமல் இருப்பது, ஆக மொத்தம் சந்தோஷமாக வாழ்வதற்கும், வெற்றிகரமான வாழ்க்கை இருப்பதற்கும் நேர்மை அவசியம். நேர்மையாக வாழ நம்மை தயார்படுத்தி கொள்வது அவசியம். உடலும், மனதும் தூய்மையாக இருப்பின் நாம் நினைக்கின்ற எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் வலிமையும், வழியும் தானாக பிறக்கும்.சிலர் தனியாக தொழில் செய்து அது நஷ்டமடையும்போது, தன்னைத்தானே நொந்துகொள்வார்கள். நமக்கு நேரம் சரியில்லை, எல்லாம் என் தலைவிதி, எனக்கு எதுவும் சரியாக அமையாது என்று புலம்புவார்கள். இப்படி புலம்புவது எந்த வகையிலும் சரியாகாது. இது மனதிற்கு இன்னும் சோர்வையே ஏற்படுத்தும். இன்னொருமுறை முயற்சிக்கும் எண்ணத்திற்கும் தடையாக இருக்கும். எனவே தோல்வி ஏற்படும்போது, அதை இயல்பாக எடுத்துக்கொள்ள பழக வேண்டும் மன கஷ்டங்கள் இருந்தாலும் மனதிற்குள் நல்ல எண்ணங்களாகவே நினைக்க வேண்டும்.

நேர்மையாக இருக்க வேண்டும். நம் எண்ணங்களுக்கு நம்மைவிட அதிக பலம் இருக்கிறது. இது ஏதோ ஊக்கப்படுத்தும் தத்துவம் என்று நினைக்காதீர்கள், இது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. நாம் சரியாக இருந்தாலும் சூழ்நிலை நமக்கு எப்போதும் சாதகமாக அமைவதில்லை. நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மிடம் பேசும்போது அவர்களது சொந்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறேன் பேர்வழி என்று தேவை இல்லாத பயத்தை நம் மனதில் ஏற்படுத்தி விடுவார்கள். அதை புரிந்துகொண்டு எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும்.

நேர்மையாக வாழ்வதில் சிரமம் இருக்கதான் செய்யும். இருப்பினும் மனதில் துணிவுடன் இருந்தால் நேர்மையாக வாழ்ந்து முன்னேற்றத்திற்கு வழி காணலாம்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker